Thursday, April 19, 2012

ஆற்று நீர் பகிர்தல் - மார்க்சிய லெனினிய பார்வை 1

தன்னுரிமையற்ற இந்திய அரசில்
காவிரிச் சிக்கல்
தமிழரின் தேசிய இனச் சிக்கல்
விவசாயிகள் சிக்கல்
தமிழினத்திற்குத் தன்னுரிமை
தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர்
உழுபவனுக்கு நிலம்
வழங்கும் ஜனநாயத் திட்டத்திற்காகப் போராடுவோம்

வான்பொய்ப்பினும் தான்பொய்யா
                 மலைத்தலைய கடல்காவிரி

என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பட்டினப்பாலையில் காவிரி ஆறு தமிழ்நாட்டில் ஓடிக் கலக்கும் பெருமை சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. இப்போது நிலைமை என்ன? 1974க்குப் பிறகு தமிழ்நாட்டுக் காவிரி நீர் வருமா, எப்பொழுது வரும், எவ்வளவு வரும் என்ற கவலைகளில் தமிழகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமன்றி, ஓர் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உடைமைகள் பிடுங்கப்பட்டு, கற்பழிப்பு உட்பட பல கொடுமைகளைச் சுமந்துகொண்டு, உயிருக்கு அஞ்சிய நிலையில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். தமிழகக் காவிரி பாயும் சாகுபடி நிலப்பரப்பில் உள்ள விவசாயிகளும் தமிழக மக்களும் கடந்த பத்து ஆண்டுகளாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் கர்நாடகத்தில் வாழ்க்கை நடத்திய தமிழர் பரம்பரையினர் இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். என்ன இது, காவிரியில் தண்ணீர் வருமென்று எண்ணியதற்கு மாறாறகத் தமிழர்கள் அகதிகளாக’’ வந்து கொண்டிருக்கின்றனர்?
                இன்றைய கர்நாடக மாநிலத்தில் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி மொத்தம் 880 ச.கிலோ மீட்டர் பயணம் செய்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கிறது. இதில் 360 ச.கிலோமீட்டர் கர்நாடகத்திலும், 490 ச.கிலோ மீட்டர் தூரம் தமிழகத்திலும் எஞ்சிய தூரம் கேரளாவிலும் புதுவையிலும் பாய்கிறது. 1956இன் மாநில எல்லை வரையறைக்கு முன்னரும் 1947க்கு முன்னரும் குடகு மாவட்டம் சென்னை மாகாணத்திலும் குடகுக்கு அடுத்துக் காவிரி பாயும் சில பிரதேசங்கள் மைசூர் மன்னராட்சிப் பகுதியிலும் இருந்தன. இந்நிலையில் மைசூருக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே இரண்டு முறை காவிரிநீர்ப் பங்கீடு குறித்து ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.
ஒப்பந்தங்களின் வரலாறு:
                மைசூர் அரசு தன் பாசன வசதியைப் பெருக்கக் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயன்றதைத் தொடர்ந்து 1892இல் முதல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நேரத்தில் மைசூர் மன்னராட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இராணுவ அரசின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1892இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியின் குறுக்கே மைசூர் அணை கட்ட வேண்டுமானால் சென்னை மாகாணம் ஏகாதிபத்திய அரசிடம் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் சென்னை மாகாணப் பாசனப் பரப்பளவுக்குப் பாதிப்பு ஏற்படுமெனச் சென்னை அரசு கருதினால் புதிய அணை கட்ட மைசூருக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. இந்த ஒப்பந்தத்தை மைசூர் அரசு 1911இல் மீறத் தொடங்கியது. தன் பாசனப் பரப்பைப் பெருக்க மைசூர் 1911இல் கண்ணம்பாடியில் அணைகட்ட முயன்றபொழுது முதலில் அதை மறுத்த சென்னை மாகாண அரசு, பின்னர் தன் கட்டுப்பாட்டில் இருந்த கோலார் தங்கச் சுரங்கத்துக்கு மைசூர் அரசு மின்சாரம் வழங்கும் நிபந்தனையுடன் அணைகட்ட ஒப்புக் கொண்டது. எனினும் இந்த அணையில் தேக்கிவைக்க அனுமதிக்கப்பட்ட 41டி.எம்.சி. நீரின் அளவைவிட அதிகமாகத் தேக்கிவைக்க மைசூர் அரசு முயன்றதால் சென்னை அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் பின்னர் பிரிட்டீஷ் இந்திய அரசிடமும் முறையிட்டது. இரண்டு இடங்களிலும் மைசூரின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கவும் சென்னை அரசு இலண்டனில் மேல் முறையீடு செய்தது. இன்னொரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என இலண்டன் தீர்ப்பளித்ததை ஒட்டி 1924ஆம் ஆண்டு இரண்டாம் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1.     1924க்கு முன்வரை மைசூரிலும் சென்னை மாகாணத்திலும் இருந்த காவிரிப் பாசனப்பரப்புக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் முதல் தண்ணீர் விட வேண்டும். அதாவது மைசூர் பகுதியில் இருந்த சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலத்துக்கும் சென்னை மாநில காவிரி பாசனப் பகுதிக்கும் இவ்வாறு ‘முதல் தண்ணீர் விடவேண்டும்.
2.     புதிதாகப் பாசப்பகுதிகளை விரிவுபடுத்த இரண்டு அரசுகளுமே விரும்பினால் அதற்கு இந்த ஒப்பந்தம் உத்திரவாத தருகிறது சென்னை மாகாண அரசு மேட்டூரில் அணை கட்டுவதன் மூலம் 93.47 டி.எம்.சி. நீரைத் தேக்கி 3,10,000 ஏக்கர்களுக்குப் புதிய பாசன வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதேபோன்று மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகரத்தில் 45 டி.எம்.சி.நீரைத் தேக்கி 1,25,000 ஏக்கர்களுக்கும் காவிரியின் துணை நதிகளில் 54 டி.எம்.சி. நீரைத் தேக்கி 1,10,000 ஏக்கர்களுக்கும் புதிய பாசன வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
3.     இவை தவிரச் சென்னை மாகாண அரசு காவிரியின் துணை நதிகளான பவானி, நொய்யல், அமராவதி ஆகியவற்றினல் அணைகள் கட்ட விரும்பினால் அவற்றில் மொத்த நீர்க் கொள்ளளவில் 60 சதவீதம் அளவுக்கு மைசூர் அரசும் தன் பகுதியில் நீரைத்தேக்க அணைகள் கட்டிக்கொள்ளலாம்.
4.    மைசூர் அரசு அணைகட்டும் விவரங்களைச் சென்னை மாகாண அரசுக்குத் தரவேண்டும்.
5.     இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவும் இரண்டு அரசுகளும் ஒப்புக்கொண்டன.
1924 ஒப்பந்தத்தின் அணுகுமுறை இங்கு நன்கு கவனிக்கத்தக்கது. இது ஏகாதிபத்தியக் காலத்தில் ஏகாதிபத்திய நேரடி ஆட்சி அதிகாரத்துக்கும் மறைமுக ஆட்சி அதிகாரத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தமெனினும் இதன் அணுகுமுறை அன்றைய உற்பத்திக்கு உத்திரவாதம் அளித்தது. அதாவது 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் கீழ்க்காணும் அணுகுமுறைகளைக் கொண்டிருந்தது.
«      அதுவரை இரண்டு பகுதிகளிலும் இருந்த பாசன நில அளவுக்கு அதாவது உற்பத்திச் சாதன அளவுக்கு உரிய நீர்ப்பாசனத்துக்கு முதன்மை உத்தரவாதம்.
«      சென்னைக்கு 93.5 டி.எம்.சி.யும் 3,10,000 ஏக்கரும் மைசூருக்கு 90 டி.எம்.சி.யும் 2,35,000 ஏக்கரும் புதிய பாசன வசதி பெருகுதல். அதாவது புதிய நீருக்கும் புதிய          நிலத்துக்கும் உச்சவரம்பு.
«      இவை தவிரச் சென்னைப்பகுதியில் நீரைத்தேக்க விரும்பினால் இதன் அளவில் 60 சதவீதம் மைசூரும் தேக்கிக் கொள்ளலாம். சென்னையின் வடிநிலப்பகுதியையும் சமவெளிப்பகுதியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளல்.
«      மைசூர் காவிரியின் தலைப்பகுதியாக இருப்பதால் அது கட்டும் அணைகள் பற்றிய விவரத்தைத் தெரிந்து கொள்ளும் உரிமையைச் சென்னை பெறுதல்.
இந்த ஒப்பந்த்தின் மேற்கண்ட அணுகுமுறை அம்சங்கள் கவனிக்கத்தக்கன. இந்த ஒப்பந்தம் நியாயமற்றது எனக் கர்நாடக அரசு குறிப்பிடும் வாதத்தை ஒப்புக்கொள்ள இயலாது.
                இது அன்றைய கால உற்பத்திச் சாதன அளவுக்குத் தேவைப்படும் நீர்ப்பாசன உத்தரவாதத்தையும் புதிய உற்பத்திச் சாதன, நீர்ப்பாசன அளவுப் பெருக்கத்தையும் உறுதிப்படுத்துகின்றது. ஆனால் அன்றைய உற்பத்திச் சாதன அளவில் இரண்டு அரசுப் பகுதிகளிலும் பலத்த சமனற்ற தன்மை இருந்தது. வரலாற்று ரீதியிலும், புவியியல் ரீதியிலும் கர்நாடகப் பகுதியைவிடச் சென்னைப் பகுதியில் சமவெளி அதிகமாகவும் காவிரிப் பாசனப் பகுதி மிகவும் அதிகமாவும் இருந்தன. அன்றைய நிலைமையிலேயே திருச்சி, தஞ்சைக் காவிரிப்பாசனப்பகுதி சுமார் 10 லட்சம் ஏக்கர் இருந்தது. இது தவிரக் காவிரியின் உற்பத்தி இடமான குடகுமலை, சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் 1924இல் மைசூரில் காவிரிப்பாசனப் பரப்பு 1 லட்சம் ஏக்கர் என்ற அளவில் மட்டுமே இருந்தது. இத்தகைய பலத்த சமனற்ற தன்மையை அங்கீகரிப்பதைத் தவிர 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு வேறு வழியில்லை. இந்த ஒப்பந்த்தத்தின் அடிப்படையில் சென்னை மாகாணப் பகுதிக்கு ஆண்டுக்குச் சராசாரியாக 380 டி.எம்.சி. அளவு காவிரி நீர்வரத்து 1972 வரை தொடர்ந்தது.
ஒப்பந்த மீறல்கள்
                1956இல் கர்நாடக மாநிலம் அமைக்கப்பட்டபொழுது காவிரியின் உற்பத்தி இடம் அதோடு இணைக்கப்பட்டது. கர்நாடகக் காவிரிப்பகுதியின் பரப்பளவு பெருத்தது. சென்னை மாகாணத்தின் கன்னடம் பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டதன் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டது. அதோடு கேரள மாநிலமும் காவிரிப் பாசனப் பகுதியில் மிகக்குறைந்த இடத்தை வகித்தது.
                1956ஆம் ஆண்டு மாநிலங்கள் புனரமைக்கப்பட்ட பொழுது மாநிலங்களுக்கு இமையில் பாயும் நதிநீர் குறித்து ஒரு சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம், ஏகாதிபத்தியக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த கர்நாடக அரசு 1968 முதல் ஒப்பந்தத்தின் சில அம்சங்களைச் சிறிது சிறிதாக மீறிக்கொண்டே வந்தது.
                1968 முதல் இது நிகழ்ந்தது. தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் திறந்துவிட வேண்டிய நீரோட்டத்தைத் தடுத்து, கர்நாடக அணைக்கட்டுப் பகுதிகளிர் நீர் முழு அளவு நிரம்பிய பின்னர், அதிகமாகச் சேரும் நீரைத் திறந்துவிட்டுக் கொண்டே வந்தது. அப்போது தி.மு.க. தமிழகத்தில் பதவியில் இருந்தது. இந்திராகாந்தி பிரதமராகவும் தேவராஜ் அர்ஸ் கர்நாடக முதல்வராகவும் இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெறாமலும் மத்திய அரசின் இசைவைக் கேராமலும் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன. காவிரியில் கிருஷ்ணராசசாகருக்கு மேற்கே ஹேரங்கி, ஹேமாவதி, இலக்குமண தீர்த்தம் ஆகிய துணை நதிகளிலும் கிழக்கே கபினி, சுவர்ணவதி ஆகிய துணை நதிகளிலும் கர்நாடக அரசு அணைகளைக் கட்டியது.
                1968 முதற்கொண்டே ஒப்பந்தத்தின் சில அம்சங்களை மீறத் தொடங்கிய கர்நாடக அரசு 1924 ஒப்பந்தத்தின் பின் 50 ஆண்டு முடிந்த பிறகு அந்த ஒப்பந்தமே காலாவதியாகிப் போயிற்று எனக் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் அணைகளைக் கட்டியது. இதனால் காவிரியின் தமிழ்நாட்டுப்பங்கு மிக மிகத் தேய்ந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளிலான விபரத்தைக் காணலாம். 1974-1984 ஆகிய பத்தாண்டுக் காலங்களில் ஆண்டுச் சராசரியாக 305 டி. எம்.சி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் 1984-1990 ஆகிய ஆறு ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 181.3 டி.எம்.சி. மட்டுமே வழிந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நிரம்பி வழிகிற நீரை மட்டுமே பெற்றுக் கர்நாடகக் காவிரியின் சாக்கடைப் பகுதி’’யாகத் தமிழகக் காவிரிப் பகுதி இழிந்துபோய்விட்டது என்பதை வெட்கமில்லாமல் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
இதனால் என்ன இழிவு?
                1974 முதற்கொண்டே தொடர்ந்து காவிரயில் போதுமான நீர் வராததன் காரணமாக என்ன ஏற்பட்டுவிட்டது?.
                தமிழகத்தின் விளை நிலப்பரப்பில் 35 சதவீதத்தைக் கொண்ட காவிரிப்பாசனப்பகுதி இன்றைக்கு வறட்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. 1974 வரை காவிரிப் பாசனப்பகுதி ஏறத்தாழ 21 1/2லட்சம் ஏக்கராக இருந்தது. அது இப்போது குறைந்து 16 லட்சம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது; எஞ்சிய பகுதி விளைநிலமாக இப்போது இல்லை. குறிப்பாகச் சோறுடைத்த சோழநாடு என முன்பு பெருமை கொண்டிருந்த திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களின் கதி என்ன ஆனது?
மொத்தச் சாகுபடி நிலம் (ஏக்கரில்)
மாவட்டம்
1972
1980
1984
1989
தஞ்சாவூர்
16,40,000
15,34,697
12,59,966
9,97,470
திருச்சி
5,87,500
4,62,692
3,85,772
2,43,490
இதே நிலை இன்னும் பத்தாண்டுகள் நீடிக்குமாயின், வறட்சியைக் காண இராமநாதபுரம் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டியதே இல்லை; திருச்சியிலும்; தஞ்சையிலுமே அதைக் காணலாம். இப்போது இந்த மாவட்டங்களில் முப்போகம் என்பதெல்லாம் பழங்கனவாய் போய், இருபோகம் என்பது கூட அகராதி வார்த்தையாகி ஒருபோகத்துக்கே திண்டாடித் தெருவில் வந்து நிற்கவேண்டிய இழிநிலை ஏற்பட்டுவிட்டது. வரப்பில் கூடப் பயிர் விளைவித்த வயல்வெளிகளின் மத்தியிலே இன்றைக்குக் கால்நடைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. மேலும் தமிழகத்துக்கு அவ்வப்பொழுதுவரம்போலத் தண்ணீர் திறந்துவிட்டுக் கொண்டிருப்பதால், பழைய டெல்டா பகுதிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுப் புதிய பாசனப்பகுதிகளுக்கு நீர் விடப்படுவது இல்லை. உதாரணமாகக் காவிரி மேட்டூர் திட்டக்கால்வாய் அதாவது புதாற்றுத் திட்டம் (3 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர்), குள்ளம்பாடி கால்வாய் (25 ஆயிரம் ஏக்கர்), புதிய கட்டளைக் கால்வாய் (20 ஆயிரம் ஏக்கர்) ஆகியவற்றிற்குப் பல ஆண்டுகளாக நீர் வரத்தது போதுமான அளவு இல்லை. தமிழகத்தில் கால்வாய்ப்பாசனமே அதிகமாகும். இதில் 85 சதவீதப் பங்கைக் காவிரிப்பாசனப் பகுதிகளே நிரப்பிக் கொண்டிருக்கும் சூழலில் காவிரியில் போதிய நீர் இல்லை; கால்வாயிலும் நீரில்லை; இதனால் கழனிகளும் சுருங்கின. இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ரூ.50 லட்சம் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவதோடு, உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.
                இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பாசனப்பரப்பளவு குறைந்துவிட்டாலும் நெல் விளைச்சல் குறையவில்லை. உரம், பூச்சிமருந்து, வீரியவிதை ஆகியவற்றைப் பயன்படுத்தியதன் மூலம் ஏக்கருக்குச் சராசரி உற்பத்தித்திறன் அதிகமாகியுள்ளது. இதையொட்டி உற்பத்திப்பொருளின் அடக்க விலையும் உயர்ந்துவிட்டது.


