Monday, September 23, 2019

‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்


 ‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

விலை : 100/-
சமரன்
9095365292


முன்னுரை


‘திராவிட’ நீதிக் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (1916-1946) (The Rise and Fall of the Dravidian Justice Party 1916-1946) எனும் நூலை அதன் ஆசிரியர் ஜே.பி.பி.மோரே அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார். இச்சிறு நூல் நீதிக் கட்சியின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய விசுவாசம் பற்றி பேசுவதாலும், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த பொழுது, ஆந்திரம், கன்னடம், மலையாளம் போன்ற மொழி வழி மாநில கோரிக்கைகள் எழுந்த அளவிற்கு, தமிழ் மொழி வழி மாநில கோரிக்கைகள் எழாமல் போனதற்கு, திராவிடம் என்ற கருத்தியல் தடையாக இருந்தது என்ற சரியான விடயத்தை முன்வைப்பதாலும் இந்நூலை சமரன் பதிப்பகம் வெளியிடுகிறது.  நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவினை திராவிட கட்சிகள் கொண்டாடிகொண்டிருக்கும் இவ்வாண்டில், நீதி கட்சியின் உண்மை சொரூபத்தை ஆதாரப்பூர்வமாக நிறுவும் இந்நூலை வெளியிடுவது பொருத்தமானதாகும்.

இந்நூலில் ஆரியம், திராவிடம் என்ற கருத்தியல்கள் ஐரோப்பிய பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது என்று சரியாக கூறும் ஆசிரியர், ஆரிய-திராவிட இனவியல் தத்துவத்தை வெறும் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையாக குறுக்குகிறார். இந்த நூலை எழுதுவதற்கான நோக்கமாக அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“மேலும் அறிஞர்கள்-அறிஞர்கள் அல்லாதவர்களிடையில் கி.பி. 1916இல் ஆரம்பிக்கப்பட்ட பிராமணர் அல்லாதார் இயக்கம் ஒரு முழுமையான திராவிட இயக்கம் என்கிற நோக்கம் நிலவி வருகிறது. இதனால் என்னுடைய இந்த நூலில் இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என ஆராய்ந்துள்ளேன். கி.பி. 1916 முதல் 1946 வரை செயல்பட்ட பிராமணர் அல்லாதார் இயக்கம், திராவிட இயக்கமாக செயல்பட்டதா செயல்படவில்லையா என்பது பற்றியும் விளக்கியுள்ளேன். அதே சமயத்தில் இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ் உணர்வு ஏன் பலப்படவில்லை? தனித் தமிழ் மாநில கோரிக்கை ஏன் எழுப்பப்படவில்லை? என்பவை குறித்தும் ஆராய்ந்துள்ளேன். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் இந்தியாவில் உருவான ‘திராவிடர்’ மற்றும் ‘ஆரியர்’ என்ற சொற்களின் வரலாற்றுப் பின்னணியையும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட ஒரு சில சம்பவங்களையும் உற்றுநோக்குவோம்” என்று கூறுகிறார்.