தஞ்சை மாவட்டம்

திருச்சி மாவட்டம்

விவரம்
1972
1982
1972
1982
பாசனப்பகுதி
(ஏக்கரில்)
16,40,000
15,34,697
5,87,500
4,05,000
உற்பத்தி
(ஆயிரம் டன்கள்)
1,342
1,505
472
345
உற்பத்தித்திறன்
(ஹெக்டேருக்கு)
(கிலோ கிராம்)
2,046

2,416

2,009

2,135

                இரண்டு மாட்டங்களிலும் பாசனப்பகுதி ஏறத்தாழ 20 சதவீதம் குறைந்துபோனாலும் குறிப்பிட்ட பத்தாண்டுகளின் (1972-1982) உற்பத்தித்திறன் கூடியுள்ளதால் மொத்த உற்பத்தி அதே அளவுக்கு (இன்னும் சற்று அதிகமான அளவுக்குக்கூட) உள்ளது எனலாம். அதாவது பத்தாண்டுகளில் 11 சதவீத உற்பத்தித்திறன் கூடியுள்ளது. காவிரியின் பாசனப் பரப்பு குறையாமல் இருந்திருக்குமேயானால், இத்தகைய அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறனால் அதிகமாகவே விளைவித்திருக்க முடியும். இந்த வாய்ப்பு தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டடுவிட்டது. அதே நேரத்தில் விளை பொருளின் விலையும் உயர்ந்துவிட்டது. இந்த நிலையே இன்றுவரை நீடித்துக்கொண்டு இருப்பதால் சாகுபடிப் பரப்பளவு சுருங்கிக்கொண்டே போய், நெல் விளைச்சலில் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆந்திரத்திடமும் மத்திய அரசிடமும் கையேந்தி நிற்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இங்கு ஒருவிதமான விவசாயநிலக் குறைப்புப் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
                இதோடு மட்டுமல்ல 50 லட்சம் விவசாயிகள் நேரடியாகவே பாதிக்கப்பட்டு உள்ளனர். சிறு விவசாயிகள், நிலத்தை மட்டுமே இனிமேல் நம்பிப் பயனில்லை என உணர்ந்து நகர்ப்புறங்களுக்குச் சிறிதுசிறிதாக நகர்ந்து வந்து சிறுசிறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கூலி விவசாயிகளுக்கு எவ்விதமான முறையான, தொடர்ச்சியான விவசாய வேலையும் இல்லையாதலால் நகரங்களில் ஏற்கனவே நெரிசலாகவுள்ள உதிரித் தொழிலாளர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளனர். இராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து காவிரிப்பகுதிக்கு விவசாய வேலைக்கென அந்தந்த நேரங்களில் வரும் கூலி உழைப்பாளிகளுக்குக் கடந்த பல ஆண்டுகளில் எவ்விதப் பணியும் இல்லாததால் தத்தம் இடங்களிலேயே கிடந்து உழன்று கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் நில அடமானம், நில விற்பனை ஆகியவை அதிகமாகிக் கொண்டிருப்பதோடு, காவிரி சிறுவிவசாயிகள் கடன்சூழலில் அதிகமாகச் சிக்கியிருக்கின்றனர் என்பதையும் அறியலாம். இப்படிக் காவிரியின் நலன்களும் அதையொட்டிய தமிழக நலன்களும் கணிசமாக வற்றடிக்கப்பட்டுள்ளன எனலாம்.
                விவசாய நிலக்குறைப்பு, நீர்பாசனப் பரப்புக் குறைப்பு, விளைபொருள் விலை ஏற்றம், சிறு விவசாயிகளின் நகர்ப்புற இடமாற்றம், கடன்சுமை, நிலவிற்பனை, நில அடமானம் ஆகியவற்றின் அதிகரிப்பு, கூலி விவசாயிகள் நகர்ப்புற மற்றும் அமைப்பற்ற தொழிலாளர்களாக உருமாறும் போக்கு அதிகரிப்பு, வேறு இடங்களில் உள்ள கூலி உழைப்பாளிகளின் இடப்பெயர்ப்பு இன்மை என இப்படிப் பொருளாதாரச் சாட்டையடிகள் தமிழகத்தின்மீது தொடர்ந்து விழுந்து கொண்டேயிருக்கின்றன.
                இத்தகைய இழிநிலைக்குக் காரணமான சக்திகள் யாவை? இதைப் போக்குவதற்குரிய முயற்சிகள் யாவை?
இழி நிலையின் காரணச் சக்திகள்
                தமிழகத்தின் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி எடுத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமன்றி இன்றைக்குக் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டுச் சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் தங்கும் சோகத்துக்கு எவை காரணச் சக்திகள்?
-          மத்திய அரசாங்கம்
-          கர்நாடக அரசாங்கம்
-          தமிழ்நாடு அரசாங்கம்
-          இவற்றுக்குப் பின் உள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் தந்திரம் மற்றும் சுயச்சார்பற்ற தன்மை
-          அரசியல்வாதிகளின் தேர்தல் சந்தர்ப்பவாதத் தன்மை
இத்தகைய அரசியல்வாதிகள் மற்றும் ஆளும் வர்க்கம் ஆகியோரின் போக்குகளினால் இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளது. 1967 வரை தமிழகத்தை ஆண்ட கட்சியும் அதன் பின்னர் ஏதாவது ஒரு திராவிட இயக்கக் கட்சியின் மீது குதிரை ஏறிக்கொண்டிருக்கும் கட்சியுமான தேசியப்பார்வைகொண்ட காங்கிரசுக் கட்சி, தமிழ்த் தேசிய இனத்தின் பெருமையயைச் சொல்லி ஆட்சியைச் பிடித்து 1967 முதல் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகள் ஆகியவற்றை இத்தகைய இழிநிலைக்குப் பொறுப்பான சக்திகள் என்று கூறவேண்டும். ஏதாவது ஒன்றைச் சொல்லிப் பதவிக்கு வருவது, பதவிக்கு வந்த பின்னர் தொடர்ந்து பதவியில் இருக்க எதையாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருப்பது என்கிற சமூகப் பொறுப்பற்ற போக்கும் எதைச் செய்தேனும் பதவியில் இருக்க வேண்டுமென்ற அரசியல் பிழைப்புவாதப் போக்கும் இத்தகைய அரசியல்வாதிகளிடம் மண்டிக்கிடந்து மலம் போல நாறிக்கொண்டிருக்கிறது.
                இரண்டு நாடுகளுக்கு இடையிலான நதிநீரைப் பங்கீட்டுக் கொள்வதற்குச் சர்வதேச சட்டம் இருக்கிறது. அதில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் இரண்டு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றன.
                இங்கே கர்நாடகமும் தமிழ்நாடும் ஒரே நாட்டின் இரண்டு மாநிலங்கள்; இங்கே வலுவான, மையப்பட்ட மத்திய அரசாங்கம் இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிநீர்ப்பங்கீடு குறித்து 1956ஆம் ஆண்டில் ஒரு சட்டமும் இயற்றப்பட்டது. மேலும் 1967 வரை மத்தியிலும் இரு மாநிலங்களிலும் ஒரே கட்சி - காங்கிரசுக்கட்சி - அரசாங்கங்கள். அதன் பின்னரும் கூடத் தமிழகத்தில் ஆட்சி செய்த கருணாநிதி - எம்.ஜி.ஆர். அரசாங்கங்கள் தேர்தல் கூட்டுக்காகவும் பதவி நீட்டிப்புக்காகவும், மத்திய அரசின் கட்சிகளோடு நல்லுறவு கொண்டிருந்தன. இருப்பினும் காவிரிச் சிக்கல் தொடர்ந்து, இன்றுவரை தீர்ந்தபாடில்லை.
                சீரழிந்த அரசியல் பிழைப்புவாதத்தின் அன்னையான இந்திராகாந்தி பிரதமராகவும் தேவராஜ் அர்ஸ் கர்நாடக முதல்வராகவும் இருந்து காங்கிரசு அரசாங்காங்கள் நடத்திய காலத்தில் ஹேமாவதி, கபினி ஆகிய நதிகளின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளைக் கட்டத் தொடங்கின. இதைக் கருணாநிதி ஆட்சேபித்து மைய அரசுக்கு எடுத்துச் சொன்னாலும் இந்திரா பொருட்படுத்தவே இல்லை. காவிரிச் சிக்கலை நடுவர் மன்றத்துக்கு விடுமாறு 1970இல் தமிழக அரசு எழுதிய கடிதத்தையும் இந்திரா தூசாகவே மதித்தார். அதன் பின்னர் 1971இல் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்துத் தமிழக அரசு ஒரு வழக்கைத் தொடுத்தது. கருணாநிதியின் மருமகன் மாறனும் மன்னை நாராயணசாமியும் இணைந்து இன்னொரு வழக்கு தொடுத்தனர்.
                கருணாநிதி அப்போது இந்திராவிடம் தேர்தல் உறவு கொண்டிருந்த நேரம். இந்திராவின் கட்சிக்குள் நெருக்கடி, குடியரசுத்தலைவர் தேர்தல் என்றெல்லாம் இந்திராவுக்குக் கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த காலம். இந்த நேரத்தில் தி.மு.க.வின் 25 எம்பிக்களும் 135 சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க.வின் பலத்தினை உலகுக்கு நிரூபித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியின் பேர ஆற்றல் அதிகம். ஆம்! அது தமிழகத்தின் பேர ஆற்றலாகக் கருதப்பட்டிருந்தால் மொழிச்சிக்கல், காவிரிச் சிக்கல் போன்றவற்றில் சில நிபந்தனைகளைத் தி.மு.க. முன்வைத்திருக்கக் கூடும். மத்திய அரசின் நல்லுறவு இருந்தால்தான் தொடர்ந்து வளமாக ஆள முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட கருணாநிதி, இந்திராவுக்கும் தனக்கும் பொது எதிரியாக மாறிவிட்ட காமராசரை அப்புறப்படுத்த இந்திராவுடன் கருணாநிதி, இந்திராவுக்கும் தனக்கும் பொது எதிரியாக மாறிவிட்ட காமராசரை அப்புறப்படுத்த இந்திராவுடன் சோசலிசநோக்கிலான உறவு கொண்டார். இந்திரா, அரசியல் பிழைப்புவாதக் கண்ணோட்டத்தில் ஒரு தீர்க்கதரிசினியே. கருணாநிதியை எப்படி நிறைவுகொள்ளச் செய்ய முடியும் என அவருக்குத் தெரியும். சட்டமன்ற உறுப்பினர்களை இந்திரா பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் கர்நாடகம், கேரளா, தமிழ் நாடு முதல்வர்களை இந்திரா அழைத்துப்பேசிச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, தமிழக அரசு வழக்கைத் திரும்பப்பெறுமாறு கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார். கரிகால் பெருவளத்தான் என்றும் தமிழக முஜ்பூர் ரகுமான் என்றும் கட் அவுட்டுகளில் காணப்பட்டுச் சுயமகிழ்வு கொண்ட கருணாநிதி வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
      இனிமேல் தமிழகத்தில் தங்கள் கட்சி தனியாக நின்றால் பூரண வெற்றியடைய வாய்ப்பில்லை என முற்றாக உணர்ந்த இந்திரா இங்குள்ள திராவிட இயக்கத்தின் சமரசப் பார்வையையும் சஞ்சலப் புத்தியையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, பாராளுமன்றப் பெருபான்மை பெறவேண்டும் என முடிவு செய்தார். அதோடு மட்டுமன்றிக் கர்நாடகத்தில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால் கர்நாடக நலன்களைக் காப்பாற்றுவதில் இந்திரா காங்கிரசு முனைப்பாக இருக்கிறது என்று அங்கே ஒரு ‘இமேஜ் வேண்டும். எனவே கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடு தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு மத்தியில் மவுன நிலைப்பாடு என்ற போக்குகள் முகிழ்த்தன. கர்நாடகக் காங்கிரசு அரசு அங்கே அணைகள் கட்டிக் கொண்டிருக்கத் தமிழகக் காங்கிரசின் தலைவர் கருப்பையா மூப்பனார் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு இங்கே ஏக்கருக்கு ஒரு ரூபாய் என மிராசுகளிடம் பணம் வசூல் என்ன ஆயிற்றோ?
      இந்திரா வகுத்தளித்த பாதையிலேதான் ராஜீவ், நரசிம்மராவ் போன்ற பிரதமர்கள் நடந்து வருகின்றனர். அதாவது அனைத்து இந்தியக்கட்சி தனக்கென ஒரு இந்தியக்கொள்கை என்பதில்லாமல் அந்தந்த மாநிலங்களில் ஒரு கொள்கையைச் சொல்லி வருகின்றது. இதையே பாரதீயசனதாக் கட்சியும் கடைப்பிடிக்கிறது. காங்கிரசு வேறு, பி.ஜே.பி.வேறா....? இந்தியாவில் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும், எப்படியாவது தீர்த்துக்கட்டி இந்திய ஒற்றுமையைக் கட்டிக்காக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பி.ஜே.பி. கர்நாடகத்திலும் தமிழகத்திலும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுக்கின்றது. முரளிமனோகர் ஜோசியின் ஏக்தா யாத்ரா கர்நாடகத்தில் நுழைந்த நாளன்று அதற்குப் பரிசு கொடுப்பதைப் போலத் தமிழர்களை அடித்துத் துரத்திக் கன்னடத்தேசிய இன வெறியாளர்கள் செயல்பட்டனர். இதில் பல இடங்களில் பி,ஜே.பி., எம்.பி.களும், கட்சி அணியினரும் முனைப்பாக ஈடுபட்டிருந்ததைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அது குறித்து மெளனமாக இருந்துவிட்ட கபடதாரி ஜோசி காவிரிப்பிரச்சினையில் கர்நாடக பி.ஜே.பியும், தமிழக பி.ஜே.பி.யும் தனித்தனி நிலைப்பாடுகளை எடுத்துக் கொள்ளும் ஜனநாயக உரிமை உண்டு எனச் சொன்னார். எதைச் சொல்லி எங்கு வாக்குகள் சேகரிக்கலாம் என்ற விவஸ்தையைத் தேர்தல் கட்சிகளைத் தவிர வேறு யாரறிவார்?
                இந்திய ஒற்றுமையைக் கட்டிக் காப்பதில் பி.ஜே.பிக்குத் தாங்கள் என்ன சளைத்தவர்களா எனக் குறிப்பிடும் குறிப்பிடும் சி.பி.ஜ., சி.பி.எம் கட்சிகள் கூட இதில் சரியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுக்க இயலாமல் தவிக்கின்றன. நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்னர் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்பதில் தமிழ்நாடு சி.பி.எம். ஆதரவு நிலைப்பாடு எடுக்க கர்நாடக சி.பி.எம் எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்தது. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரிய தமிழக அனைத்துக்கட்சிகள் நடத்திய முழு அடைப்பில் தமிழக சி.பி.எம் பங்கேற்க, இதை எதிர்த்துக் கர்நாடக அரச நடத்திய முழு அமைப்பில் அந்த மாநில சி.பி.எம். கலந்து கொண்டது. இப்பொழுது கர்நாடகத்தி தமிழர் துரத்தப்படுவதைக் கண்டித்துத் தமிழ்நாடு அரசு நடத்திய முழு அடைப்பில் சி.பி.எம் கலந்துகொள்ளவில்லை, இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிடக்கோரி பொலீட்பீரோதீர்மானித்தது. மேலும் தமிழகக் காவிரப் பிரச்சினை சாராம்சத்தில் சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோரது உயிர்ப்பிரச்சினையாகும். ஏறத்தாழ 50லட்சம் விவசாயிகளை உள்ளடக்கிய இந்தப் பிரச்சினையில் மக்களைத் திரட்டக்கூடிய, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தொடர் போராட்டங்களை எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும்; இத்தகைய கிளர்ச்சிப் பாதையை முற்றாகக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, மாநில ஆளுங்கடட்சசிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்சியோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ஓரிரண்டு சீட்டுகளுக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
                அனைத்து இந்தியக் கட்சிகள் மட்டுமல்ல ; மாநிலக்கட்சிகள் கூட ஒரே நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுக்கவில்லை. ஆளும்கட்சியாக இருக்கும்பொழுது சமரசம்பேசுவதும் எதிர்கட்சியாக இருக்கும்பொழுது சண்டைக்குக்கிளம்புவதுமாக அவை இருந்தன; இருக்கின்றன. கருணாநிதி ஆளும் கட்சியாக இருக்கும் வரை உறவுக்குக் கை கொடுத்துக் கொண்டே இருந்ததினால் காவிரி வற்றிக் கொண்டே இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரியைக் காப்பாற்றக் கர்நாடகம் மீது படையெடுப்பேன்என்ற எளவுக்கு வீரவசனம் பேசினார், ஆனால் அவரே முதல்வராக வந்தபொழுது காவிரியின் நிலைமை மேலும் மேலும் மோசமாகியது. அந்தந்த நேரத்தில் பாசனப்பயிர் காய்ந்து போகும் தருணம் ஏற்பட்ட பொழுதெல்லாம் அடுப்பில் சட்டியை வைத்துவிட்டுக் கடையில் எண்ணெய் வாங்கச் செல்வது போலகர்நாடகத்திடம் கெஞ்சிக்கூத்தாடி 5டி.எம்.சி. 10டி.எம்.சி. எனப் பெற்றுக் கொண்டிருந்தார் - அதுவும் மின்சக்திக்குப் பண்டமாற்றாக. அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி தான் முதல்வராக இருந்தபொழுது காவிரித் தாய்க்குச் சென்னைச் சைதாப்பேட்டையில் சிலைவைத்ததை நினைவு கூர்ந்து மக்களைப் புல்லரிக்க வைத்தார்.
                1989இல் கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கத் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியது பாராட்டத்தக்கதாகும். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவியாக (மறைந்து) இருந்த ஜெயலலிதா, இந்தப் புகழ் கருணாநிதிக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். நடுவர் மன்றம் அமைக்கவேண்டிச் சென்ற தமிழக அரசின் தூதுக்குழுவில் ஜெயலலிதா கட்சியினர் கலந்து கொள்ளவில்லை. நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட பின்னரும் கூட நடுவர் மன்றத்தின் தீர்ப்பைக் கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டிய சட்டரீதியான அவசியம் இல்லைஎன அதில் குறை கண்டார்.
                இன்றைக்குத் தமிழகத்தின் ‘காவல் தெய்வமாக உயர்ந்துவிட்ட செயலலிதா நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிடுமாறு ஒரு முழு அடைப்பு நடத்தியும், அதை அரசிதழில் வெளியிடக்கோரித் தன் தலைமையில் டெல்லி சென்றும் கர்நாடகத் தமிழர் தாக்குதலைக் கண்டித்து ஒரு முழு அடைப்பு நடத்தியும் கர்நாடக முதல்வரைக் காண மாட்டேன் என்று சொல்லியும் தன் இமேஜைஉயர்த்திக் கொண்டிருக்கிறார். இதில் செயலலிதா எங்கு நழுவுவார் என்றே கருணாநிதி காத்துக் கொண்டிருப்பதும் கருணாநிதியை முற்றாக அன்னியப்படுத்தி ஓரங்கட்டும்படியாகச் செயலலிதா நடந்து கொண்டிருப்பதும் கண்கூடு. இப்பிரச்சினையில் செயலலிதா தன்னை யாரும் கன்னடப்பெண் என அழுத்தமாகவும் பரவலாகவும் விமரிசித்து விடக்கூடாது என்பதில் நிறைய அறிக்கைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றார்.
                இங்கே கட்சிகள் மட்டுமல்ல, ஒரே கட்சியில் உள்ள இரண்டு கோஷ்டிகளும் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கின்றன. கட்சிக்குள் தம் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் அல்லது இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்கும் சந்தர்ப்பவாத நோக்கில் நிலைப்பாடுகளை மேற்கொள்கின்றன.
                காங்கிரசு என்பது ஒரு கட்சி அல்ல; பல கோஷ்டிகளின் கூட்டமைப்பு. தமிழகத்தில் இன்று வாழப்பாடி கோஷ்டி, மூப்பனார் கோஷ்டி. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை முறியடிக்கக் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. நரசிம்மராவின் மத்திய அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்திடம் கருத்து கேட்டது. உடனே மத்திய அமைச்சர் வாழப்பாடி துள்ளினார். கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது நடுவர் மன்றம் அமைக்கப் பிரதமரிடம் சென்ற தூதுக்குழுவில் வாழப்பாடி கோஷ்டி கலந்து கொள்ளவில்லை; புறக்கணித்தது. ஆனால் இப்பொழுது வாழப்பாடியின் தமிழ்ரத்தம் சூடேறியிருந்தது. அவர் பதவியை விட்டு விலகினார்;. செயலலிதா அம்மையார் அவரை ‘ஹீரோ என வருணித்தார். அ.தி.மு.க.வினரும் வாழப்பாடி கோஷ்டியும் இணைந்து ‘காவிரி கொண்டானே என அவரைத் துதிபாடி மகிழ்ந்தனர்.
                இதில் நரசிம்மராவின் நிலைப்பாட்டை எடுத்த மூப்பனார் கோஷ்டியினரைச் செயலலிதா ‘துரோகிகளாக வருணித்தார். மூப்பனார் கோஷ்டி மந்திரியான சிதம்பரத்துக்கு ‘விசேட மரியாதை பல இடங்களில் கிடைத்தது. அ.தி.மு.க.பெண் எம்.எல்.ஏ.க்களால் ஆளுநர் மாளிகையில் செயலலிதாவின் முன்னிலையில் ‘கேரோ செய்யப்பட்டார். அவருக்குத் திருச்சி விமான நிலையத்தில் ‘அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கபட்டதனால் அவரது கார்க்கண்ணாடி நொறுங்கி அதிலேயே அமைச்சர் ஊர்வலமாகச் சென்றார். அந்த அளவிற்குக் காவிரியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென அ.தி.மு.க.வினரும் வாழப்பாடி கோஷ்டியும் இணைந்து மும்முரமாகச் செயல்பட்டனர். அரசியல் பிழைப்புவாதம் இன்றைக்கு வன்முறையை வீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பிரச்சினைகளை மக்கள் முன்வைத்து அவற்றின் மீது சரியான நிலைபாடுகளை எடுத்து மக்களைத் திரட்டாமல், அரசியலில் தம் கட்சியை அல்லது கட்சிக்குள் தம் கோஷ்டியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பிரச்சினைகளில் ஈடுபாடு கொள்கிற பிழைப்புவாதத்தன்மை முற்றாக நிறைந்து போய் நாறிக் கொண்டிருப்பதன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. இதில் பகடைக்காய்களாக உருட்டப்படுவதும் பலிக்காடக்களாக ஆக்கப்படுவதும் மக்களே.. மக்களே... இப்போது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் இதுவே உடனடியான காரணமாக அமைந்துள்ளது.
                வருடக் காலண்டர்கள் ஒருவிதத்தில் அதிர்ஷ்டம் பெற்றவை. அவை ஓராண்டுக்காவது மதிப்புடன் இருக்கும். ஆனால் காங்கிரசுக் கட்சியின் மாநில முதல்வர்கள் அப்படி இல்லை. அடிக்கடி மாறக்கூடியவர்கள். அதில்கூட ஒரு சமத்துவமும், ஏகபோகத் தகர்ப்பும் இருப்பதாகத் தெரிகின்றது. அதிகாரமும் இலஞ்சமும் பெறும் வாய்ப்பு 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஒருவரிடமே இருப்பதைத் தவிர்ப்பதற்காக இப்படி மாற்றப்பட்டு அவை எல்லாக் கோஷ்டிகளுக்குமாக்கப்படுகின்றன எனவும் கருதலாம்! வீரேந்திர பட்டீலுக்குப்பின் ‘ராஜீவின் ஜனநாயக வழியில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காரப்பா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் (பிறகு எதற்கு முதல்வராக வருவது?), புகார்களைச் சொல்வது வேறு கட்சிகளல்ல, காங்கிரசுக் கட்சியின் இன்னொரு கோஷ்டி, பட்டீல், குண்டுராவ், மார்க்கரெட் ஆல்வா ஆகிய எதிர்க்கோஷ்டிகளின் தலைவர்கள் காவிரிப்பிரச்சினையை முன்னிலைப்படுத்திப் பங்காரப்பாவை நீக்க நினைக்கின்றனர்.
                இந்நேரத்தில் இடைக்காலத் தீர்ப்பு கெசட்டில் வெளியானவுடன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே திரட்டப்பட்ட கன்னடத் தேசிய இனவெறியைப் பங்காரப்பா தனக்குச் சாதகமாகப் பயனபடுத்திக்கொண்டு கர்நாடகத் தமிழர்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதலைக் கட்டவிழத்து விட்டுள்ளார். கற்பழிப்பு, சொத்துப்பறிப்பு, சேதாரங்கள் என இன்னோரன்ன துன்பங்களுக்கு ஆட்பட்டு ஒரு லட்சம் தமிழர்கள் அங்கிருந்து ஓடிவருவதற்கு இந்தச் சாக்கடை அரசியல்வாதிகளின் பதவிப்பித்தே உடனடிக் காரணம் ஆகும். இவர்களின் சித்து விளையாட்டுக் களமாகவும். சில்லறை இலாப வேட்டை நிலமாகவும் இந்தப் பிரச்சினை இழிந்து போயிற்று. இது உடனடிக் காரணமாக அமைந்து போனாலும் காவிரி நீர்பங்கீடு விசயத்தில் இந்திய ஆளும்வர்க்கத்தின் அரசியல் பொருளாதார நோக்கங்கள் அடிப்படையான அம்சங்களாக இருக்கின்றன.

காவிரி நீரில் ஆளும் வர்க்கத்தின் கழிசடை அரசியல்
                இந்திய ஆளும் வர்க்கம் - குறிப்பாக அதன் முன்னணிப் பிரிவான தரகு முதலாளிய வர்க்கம் - இந்தியா முழுமைக்குமான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்திக் கொண்டே வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் ஒற்றுமை, பிரிட்டீஷ் இந்திய அரசு கட்டிய ஒற்றுமையின் தொடர்ச்சியாகும். பிரிட்டீஷ் இந்திய அரசை எதிர்ப்பதில் பல்வேறு தேசிய இனங்களிடம் தோன்றியுள்ள அரசியல் ஒருமைப்பாட்டுணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வையும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் வளர்த்தெடுத்துக் கொள்ள அன்றைக்குப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் பலமற்று இருந்தன. இத்தகைய உணர்வைக்கூடத் தரகு முதலாளிகளே ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேசுவதற்குப் பயன்படுத்திக்கொண்டனர். 1947க்கு முன் மேலிருந்து கட்டியமைக்கப்பட்ட இந்த ஒற்றுமை ஆளும்வர்க்க நலன்களுக்கான ஒற்றுமையாகும்; பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையிலான சமனற்ற தன்மையைப் பயன்படுத்திக் கட்டியமைக்கப்பட்ட ஒற்றுமையாகும்.
                இந்தியத் தரகு முதலாளிகளின் தலைமையில் இங்கு நேரடி ஆட்சியதிகாரப் பொறுப்பு ஏற்பட்ட பின்னரும் இதே வகைப்பட்ட ஒற்றுமையே தொடர்ந்தது. உணர்ச்சிபூர்வமான அல்லது அறிவுபூர்வமான தேசிய ஒருமைப்பாடு உருவாக வேண்டுமானால் தேசிய இனங்களுக்கு இடையில் அரசியல், பொருளாதாரச் சமத்துவம் இருந்தாக வேண்டும். தேசிய இனங்களின் சிக்கலை ஜனநாயக வழியில் தீர்த்தாக வேண்டும். சமத்துவமும் சனநாயகமும் இல்லையெனில் தேசிய ஒருமைப்பாடு என்பது கீழ்நிலையிலிருந்து உருவாக இயலாது; அது மையப்பட்ட ஓர் அதிகார நிறுவனத்திலிருந்து திணிக்கபட்டதாகவே இருக்கும். தேசிய இனங்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்துவதும் அதைக் காரணமாகச் சுட்டிக்காட்டி வன்முறை அளவிலான ஒருமைப்பாட்டை மேலிருந்து திணிப்பதும் ஆளும்வர்க்கத்தின் அரசியல் உத்தியாகவுள்ளது. குறிப்பாக அசாம்,பஞ்சாப், காஷ்மீர் ஆகிய எல்லை மாநிலங்களில் தேசிய இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் பகை உருவாகும் சூழல் ஏற்படும் வகையில் நிகழ்வுப் போக்குகளில் மத்திய அரசு தலையிட்டது. இத்தகைய எல்லை மாநிலங்கள் இன்றைக்கும் சட்டபூர்வமாக அரை இராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இவற்றைச் சுட்டிக்காட்டி வன்முறை ரீதியிலான ஒருமைப்பாட்டுணர்வை மத்திய அரசு இந்தியா முழுவதும் இன்றைக்குப் பரப்பிக்கொண்டு இருக்கின்றது.
                ரவி, பியாஸ் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் பஞ்சாப் மாநிலத்துக்கும் அரியானா மாநிலத்துக்கும் இடையில் தீராப் பகைமையை ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசு நடந்து கொண்டது இங்குக் கருத்தத்தக்கது. ஏற்கனவே பஞ்சாப் பெற்றிருந்த உரிமையைக் கூட அது இழந்துவிடும் வகையில் வெளியிடப்பட்ட எராடி கமிசன் தீர்ப்பைப் பயன்படுத்தி அரியானாவில் காங்கிரசு வெற்றி பெற்றதோடு, பஞ்சாபில் சங்கிலித்தொடர் போன்று பல நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் அது காரணமாக அமைந்துவிட்டது.
                இதே போன்று கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பகைமை முளுவதற்குரிய சூழலை வளர்த்து விடுகின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தின், மத்திய அரசின் மெளனத்திற்கு இதுவே அர்த்தமாகும். கர்நாடகத்தில் அரசியல் பிழைப்புவாதத்தால் தூண்டப்பட்ட தேசிய இனவெறியை அடக்க வேண்டும் என இன்று வரை மத்திய அரசு கருதவில்லை. பீஜித்தீவிலும் மால்ட்டா தீவிலும் நடைபெறும் இராணுவக் கலவரங்களை ஒரே நாளில் அடக்கிய திறன்பெற்ற மைய அரசு இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் அதன் அரசியல் உத்தியேயாகும்.   
                ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் ஊதுகுழல்களான தொலைக்காட்சியும் இந்தியா டுடே, பைனான்சியல் டைம்ஸ், பிசினஸ் இந்தியா போன்ற பத்திரிகைகளும் இத்தகைய பார்வையை முன்வைக்கின்றன. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவையாகக் காணப்படுகின்றன. இன்றைக்குக் காவிரி பாயும் முக்கிய மாநிலங்களான கர்நாடகமும் தமிழகமும் இதைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தடைகளாக இருப்பவை.
                1.             இந்திய ஆளும்வர்க்கத்தின் ஆதிக்க ஒருமைப்பாட்டு அரசியல் நோக்கும்,
                2.             அரசியல் கட்சிகளின் தேர்தல் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் ஆகும்.
இவற்றைக் களைந்தாலன்றி இந்தப் பிரச்சினைக்குரிய இறுதியான நியாயமான தீர்ப்பை அடைய முடியாது.
                இன்றைய இந்திய அரசியல் யதார்த்தத்திலிருந்து இதைத் தொடங்கிவைப்பது சரியாக இருக்கும். முதலில் தேசிய இனங்களுக்கு இடையில் சமத்துவதத்தையும் சனநாயகத்தையும் உத்திரவாதப்படுத்துகிற தேசிய இனத் தன்னுரிமை தேவைப்படுகிறது.
இதைக்கூடப் பிரத்தியட்ச நிலைப்பாட்டிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களுக்கு இடையில் பகிர்ந்திளிக்கப்பட வேண்டிய வளங்கள் குறித்த சிக்கலில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேணவில்லையெனில் தேசிய இன வெறித்தனமே மேலோங்கும்.
தேசிய இனங்களுக்கு அடையில் வளங்களைப் பங்கீட்டுக் கொள்ளல்
                இந்தியா என்பது தேசிய இனங்கள் நிறைந்த நாடு என்பதை மறைப்பது வரலாற்று அபத்தம். இதன் புவியியல் தொடர்ச்சி நிலையாலும் வரலாற்றுத் தொடர்ச்சியாலும் ஒரு மொழிபேசும் மக்கள் தம் தேசிய இனப்பிரதேச வரையரையைத் தாண்டி அடுத்த பிரதேசத்தில் வாழ்க்கை நடத்துவது தவிர்க்க இயலாதது. இதுவும் அண்டை மாநிலங்களில் மட்டுமே அதிகம் சாத்தியம் ஆகும். உதாரணமாகத் தமிழர்கள், அண்டை மாநிலங்களில் குடியேறியுள்ளனர். குறிப்பாகக் கர்நாடகத்தில் உழைக்கும் மக்களாகவும் சிறு விவசாயிகளாகவும் உள்ளனர். கன்னடர்கள் தருமபுரி, வடார்க்காடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். இப்படிக் கடந்த 300 ஆண்டுகளாக ஒருவிதச் சமூக இயங்குதன்மை அண்டைத் தேசிய இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து இருக்கின்றது. அதுபோல பிரிட்டிஷ் காலம் தொட்டு இன்றுவரை மூலதனக்காரர்களும் தொழில்நுட்ப அறிவாளிகளும் படிப்பாளிகளும் தேசிய இனப்பிரதேச வரையறையைக் கடந்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர். மூலதனமும் தொழில்நுட்பங்களும் அதிகாரிகளும் தம் தேசிய இன வரையறையைத் தாண்டிப் பாதுகாப்புடன் இயங்குவதற்குரிய உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதன் ஒற்றுமையின் சாரம்கூட இதுதான். ஆனால் அண்டைப் பிரதேசங்களில் குடியேறிய உழைக்கும் மக்களும் சிறுவுடைமையாளர்களும் பாதுகாப்புடன் இயங்க முடிவதில்லை. புவியியல் தொடர்ச்சியினாலும் வரலாற்றுத் தேவைகளினாலும் இவ்வாறு குடிபெயர்ந்த உழைக்கும் மக்களும் சிறுவுடமையாளரும் மீண்டும் தம் தேசிய இனப்பிரதேசத்துக்குத் திரும்பிக் குடிபெயர்தல் வரலாறு ரீதியில் சாத்தியமில்லை. இத்தகைய தேசிய இனச்சிறுபான்மையினராகவுள்ள உழைக்கும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் வாழ்வு உத்திரவாதம் இருந்தாக வேண்டும். இதற்கு தேசிய இனங்களுக்கு இடையில் சமத்துவமும் சனநாயகமும் தேவை.
                அதேபோல் இன்றைய இந்தியச் சூழலில் ஒரு தேசிய இனத்தின் எல்லாத் தேவைகளையும் அத்தேசிய இனம் முழு அளவில் நிறைவு செய்ய இயலாது. நாடுகளுக்கு இடையில் இருக்கும் சமனற்ற நிலை மாநிலங்களுக்கு இடையிலும் இருக்கின்றது. இதை நீக்கிக்கொள்ள ஜனநாயக பூர்வமான விவாதம் தேவை. உதாரணமாகத் தமிழ்நாட்டின் நீர்பாசனத் தேவையை எடுத்துக் கொள்வோம்.
                தமிழகத்தில் 1971இல் வேளாண்மைக்கு உகந்த நிலம் 13 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இதில் 6 மில்லியன் ஹெக்டேர் நிலம் மட்டுமே வேளாண்மை செய்யப்படுகின்றது. இதிலும் 2.4 மில்லியன் ஹெக்டேர் நிலம் மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது. ஆக வேளாண்மை நிலத்தில் 60 சதவீதத்திற்குப் பாசனவசதி இல்லை. பாசனத்திற்குக் கால்வாய்கள், குளங்கள், கிணறுகள் மட்டுமே பயனபடுகின்றன. இவை 1950இல் இருந்ததைவிட அதிகமாகப் பெருகவில்லை.
ஒரு விவரம் காணலாம்.
(மில்லியன் ஏக்கரில் பாசன நிலம்)
ஆண்டு
கால்வாய்
குளம்
கிணறு
பிற
மொத்தம்
1951-52
1.96
1.61
1.23
0.13
4.93
1960-61
2.18
2.31
1.48
0.11
6.08
1970-71
2.18
2.22
1.91
0.09
6.40
1979-80
2.30
2.21
2.76
0.09
7.36
                கால்வாய்ப் பாசனமும் ஆற்றுநீர்ப் பாசனமும் பெரும் பகுதியைக் கொண்டவை தமிழக ஆறுகளில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு, பெரியாறு முதலியவை அண்டை மாநிலங்களை உற்பத்தி இடங்களாகக் கொண்டவை தமிழக ஆற்று நீர்ப் பாசனப் பரப்பளவில் இந்த நான்கு ஆறுகள் மட்டும் ஏறத்தாழ 80 சதவீத இடத்தை நிரப்புகின்றன இது முக்கியம். தமிழகத்தில் பாயும் நதி நீரை நாம் அதிகம் வீணடிப்பதில்லை. அதாவது மொத்த நதிகளின் நீர் அளவான 810 டி.எம்.சி.யில் 765 டி.எம்.சி நீர் பயன்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. எனினும் 1947க்குப் பின் கால்வாய்ப் பாசனப் பரப்பளவு அதிகம் பெருகவில்லை. இன்றைய நதிப்படுகைப் பாசனப் பரப்பளவில் ஏறத்தாழ 78 சதவீதம் 1947இல் இருந்தது. எனவே கால்வாய்ப் பாசனம் தமிழக நிலப்பரப்புக்குப் போதாது. அடுத்துக் குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம், ‘குளந்தொட்டு வளம் பெருக்கிய நாடு தமிழ்நாடு ஆகும். மழைநீரைத் தேக்கிவைப்பதற்கும் நிலத்தடி நீராகப் பாதுகாப்பதற்கும் இவை தேவை. தமிழகத்தில் ஆண்டுச் சராசரி மழை அளவு மிகவும் குறைவு. இதிலும் கூட உண்மையில் பயன்படும் அளவு மிகமிகக் குறைவு. எடுத்துக்காட்டாகத் தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 12.32 மில்லியன் ஹெக்டேர் மீட்டர்களாகும். (1982 ஆம் ஆண்டுக் கணக்கின்பபடி) இதில் நிலத்தோடு ஓடுதல், நீராவியாதல் போன்றவற்றால் மட்டும் 6.25மி.ஹெ மீட்டர் வீணாக மீதியுள்ள 2.5மி.ஹெ.மீட்டர் மட்டும் நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த மழை நீரில் 20 சதவீதம் மட்டும் பாசனத்துக்குப் பயன்படுகின்றது. மழைநீரைத் தேக்கும் குளங்கள் எல்லா மாவட்டங்களிலும் சமமாகப் பெருகவில்லை குளத்துப்பாசனப் பரப்பு சற்றுப் பெருகியுள்ளது. மொத்தமுள்ள 38,000 குளங்களில் செங்கை, தென்னார்க்காடு, வடார்க்காடு, கோவை, நெல்லை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 80 சதவீதக் குளங்களும் 90 சதவீதக் குளப்பாசனப் பரப்பும் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு பகுதியில் பெய்யும் மழைநீர் தேங்க வசதியில்லை எடுத்துக்காட்டாகத் தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை கணிசம். இதைத் தேக்கக் குளங்கள் இல்லை குளங்கள் உருவாக்கப்படவும் இல்லை. ஆகவே தான் பெய்யும் மழை அளவில் 20 சதவீதம் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படுகிறது.
      நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் கிணற்றுப்பாசனம் மட்டுமே இந்த 40 ஆண்டுகளில் ஓரளவு பெருகியுள்ளது. 1950இல் 6.3 லட்சம் கிணறுகளும் 1979இல் 16 லட்சம் கிணறுகளும் இருந்தன. இருப்பினும் ஒரு கிணற்றுக்கு உரிய பாசனப்பரப்பளவு பெருகவில்லை. 1950இல் ஒரு கிணற்றின் பாசனப்பரப்பளவு சராசரி 2 ஏக்கர் அது 1979இல் 1.75 ஏக்கராகக் குறுகியுள்ளது. ஆனால் இது பஞ்சாபில் 10 முதல் 15 ஏக்கராக உள்ளது. தமிழகத்தின் மொத்தக் கிணறுகில் 76 சதவீதம் கோவை, பெரியார், சேலம், தருமபுரி, தென்னார்க்காடு, வடார்க்காடு, செங்கற்பட்டு, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் சாதனங்கள் பெருகவில்லை.
      எனவே இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள பயிரிமும் பரப்பில் பாசனம் பெறும் பரப்பளவு 40 சதவீதம் மட்டுமே. மொத்தப் பயிரிடும் பரப்பில் உள்ள கால்வாய்ப்பாசனம் (நதிநீர்ப்பாசனம்) 12.5 சதவீதம் மட்டுமே. இதிலும்கூடப் பெரும்பகுதியை (அதாவது 10 சதவீதத்தை) அண்டை மாநிலங்களே உற்பத்தி இடங்களாகக் கொண்ட ஆறுகளே நிரப்புகின்றன. தமிழகத்துள் ஓடும் மொத்த நதி நீர் அளவில் 95 சதவீதத்தை நாம் பயன்படுத்தினாலும் நாம் இன்னமும் சிக்கனத்துடன் அதிகத் திறனுடனும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு 65 லட்சம் லிட்டர் நீர் பயன்படுகிறது. என இந்திய மத்திய நீர்த்திறன் குழு குறிப்பிடுகிறது. ஆனால் தஞ்சைப்பகுதியில் இது 2 முதல் 3 மடங்கு வரை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரியாறு கால்வாய்ப்பாசத்தைத் தவிரத் தமிழகக் கால்வாய்ப் பாசனப்பகுதி நவீனப்படுத்தப்படவில்லை கால்வாய்களுக்குத் தரை பாவப்படவில்லை. மேலும் 1980 வரையான கால்வாய்ப் பாசனப்பரப்பில் ஏறத்தாழ 80 சதவீதம் 1947க்கு முன்பே இருந்ததுதான். கால்வாய்களின் பாசனப்பரப்பைப் பெருக்கவும் இல்லை; நவீனப்படுத்தவும் இல்லை. இது ஒருவிதமான நீர்பாபசன வசதி மறுப்பு ஆகும். மேலும் பெய்யும் மழைநீரில் 20 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்குக் குளங்கள் உள்ளன. இவையும் சில மாவட்டங்களில் மட்டுமே பெருத்துள்ளது. இப்பொழுதுள்ள நிலையில் கன்னியாகுமரி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்ப்பயன்பாடு நீண்டகாலத்துக்கு வரும் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இது எந்த அளவுக்குப் பாசனத்துக்குப் பயனபடும் என்பது ஐயமே.
      தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மையால் அது பாசனத்துக்குப் பயன்படுவதில்லை. எனவே தமிழ்நாடு இன்றைய நீர்ப்பாசனப் பரப்பின் அளவைப் பெருக்க வேண்டுமானால்,
      1.     நீர்ப்பாசன வளங்களை நவீனப்படுத்த வேண்டும்.
      2.     தமிழகத்தில் பாயும் நதிநீரின் அளவை உத்திரவாதப் படுத்த வேண்டும்; அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
      இது வெறும் நீர்ப்பாசனப் பிரச்சினை மட்டுமல்ல; அரசியல் ரீதியில் பல தீர்வுகளையும் இது கோருகிறது.
«      ஒது தேசிய இனத்துக்கு அதன் பிரதேச வரையறைக்கு உட்பட்டு மட்டுமே இயங்கக்கூடிய வளங்களின் மீதான முன்னுரிமை இருந்தாக வேண்டும்.
«      அண்டைய தேசிய இனப் பிரதேசங்களிலும் இயங்கக் கூடிய வளங்கள் மீதான பங்கீடு குறித்துக் குறிப்பிட்ட தேசிய இனங்களுக்கு இடையில் ஜனநாயகப் பூர்கவமாக விவாதித்து முடிவெடுக்கும் உரிமை இருந்தாக வேண்டும்.

இதை வென்றெடுக்கத் தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவமும் ஜனநாயகமும் கொண்ட தேசிய இனத் தன்னுரிமை தேவை. இதற்கு நாம் முன்பு சொன்ன அரசியல் சக்திகளும் போக்குகளும் பெருந்தடைகளாக இருக்கின்றன. அத்தகைய சக்திகள்.
«      ஒரு தேசிய இனத்தின் வளங்களை முற்றாகப் பயன்படுத்தும் உரிமையைத் தடுக்கின்றன.
«      தேசிய இனங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள வேண்டிய வளங்களின் நிலைமையைச் சிக்கலாக்கித் தேசிய இனங்களுக்கிடையே பகைமை ஏற்படச் செய்கின்றன.
இந்தத் தடைகளை உடைத்தாலன்றிக் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கு நிரந்தர நீண்டகாலத் தீர்வு இல்லை. இதற்கு மட்டுமல்ல; எந்தவொரு தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு இருக்காது.
      இந்த நீண்டகாலத் தீர்வை நோக்கித் தற்காலிகமாக இருப்பினும் உடனடியான தீர்வுகளை நாம் சிந்தித்தாக வேண்டும்.
தீர்வுகள் பற்றி
                காவிரி நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல் ஏற்படும் பொழுது பல தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைக் காணலாம்.
                இந்தியாவில் ஓடும் நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்றும் எல்லா நதிகளையும் இணைக்கலாம் என்றும் தீர்வுகள் சொல்லப்படுகின்றன.
                நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற தீர்வு முன்வைக்கப்படுவதன் அடிப்படை நோக்கு, அவை மத்திய அரசின் அதிகாரக் கட்டுக்கோப்புக்குள் சென்றால் தேசிய இனங்கட்கு இடையே எவ்விதச் சிக்கலும் எழாது என நினைப்பதாகவுள்ளது. இது தவறான நினைப்பு ஆகும். மத்தியில் இதுவரை ஆளும் வாய்ப்பைப் பெற்ற எந்தவொரு கட்சியும் தன் தேர்தல் வெற்றிகளை மனத்தில் கொண்டே செயல்பட்டுள்ளன. இது மட்டுமல்ல; நீர்ப்பாசனத்தைப் பொறுத்துவரை, குறிப்பாகப் பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிநீர் குறித்த அதிகாரம் நிரம்பவே மத்திய அரசின் கையில் குவிந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கையில் பலத்த அதிகாரங்கள் குவிந்துள்ளன. மாநில அதிகாரப்பட்டியல், இணைப்பு அதிகாரப்பட்டியல் என்பனவெல்லாம் நம் காதுகளில் பூச்சுற்றுவதாகும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற பரிபூரண மத்திய அரசதிகாரத்தின் முன் இவை ஒன்றுமில்லை.
                மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கில் பாராளுமன்றம் கருத்துரைக்கலாம்; தீர்ப்பு வழங்கலாம் (அரசியல் சட்டம் பிரிவு 262(1). மேலும் மாநில அதிகாரப்பட்டியலில் உள்ள நீர்த்ததேக்க உரிமைகூட (மாநிலப்பட்டியல் எண்.17) மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிநீரை முறைப்படுத்தும் மத்திய அரசின் அதிகார இனத்துக்குக் கட்டுப்பட்டது (மத்தியப் பட்டியல் எண்.56) ஆகும். எனவே எங்கும் கால்,கை விரித்து மத்திய அரசு படுத்துக் கொண்டு தானிருக்கிறது. எனவே மத்திய அரசதிகாரப் பட்டியலுக்கு வந்த பின்னரே இதில் தலையிட வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னொரு வகையில் நதிகளின் இணைப்புப் பற்றிப் பலத்துப் பேசப்படுகின்றது. அது கங்கை-காவிரி இணைப்பு இதைத் தேசிய ஒருமைப்பாட்டுடன் இணைத்தும் பலர்பேசிக் கொண்டிருக்கின்றனர் பல நதிகளை இணைப்பதாலோ ஒரே நதி பல பிரதேசங்களில் பாய்வதாலோ மட்டுமே உணர்வுபூர்வமான ஒற்றுமை உருவாக முடியாது. எனவே இதை விடுத்தே இத்திட்டத்தை யோசிப்போம்.
                கங்கை-காவிரி இணைப்புத்திட்டத்தை 1977இல் முன் வைத்த திரு கே.எல்.இராவ் இதிலுள்ள தொழில்நுட்பச் சிக்கலையும் பொருளாதாரச் சிக்கலையும் கண்டு அறிந்தார்; எனினும் அவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். விந்திய மலைப்பகுதியில் 2000 அடி உயரத்துக்கு நீரை ஏற்றுவதற்குரிய மின்னாற்றல் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு, இந்த மின்னாற்றலையும் இணைப்பு நீரின் விசையால் பின்னர்ப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் முன்வைத்தார். அதே போல் இதற்கு ஆகும் செலவு என மதிப்பிடப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடியைத் திரட்டுவது எப்படி என்றுகூடப் பொருளாதாரச் சிக்கல் முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள உண்மையான கறுப்புப் பணத்தின் மதிப்பைவிட இது குறைவானதாகும். மேலும் இதனால் கிடைக்கவிருக்கும் பணப்புழக்கத்தின் நீண்ட கால மதிப்போடு எண்ணிப்பார்த்தால் இத்தொகை மிகக் குறைவானதாகும்.
                எனவே தொழில்நுட்பத் தடையும் பொருளாதாரச் சிக்கலும் உண்மையான காரணங்கள் இல்லை. அப்படியானால் எது உண்மையான தடை? இத்தகைய திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் அதிகாரமும் அரசியல் விருப்பமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மையாகும். இந்திய அரசுக்குத் தன்னுரிமை இல்லை என்பதே உண்மை. ஆக இங்குத் தடை அரசியல் அளவிலானதாகும். இந்தியா ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கப்பிடியிலும், நிலப்பிரபுத்துவ நச்சுவேர்களின் சூழலிலும் சிக்கிக் கொண்டிருக்கிறது. கங்கை-காவிரி நதிகள் இணைப்பு தொடர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு மிக நன்கு தெரியும். பாசனப் பரப்புப் பெருக்கத்தால் வரும் பொருளாதார மேம்பாட்டில் ஓரளவினை அடிப்படை மக்களும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. இதன் தொடர் விளைவாகக் கல்வி வாய்ப்பிலும் சமூக வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒரு கணக்கின்படி கங்கை-காவிரி இணைப்பினால் இந்தியாவில் குறுக்கும் நெடுக்கும் 2.5 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு புதிதாகப் பாசனவசதி பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
                இந்தியா நெடுகிலும் இவ்வளவு அபரிதமான நிலம் பாசன வசதியைப் பெறுமானால் ஏராளமான மின் ஆற்றல் கிடைக்குமானால் கோடிக்கணக்கில் மக்கள் பொருளாதரப் பயன்பாடு அடைவதோடு அதன் தொடர்விளைவாகச் சமூக உள் கட்டுமானங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக இங்குள்ள மக்கள் அரை நிலவுடைமைப் பிடியிலிருந்து விலகி விடுதலை பெறவும் சுயசார்பான பொருளாதார அமைப்பு உருவாகக்கூடிய திரட்சி ஏற்படவும் சாத்தியம் உண்டு இதை வல்லரசு நாடுகள் அனுமதிக்குமா? அனுமதிக்கவில்லையெனில் மீறிச் செயல்படும் அளவுக்கு இந்திய அரசு அரசியல் அதிகாரமும் சுயநிர்ணயமும் கொண்டிருக்கிறதா?
                இந்தியச் சமூக அமைப்பின் குணம் ஏகாதிபத்தியச் சார்பாகவும் அரை நிலவுடைமையாகவும் இருக்கும் வரை இத்தகைய திட்டங்கள் நடைமுறைக்கு வரவே வராது என்று உறுதியாகக் குறிப்பிடலாம். ஆனால் இத்தகைய கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் இன்றைக்கு இந்திய விவசாயிகளின் நலன்களிலிருந்தும் அடிப்படை மக்கள் நலன்களிலிருந்தும் பார்க்கும் போது உடனடியாகத் தேவைப்படுகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் இத்திட்டம் மைய அரசின் அதிகார மையத்தை மேலும் இறுக்கப்படுத்துகிறது என்றாலும்கூட, பல்வேறு தேசிய இன விவசாயிகளை இத்திட்டத்தின் அடிப்படையில் திரட்ட முடியும். மேலும் இது பல்வேறு தேசிய இனங்களின் பிரச்சினையாக இருப்பினும் சாராம்சத்தில் விவசாயிகளின் பிரச்சினை ஆகும்.
                இன்றைய சமூகத்தில் விவசாயிகளுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை இது பருண்மையாக நிரூபிக்கின்றது. ஆனால் தேசிய இனங்களுக்கு இடையில் ஜனநாயகமும் சமத்துவமும் பேணுகின்ற எதிர்வரும் அரசுக்கட்டமைப்பில் பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையில் பாயும் நதிகளின் நீரை வீணாக்காமல் அனைத்துத் தேசிய இனங்களும் பயன்படுத்திக் கொள்ள இயலும் சாத்தியத்தையும் இது வழங்குகிறது. தேசிய இனங்கள் தன்னுரிமை பெற்ற நிலையிலும் கூட இத்தகைய திட்டங்கள் பயன்படும் அரசியல் சாத்தியமும் உண்டு. எனவே இச்சமூக அமைப்பில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இல்லையென்றாலும் இந்திய விவசாயிகளுக்கு நீரையும், புதிய நிலத்தையும் வழங்குகிற இத்திட்டத்தை அரசு அதிகாரக் கட்டமைப்பில் இத்திட்டம் மையத்துவத்தை வலுப்படுத்துவதாக இருப்பினும், தேசிய இனங்களுக்கு இடையில் ஜனநாயகமும் சமத்துவமும் நிலவக்கூடிய ஒரு புதிய அரசு அதிகாரக் கட்டமைப்பில் அனைத்துத் தேசிய இன விவசாயிகளுக்கும் சனநாயகத்தை உத்திரவாதப்படுத்தும் இத்திட்டத்தை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. கங்கை-காவிரி இணைப்பினால் ஏற்படவிருக்கும் அரசியல் அபாயத்தை ஆளும் வர்க்கமும் அதன் ஊதுகுழல்களும் முன்னுணர்ந்து பறைசாற்றும் நேரத்தில் நாம் அதன் வேறு சில பரிமாணங்களை விளக்க வேண்டியுள்ளது. கங்கை-காவிரி இணைப்பு தவிர வேற தீர்வுகள் பற்றியும் நாம் சிந்திக்கலாம்.
                முதலாவதாக அண்டைத் தேசிய இனப்பிரதேசத்தில் மட்டுமே இயங்கக்கூடிய வளங்களின் உபரியை ஒருவிதப் பண்டமாற்று அடிப்படையில் பெற்றுக்கொள்வது. உதாரணமாகத் தண்ணீரைப் பொறுத்த அளவில் கேரளாவும், ஆந்திராவும் உபரி மாநிலங்களாகும். அது மட்டுமன்று அவற்றின் நதிநீர் வீணாக எவ்வித முறையான பயன்பாடும் இன்றிக் கடலில் கலக்கின்றது. கேரளாவின் மொத்த நதி நீர்வளம் 2500 டி.எம்.சி.ஆகும். இதில் 9 சதவீதத்தை மட்டுமே கேரளா பயன்படுத்த முடிகிறது. எஞ்சிய நீர் வீணாகக் கடலில் கலக்கின்றது. இதில் மேற்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கும் நீரின் அளவு மட்டும் 1000 டி.எம்.சி ஆகும். இதில் ஒரு பகுதியைத் தமிழகத்துக்குத் திருப்ப இயலும். எடுத்துக்காட்டாக இந்த 1000 டி.எம்.சி. அளவில் வெறும் 50 டி.எம்.சி. அளவை மட்டுமாவது திருப்பினால் கோவை, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் புதிய பாசனப் பரப்பளவு பெருகும் சாத்தியம் உண்டு.
அதேபோல் ஆந்திராவின் கோதாவரியிலிருந்து 2300 டி.எம்.சி. நீர் அளவும் கிருஷ்ணா நதியிலிருந்து 1250 டி.எம்.சி. நீர் அளவும் வீணாகக் கடலில் கலக்கின்றது. இதில் கோதாவரி நீரில் 200 டி.எம்.சி.நீரை ஸ்ரீசைலம் வழியாகத் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கச் செய்யும் சாத்தியத்தை மத்திய நீர் ஆதாரக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேபோல கிருஷ்ணா நதிநீரை சென்னை வரை அல்ல, சிதம்பரம் வரையிலும் இணைக்க இயலும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நம் அண்டைத் தேசிய இனப் பிரதேசங்களான ஆந்திராவிலும் கேரளாவிலும் மட்டுமே பாய்ந்து வீணாகக் கடலில் கலக்கும் நதிகளின் உபரி நீரை நாம் பயன்படுத்தும் சாத்தியத்தைச் சிந்திக்கலாம். இதன்மூலம் தமிழகத்தின் மேற்கு, தெற்கு, வடக்குப்பகுதிகளில் புதிய பாசனப் பரப்பளவு பெருகக்கூடிய சாத்தியம் உண்டு. இதற்கு அண்டைத் தேசிய இனங்களுக் இடையில் பரஸ்பரம் நல்லுணர்வும் கூட்டுறவும் அவசியமானவை. இத்தகைய நீர்ப்பானத் திட்டங்களினால் பெரும் எண்ணிக்கை அளவில் பயன்படவிருக்கும் கூலிவிவசாயிகள், சிறுவிவசாயிகள் ஆகியோரின் ஒன்றுபட்ட வலுமிக்க அழுத்தங்கள் அவசியமானவை. இவ்வாறு வெறும் நீரின் அளவுக்குப் பதிலீடாகத் தமிழகம் தன் உபரிப் பொருளையோ புதிய பாசனப் பரப்பின் பயனில் ஒரு பகுதியையோ பண்டமாற்றாகக் கொடுக்கலாம். இது முதலாவதாக அமைகின்றது.
                இரண்டாவதாக ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனப்பிரதேசங்களில் பாயும் வளங்களின் பங்கீடுகுறித்துத் தேசிய இனங்களுக்கு இடையே ஜனநாயக ரீதியிலான விவாதம் இருந்தாக வேண்டும். இங்குக் காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்துத் தொடர்புடைய தேசிய இன அரசுகள் விவாதித்துக் கொள்வதே நல்லதாக இருக்கும். அதற்குச் சில அணுகுமுறைகளை உருவாக்கிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
அவை:
                1.             இன்று வரையிலான பாசனப் பரப்பளவுக்கு முதன்மை உத்திரவாதம் கொடுத்தல். அதாவது தமிழகத்தில் உள்ள 21 லட்சம் ஏக்கருக்கும் கர்நாடகப் பகுதியில் உள்ள 11 இலட்சம் ஏக்கருக்கும் முதன்மை உத்திரவாதம் அளித்தல். இதற்கு உகந்த விதத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்ததுக்கும் 2:1 என்ற வீதத்தில் காவிரியை முறைமாற்ற விடுவதற்று உகந்த ஏற்பாடுகளைச் செய்தல்.
                2.             இந்த இரண்டு மொத்தப் பாசனப் பரப்பளவுக்கும் மேலாகக் காவிரி நீர்    வரத்துள்ளதென மதிப்பிடப்பட்டால் இரண்டு மாநிலங்களும் தத்தம் பிரதேசத்தில் காவிரிபாயும் தூரத்தின் அளவுக்கு உரிய விகிதத்தில் அதாவது 49:36 என்ற அளவில் தமிழகமும் கர்நாடகமும் முறைமாற்றிப் பகிர்ந்து கொள்ளல்.
                3.             இப்போது கர்நாடகத்தில் 6 அணைகளும் தமிழகத்தில் ஒரு அணையும் உள்ளன. இப்பொழுது உள்ள 21 லட்சம், 11 லட்சம் பாசனப்பரப்புக்கு   நீர் உத்திரவாதம் செய்தான பின்னர், இதற்கு மேல் பாய்வதாக மதிப்பிடப்படும் நீரில் 49:36 என்ற அளவில் பிரித்துக் கொள்கின்ற பொழுது அதைத் தேக்கிக்கொள்ள புதிய அணைகள் கட்டுவதோ புதிய பாசனப்பரப்பைப் பெருக்குவதோ அந்தந்த மாநிலத்தின் விருப்பத்துக்கு உட்பட்டதாகும்.
                4.             இவற்றைக் கண்காணிக்கவும் ஏற்படும் தொழில் நுட்பச் சிக்கலைக் களையவும் இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த நிபுணர்குழு அமைக்கப்படுதல்.
                இத்தகைய அணுகுமுறையின் மாதிரி 1924 ஒப்பந்தத்தில் உள்ளது. இது இரு தரப்பாருக்கும் பேரளவு சமமானதாக உள்ளது. இதிலும் கூடச் சமனற்ற தன்மைகள் இருக்கின்றன. எனினும் இது இருதரப்புக்கும் ரொம்பவும் சங்கடம் தருவதாக இல்லை. இதைவிடுத்து மத்திய அரசின் நடுவர் மன்றம் கட்டைப் பஞ்சாயத்து வைப்பதைப் போல் 205 டி.எம்.சி. என்று அறிவிப்பதோ கர்நாடகத்தில் கலவரம் ஏற்பட்டவுடன் 180 என அதைக் குறைக்கலாமா என நரசிம்மராவ் யோசிப்பதாகச் சொல்வதோ முற்றிலும் நியாயமாகாது. 1980-81 முதல் 1989-90 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குள் வந்த காவிரி நீரின் ஆண்டுச் சராசரி 231.2 டி.எம்.சி. என்பதை வைத்துக் கொணடு நடுவர் மன்றம் 205 டி.எம்.சி.யை இடைக்காலத் தீர்ப்பாக வழங்குதல் கூட நியாயத்துக் பொருந்தாது. ஆனால் நமக்குச் சில ஆண்டுகளில் மிகவும் குறைவாகக் கூட (1987-89 103.9 டி.எம்.சி.) வந்திருப்பதனால் இதைக்கூட ‘ஆகா, ஓகோ எனப் புகழ வேண்டியுள்ளது. இந்த விதத்தில் இது ‘களிப்பூட்டும் கட்டைப் பஞ்சாயத்தாக உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரியில் 205 டி.எம்.சியை மட்டும் தமிழகத்திற்குக் கொடுத்து விட்டு எஞ்சிய நீரை வைத்துக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
                1974இல் கர்நாடகக் காவிரியின் பாசனப்பரப்பு 3.5 லட்சம் ஏக்கர் என இருந்தது. இப்பொழுது உள்ள 11 லட்சம் ஏக்கர் என உயர்ந்ததை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளதோடு, இனிமேல் புதிய பாசனப் பரப்பைப் பெருக்கக் கூடாது என்ற தடையும் விதித்துள்ளது. தடை இருப்பினும் 11 லட்சம் ஏக்கரை அங்கீகரித்திருப்பதும் 205 டி.எம்.சி. போக எஞ்சிய நீரை அங்கீகரித்திருப்பதும் கர்நாடகத்துக்குக் ‘களிப்பூட்டும் கட்டைப் பஞ்சாயத்து அம்சங்களாகும். ஏதோ சில நிகழ்வுகளால் மழையின் அளவு மிகவும் குன்றிப் போகின்றதெனில் இப்பொழுது கர்நாடகம் என்ன செய்ய இயலும் என்ற கவலையும் உள்ளது. எனவே இடைக்காலத் தீர்ப்பு இரண்டு தரப்பினருக்குமே நல்லது கெட்டதுகளை வழங்கியிருக்கிறது. அதன் தீர்ப்புக்கு ஓர் அணுகுமுறை இருந்தாக வேண்டும். முதலில் இன்றைய நாளில் உள்ள உற்பத்திச்சாதன அளவுக்கு உரிய நீர்ப்பாசன உத்திரவாதத்தை இரண்டு தரப்பாருக்கும் வழங்க வேண்டும்* (*உபரி இருப்பதாகக் கருதினால் அந்நீரைக் காவிரி பாயும் தூரங்களின் விகிதத்தைக் கொண்டு பகிர்ந்து கொள்ளுதல். இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றுதல் உகந்ததாக இருக்கும்). இதற்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் தர இயலாத அளவுக்கு ஏதேனும் ஓர் ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டால் இருக்கும் உற்பத்திச்சாதன அளவின் விகிதத்தின்படியே பற்றாக்குறையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
                இந்த ஆண்டு காவிரியில் நீர் எப்படியோ வந்துவிட்டது. அடுத்த ஆண்டு? அதற்குள் நடுவர்மன்றம் இறுதித்தீர்ப்பைக் கூற வேண்டும். கூறாமல் கூடத் தள்ளிக் கொண்டே போகலாம். அதுதான் அரசியல்வாதிகளுக்கு வசதி. இதை மீறிக் காவேரிச் சிக்கலை அணுக வேண்டும். இது அரசியல் ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் அணுகப்பட வேண்டும்.
                இதற்கு முதல்தடை அரசியல் கட்சிகளின் பிழைப்புவாதப் போக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கொள்கையும் ஆகும். இந்தியக் கட்சிகள் இந்திய அளவிலும், திராவிடக் கட்சிகள் தமிழக அளவிலும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. இவற்றை மீறியே தமிழகத்தின் ஜனநாயக அரசியல் நிகழ்வுப்போக்கு இனி நடந்தேறும்.
                இன்னொரு தடை, கன்னடத்தில் கிளப்பப்பட்டுள்ள தேசிய இனவெறி. இரண்டு மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதியின்மீது வரலாற்று ரீதியில் இன்னொரு தேசிய இனம் கொண்டிருந்த பங்கை மறுக்கும் வகையில் அங்குத் தேசிய இனவெறி கிளப்பப்பட்டுள்ளது. இதற்குரிய முகாந்திரம் இடைக்காலத் தீர்ப்பிலேயே உள்ளது. இந்தத் தேசிய இனவெறியை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டியது தமிழக ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.
                கர்நாடகத்தில் பாரம்பரியாக இருக்கும் தமிழர்கள் தொடர்ந்து அமைதியாக வாழ வேண்டும்; வரலாற்று ரீதியில் காவிரியில் தமிழர்க்கு உரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதைச் சீரழிக்கக் கிளம்பும் கன்னடத் தேசிய இனவெறியை எதிர்த்துக் கன்னட ஜனநாயச் சக்திகளோடு இணைந்து செயல்படுவது நீண்டகாலத்திற்கு நன்மை பயக்கும். தமிழர்கள் தாக்கப்பட்டுத் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில்கூடப் பெங்களூரிலும், மைசூரிலும் கன்னட அறிவாளிகள் கூட்டங்கள் நடத்தி அத்தாக்குதல்களைக் கண்டித்தனர் என்பதையும், அந்தக் கூட்டங்களில் புகுந்து கன்னடத் தேசிய இனவெறியர்கள் தாக்கினர் என்பதையும் நினைவு கூரலாம். மேலும் தாக்குதலைக் கண்டித்துக் கன்னட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கை கொடுத்துள்ளது. நிலைமை என்னவெனில் கர்நாடகத்திலும் புரட்சிகர, ஜனநாயக அரசியல் சக்திகள் மிகவும் குறைவு; எவ்வளவு குறைவாகவும் பலவீனமாகவும் இருப்பினும் அதனோடு இணைவதும் கன்னடத் தேசிய இனவெறிக்கு எதிராக அரசியல் நிகழ்வுகளை முன்வைப்பதும் தமிழக ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும் எனலாம்.
                இறுதியாகவும் முதன்மையாகவும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காவிரிச் சிக்கல், தமிழருக்குரிய தேசிய இனச் சிக்கல். இன்றும் சரியாகக் கண்டால் காவிரி பாயும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் சிக்கல். அதாவது நில உடைமையாளர் என வரிசைப்படுத்தினால் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், சிறு விவசாயிகள் என்று கூறலாம். கோயில்களுக்கும் மடங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலவுடைமை உள்ளது. இது குத்தகையானர்களிடம் உள்ளது அவர்களிடத்தில் இலட்சக்கணக்கான கூலிவிவசாயிகள் பணிபுரிகின்றனர். நிலப்பிரபுக்களின் பெருநிலக்குவியலும் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றின் நிலக்குளவியலும் தஞ்சை மாவட்டத்திலேயே அதிகம் உள்ளது. இதை விடுத்துக் கண்டால் பணக்கார விவசாயிகள், குத்தகை விவசாயிகள், சிறு விவசாயிகள், கூலி விவசாயிகள் என 50 லட்சம் மக்கள் திரள் காவிரியை நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் இன்றைக்குப் பல்வேறு சாதிய அமைப்புகளிலும் விவசாய சங்கங்களிலும் அரசியல் கட்சிகளிலும் திரட்டப்பட்டுள்ளனர்.
                பணக்கார விவசாயிகளில் பெரும்பகுதியினர் கவுண்டர்களாகவும், நாயுடுகளாகவும் உள்ளனர். முத்தரையர், வன்னியர், கள்ளர், பள்ளர், பறையல், சக்கிலியர் ஆகிய சாதியினர் பெரும்பகுதிக் குத்தகை விவசாயிகளாகவும் கூலி விவசாயிகளாகவும் சிறு விவசாயிகளாகவும் உள்ளனர். மேற்கு உத்திரப்பிரதேசம், அரியானா, பஞ்சாபின் ஒருபகுதி ஆகிய ஒருமித்த பிரதேசப்பரப்பில் வாழும் ஜாட் இனத்தைச் சார்ந்த பணப்பயிர் சாகுபடியாளர்களைப் போலக் காவிரிப் பாசனப் பரப்பளவில் ஒற்றைக்குணம் கொண்ட சக்தி இல்லை என்பது உண்மை தான். இவையெல்லாம் மக்களைத் திரட்டுவதற்குரிய தற்காலிகத் தடைகளாக இருப்பினும் காவிரியில் நீர் தொடர்ந்து வருவதற்குரிய உத்திரவாதம் இருந்தால் தான் இவர்கள் தங்கள் வாழ்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. மக்களிடத்தில் போராட்டத்துக்கு உரிய முன் முயற்சி உள்ளது என்பதை நடுவர் நீதிமன்றம் வரும் பொழுது தமிழகம் நீரூபித்தது. ஊர்வலம், பேரணி, மனிதச்சங்கிலி என்றெல்லாம் இலட்சக்கணக்கில் மக்கள் திரட்டப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இருப்பினும் மக்களிடத்தில் உள்ளார்ந்துள்ள போர்க்குணத்தை இது வெளிப்படுத்தியது.
                1977 இல் திரு.நாராயணசாமி அவர்கள் தலைமை யிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்களம் நடத்திய போராட்டங்கள் விவசாயிகளின் போர்க்குணத்தை வெளிப்படுத்தின. இவற்றின் பலவீனங்கள், பலம் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காவிரிப்பகுதியில் உள்ள பணக்கார விவசாயிகள், குத்தகை விவசாயிகள், சிறுவிவசாயிகள், கூலிவிவசாயிகள் ஆகியோரை ஒரு கூட்டுச் செயல்பாட்டு அமைப்புக்குள் திரட்டுவது தேவையானதாகும். இதை ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் கட்டுகிற சாத்தியம் இன்றைக்கு இல்லையென்றாலும் பகுதிபகுதியாக எங்கெங்குச் சாத்தியப்படுகிறதோ அங்கெல்லாம் அது மிகவும் சிறிய பகுதியாக இருந்தாலும் கட்டி விரிவுபடுத்த வேண்டுவது அவசியம் ஆகும்.
                இது தமிழர்க்குரிய தேசிய இனச்சிக்கல்; விவசாயச்சிக்கல் இதைக் கையிலெடுத்து நுண்ணிய அளவில் சாத்தியப்பட்ட இடத்தில் சரியாகச் செயல்படுவது தமிழகத்தின் ஜனநாயக வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும்.

«      தரகு முதலாளித்துவக் காங்கிரசு ஆட்சியாளர்களே!
«  கோடி கோடியாய் அந்நியக் கடன் வாங்கும் போது வற்றாத ஜீவ நதிகளில் ஓடும் நீரெல்லாம் கடலில் வீணாய்க் கலப்பது ஏன்?
«      தண்ணீருக்கான இனச் சண்டையில் மக்களின் இரத்தம் ஆறாய் ஓடுவது ஏன்?
«      தென்னக நதிகளை இணை!
«      காவிரிச் சிக்கலில் நடுவர் மன்றத் தீர்ப்பை உடனே அமல்படுத்து!
«      ஒருமைப்பாடு பேசுவது உண்மையானால் கர்நாடகத் தமிழருக்குப் பாதுகாப்பு கொடு!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மார்ச் 1992


1 comment: