Thursday, April 19, 2012

ஆற்று நீர் பகிர்தல் - மார்க்சிய லெனினிய பார்வை 2


முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!
முல்லைப் பெரியாற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெருவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணைக்கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!

முல்லைப் பெரியாறு அணை வரலாறு
பெரியாற்று நீரை வைகையோடு இணைக்க வேண்டும் என்ற எண்ணம் நெடுநாட்களாக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு இருந்தது. 1789 ஆம் ஆண்டு இராமநாதபுரம் அரசில் அமைச்சராக பணியாற்றிய முத்தருளப்பிள்ளை பெரியாற்று நீரைத் திருப்பி வைகையோடு இணைக்க முடியுமா என்று ஆராய ஒரு அறிஞர் குழுவை அமைத்தார். அவர்கள் இப்பகுதியை ஆய்வு செய்து இத்திட்டம் சாத்தியமே என்றனர்.
அணைச் சுவர்கள் கட்டுவதற்கான தொழில்நுட்பம் நமது முன்னோர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். அதாவது சுண்ணாம்பு, செங்கல்தூள், கருப்பட்டி, கடுக்காய், முட்டை இவைகளை கலந்து தயாரித்த நீரில் கரையா பசையை பயன்படுத்தும் கட்டுமானத் தொழில் நுட்பம் நமது முன்னோர்கள் அறிந்த ஒன்றுதான். நீரின் அழுத்தம் சுவரைத் தள்ளி உடைக்காமல் இருக்கக் கையாண்ட தொழில்நுட்பம், ஏற்கனவே நமது முன்னோர்களால் எல்லா ஏரி குளங்களும் உடையாத கரைகளைக் கொண்டதாக அமைக்கப் பின்பற்றப்பட்டதுதான். அணைச்சுவரின் ஒரு பக்கத்தை சாய்தளமாக அமைப்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட பென்னி குயிக் மேற்கூறப்பட்ட தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்தினார்.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இராமநாதபுரம் மற்றும் தென் தமிழக மன்னர் ஆட்சிகள் மீது ஆக்கிரமிப்புகள் செய்யாதிருந்தால் - ஏகாதிபத்திய தலையீடு இல்லாதிருந்தால், நமது ஆட்சியாளர்களால் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியிருக்க முடியும். அப்பொழுது இராமநாதபுரம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உட்படாத தனிநாடாக இருந்தது. இப்பகுதியை இராணுவ பலத்தின் மூலம் கைப்பற்றி கப்பம் கட்டுகிற பகுதியாக ஆக்குவதற்கு கிழக்கிந்தியக் கம்பெனி இராமநாதபுரம் மீதுத் தாக்குதல் தொடுத்தது. ஆங்கிலேயப் படையை வெல்லும் அளவிற்கு மன்னரிடம் இராணுவ பலம் இல்லை. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையில் (பிரிட்டிஷ்-டச்சு ஏகாதிபத்திய வாதிகளுக்கிடையே) இருந்த முரண்பாட்டை பயன்படுத்துவதற்கு மன்னர் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. 1795ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இராமநாதபுரத்தை கைப்பற்றியது. மன்னரைக் கைது செய்து சென்னை கோட்டையில் சிறைவைத்தது. மன்னர் 1805ல் இறந்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டமுடியவில்லை. அது கடைபிடித்த காலனியக் கொள்கையே அணை கட்டுவதற்கு தடையாய் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினர் பொது மராமத்து பணித் துறைகளை அறவே புறக்கணித்து வந்தனர். இதனால் விவசாயத்தை மோசமாக்கியும்; விவசாயிகளை ஒடுக்கியும் விவசாயத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்தினர்.
உழவரின் விளைச்சலிலிருந்து அதிக அளவு உபரியை வலுக்கட்டாயமாக பறிப்பது கிழக்கிந்தியக் கம்பெனியின் தொடக்ககால கொள்கையின் அடிப்படையாக இருந்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அடிப்படை ஆதாரமாக இருந்த நிலவாடகையுடன், கம்பெனி ஆட்சி நாட்டை நேரடியாக சுரண்டுவதை, அதாவது பிற அரசாங்கத்தின் வருவாயையும் அபகரிப்பதை இணைத்துக் கொண்டது. “நிதிச் சுரண்டலுக்கான இந்த வேட்கை இயல்பாகவே (naturally) பொதுப்பணித் துறைக்கான செலவை மிகக் குறைந்தபட்ச அளவிற்கு குறைத்துவிட்டது. 1851-52ஆம் ஆண்டு மொத்த வருவாய் 19.8 மில்லியன் பவுண்ட். இதில் 0.17 மில்லியன் பவுண்ட் அளவுக்கு அதாவது மொத்த வருவாயில் அரை சதவீதம் மட்டுமே சாலைகள், கால்வாய்கள் வெட்டுதல், பாலங்கள் மற்றும் பிற பொது மராமத்து பணிகளுக்காக செலவழிக்கப்பட்டது.
ஒருபுறம் பொது மராமத்துப் பணிகளை புறக்கணித்து விவசாயத்தை சீரழித்ததோடு, மறுபுறம் சிறந்து விளங்கிய நூற்பு மற்றும் நெசவுத் தொழில் ஆகிய குடிசைத் தொழில்கள் நீராவி இயந்திரத்தின் சக்திமூலமும், வர்த்தக சுதந்திரம் ஆற்றிய வினையினாலும் நசுக்கப்பட்டது.
வரிவருவாயை உயர்ந்தபட்சமாக்குவதன் நோக்கத்தோடு ஏற்கெனவே இருந்த நிலவுடைமை உறவுகளில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள் விவசாய நில உறவுகளில் மாற்றம் கொண்டுவந்தனர். ஜமீன்தாரி, ரயத்வாரி முறைகளைப் புகுத்தினர். இந்த முறைகள் மக்களுக்கானதாகவோ, சாகுபடியாளர் களுக்கானதாகவோ, நிலவுடைமையாளர் நலனுக்காகவோ கொண்டுவரப்பட்ட மாற்றமல்ல. அரசாங்கத்தின் வரிவசூலை அதிகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களே ஆகும்.
நிதிவருவாயை அதிகரிக்கும் உந்துதலிலிருந்தே இந்திய சமஸ்தான அரசுகளை கைப்பற்றிக்கொள்ளும் முறையும் வந்தது. 1848ல் கிழக்கிந்தியக் கம்பெனி பெரும் நிதிச்சிக்கலில் மூழ்கிவிட்டிருந்தது. ஆகையால் ஏதாவதொரு வழியில் நிதி ஆதாரங்களை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டது. அதை அடைவதற்கான ஒரே வழி மன்னர்களை ஒழித்து பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளை விரிவாக்குவது என்பதாகும். இவ்வாறு 1848-54 வரையிலான காலப்பகுதியில் ஒரு டஜன் சுயேட்சையான அரசுகளை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குள் வலுக்கட்டாயமாக இணைத்தார்கள்.
பிரிட்டனில் 1854ல் வணிக முதலாளித்துவத்தின் கையிலிருந்து ஆலை முதலாளிகளின் கைகளுக்கு ஆட்சி வந்தது. அதன் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் நிலவரிவருவாயை அடிப்படையாகக் கொண்டதிலிருந்து, ஆலை முதலாளிகளின் நலன்களுக்காக இந்தியாவை தங்களது சந்தையை விரிவுபடுத்துவதற்காகவும், மூலப்பொருட்களை வழங்கும் பிரதேசமாகவும் கொண்டு சுரண்டும் முறைகளை கொண்டதாக அது அமைந்தது. ஆனால் அது உடனடியாக இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை எதிர்த்து 1857ல் நடந்த சிப்பாய்கலகம் விவசாயிகளால் நடத்தப்படவில்லை. சிப்பாய்களால் நடத்தப்பட்டது. விவசாயத்துறையில் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினரும் இதில் ஈடுபட்டனர். பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட மன்னர்கள் மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் உரிமைகள் பறிக்கப்பட்ட ஜாகிர்தார்கள், இனாம்தார்கள் உள்ளிட்டவர்களும் பங்கு கொண்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாக அவர்கள் கலகம் செய்யும் சிப்பாய்களுடன் பொது உடன்பாட்டிற்கு வந்தார்கள்.
சிப்பாய் கலகத்திற்குப்பின் பிரிட்டிஷ் மகாராணியார் புதிய ஏகாதிபத்தியக் கொள்கைகளை 1858 ஆம் ஆண்டில் பின்வருமாறு பிரகடனம் செய்தார். மகாராணியின் பிரகடனம் 1854ல் ஏற்பட்ட காலனியக் கொள்கை மாற்றத்திற்கு ஏற்றவாறே அமைந்திருந்தது. “இந்தியர்கள் தங்களுடைய மூதாதையர்களிடமிருந்து பரம்பரைபரம்பரையாக பெற்ற நிலவுடைமைகளோடு பிணைந்திருக்கிற உணர்வுகளை நாங்கள் அறிவோம், அவற்றை மதிக்கிறோம், அதனுடன் இணைந்துள்ள அனைத்து உரிமைகளையும் அரசினுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு உட்பட்டு அவற்றை பாதுகாக்க விரும்புகிறோம் என்கிறது அந்த பிரகடனம்.
இதற்குப் பின்னர்தான் பிரிட்டனில் நிதி மூலதனம் உருவாகி மூலதன ஏற்றுமதி என்றக் கட்டத்தை அடைகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் முதலீடு என்பது இரயில் போக்குவரத்தோடு தொடங்குகிறது. சந்தை நலன்கள் மற்றும் மூலப்பொருட்களின் தேவைகளுக்காக முதலீடு செய்வது மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் பிரிட்டிஷ் ஆட்சியால் வேளாண்மைத் துறையில் நீர்பாசனத் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைக் கட்டுவதற்கான பொறுப்பு பென்னிக் குயிக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் காலத்தில் அதன் கொள்கை வரிவசூல் செய்வது, அரசாங்கத்தை கொள்ளையடிப்பது நிதி வருவாய்க்கு அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதனால் உற்பத்தியை பெருக்குவதற்கோ, அணைக் கட்டுவதற்கோ வழியில்லை. ஆலை முதலாளித்துவ வர்க்கங்கள் ஆட்சியை பிடித்தப்பின் அவர்களின் கொள்கைகள் தங்கள் உற்பத்திக்கு மூலப்பொருட்கள் பெறுவது, உற்பத்திப் பொருள்களுக்கு சந்தை ஏற்படுத்துவது என்பதாக இருந்தது. அதற்கு அடுத்தக்கட்டமான நிதி மூலதனத்தின் கட்டத்தில்தான் மூலதன ஏற்றுமதிக் கொள்கைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அணைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அணைக்கட்டி முடிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தமும் இன்றைய சிக்கலும்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நதிநீர் பகிர்வு இராணுவ பலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தமது நேரடி காலனிய பிரதேசங்களுக்கு, அண்டையிலிருந்த மன்னராட்சிக்குட்பட்ட நாடுகளிலிருந்து நீரைக் கொண்டுவர, இராணுவத்தின் வலிமை கொண்டே ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் 1886; காவேரி ஒப்பந்தம் 1924; நேபாளத்தோடு போட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல ஒப்பந்தங்கள் அவ்வாறுதான் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரசின் வருவாயை அதிகப்படுத்துவதும் மூலப்பொருட்களை பெறுவதற்கான நோக்கம் கொண்டதேயன்றி இந்திய, தமிழக விவசாயிகளின் நலன்களுக்கானது அல்ல.
முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம், திருவாங்கூர் மகாராஜா வைகாசம் திருமால் II சார்பாக வெங்கம் ராமய்யர் அவர்களுக்கும், சென்னை இராஜதானி கவர்னர் ஹானிங்டன் அவர்களுக்கும் இடையே 29.10.1886ல் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கானது. 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் என்றால் முடிவில்லாதது என்று பொருள். உலக அளவில் ஓர் ஒப்பந்தம் 999 வருடங்களுக்கு செய்யப்படுகிறது என்றாலே, சட்டரீதியாக நிரந்தரமானது என்றே பொருள்படும்.
1886ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மூலம், நீர்வளம் மிகுந்த கேரள மாநிலத்திலிருந்து நீர்பற்றாக் குறையுள்ள தமிழ்நாட்டின் வறட்சியான பகுதிகளுக்கு நீர்வழங்கப்படுகிறது. கேரள மாநில ஆட்சிப் பகுதிக்குள் அமைந்துள்ள அணையை குத்தகை ஒப்பந்தப்படி ஆரம்பத்திலிருந்தே சென்னை மாநில அரசும், பின்னர் தமிழ் மாநில அரசும் பராமரித்து பயன்படுத்தி வருகின்றன.
1970களில் இடுக்கி அணைக் கட்டப்பட்ட பின்புதான் இப்பிரச்சினைத் துவங்கியது. புனல் மின் நிலையத்திற்காக கேரள அரசுக் கட்டியுள்ள இடுக்கி அணைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் மின் உற்பத்தி பாதிக்கிறது. இடுக்கி அணைக்கு தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்துதான் வரவேண்டும். தண்ணீர் வராவிட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தை குறைத்தால்தான் இடுக்கி அணைக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் முல்லைப் பெரியாறு தண்ணீர் முழுவதும் சென்னை ராஜதானிக்குத்தான் முழு உரிமை என 1886ஆம் ஆண்டு ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. மேலும் நீரோட்டங்களின் கீழ் பகுதியில் வாழும் மக்களின் நீர்த் தேவைகளை மேல்பகுதியிலுள்ளவர்கள் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாகிறார்கள் என்ற பன்னாட்டு நீர்வளப் பயன்பாட்டுக் கொள்கையின்படி முல்லைப் பெரியாற்றில் கேரள மக்களின் உரிமையை இவ்வொப்பந்தம் மறுக்கிறது. ஆகையால் சென்னை இராஜதானிக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையில் 123 வருடங்களுக்கு முன் 1886ல் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறையில் இருந்துவரும் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை கேரளா ஒப்புக்கொள்ள மறுக்கிறது. கேரள மாநில அரசும் ஆளும் வர்க்க மற்றும் திருத்தல்வாத கட்சிகளும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
மத்திய அரசால் திருவனந்தபுரத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இரு மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் மாநாட்டில், அப்போது கேரள முதலமைச்சராக இருந்த ஈ.கே.நாயனார், தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களிடம் பின்வருமாறு கூறினார். “முன்னாளைய ஒரு சமஸ்தான அரசிற்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கும் இடையில் ஏற்பட்ட, வெளிப்படையாகவே தெரிகின்ற ஒரு சமனற்ற ஒப்பந்தத்தை, மாறியுள்ள சூழ்நிலைமை களை கணக்கில் கொள்ளாமல், எந்தவிதமான பரிசீலனையும் இன்றி நடப்பிலுள்ள சட்டங்களுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை நீண்ட காலம் பல தலைமுறைகள் சட்டப்படி கட்டாயமாகத் தொடரவேண்டும் என்று கூறுவது கேள்விக் குறியாகும் என்று அவர் கூறினார்.
மேலும், கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் டி.எம்.ஜேக்கப் தனது பேட்டி ஒன்றில் கீழ்கண்டவாறு இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
1) ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட பெரியாறு நீர்த்தேக்க ஒப்பந்தம் (திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் சென்னை இராஜதானிக்கும் இடையே போடப்பட்டது) தற்காலத்திற்கு செல்லுமா என்பதை சட்டவல்லுனர் கொண்டு ஆராயப்படும்.
2) சுதந்திர இந்திய சட்டப்படி ஆங்கிலேய காலத்திய 1886ஆம் ஆண்டு ஒப்பந்தம் செல்லாது.
3) காலாவதியான பெரியாறு நீர்த்தேக்க ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு முழுப்பலனையும் அனுபவித்து வருகிறது.
4) மேற்கண்ட பிரச்சினைகளை மனதில் கொண்டு கேரள அரசின் முழுநலனுக்கு ஏற்றவாறு முடிவு காணப்படும்.
இவ்வாறு 1886ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கேரளம் முனைகிறது. 1782க்குப் பின்னும் 1947க்கு முன்பும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இயற்றப்பட்ட காலனியாதிக்க சட்டங்கள், அரைக்காலனிய இந்தியாவில் சட்டப்படி நடைமுறையில் இருக்கும்போது, 1886 ஒப்பந்தமும் செல்லக் கூடியதேயாகும். சட்டப்படி இது ரத்து செய்ய முடியாமற் போகலாம் என்ற நிலையிலிருந்து கேரள தரகு முதலாளித்துவ, திருத்தல்வாத அரசியல் வாதிகள் இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று போராடுவதற்கு மாறாக அணைக்கு ஆபத்து என்ற புரளியை கிளப்பி விடுகிறார்கள். திருத்தல்வாத கம்யூனிஸ்ட்டு கட்சிகளைப் பொறுத்த வரையில் இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்ற அவர்களின் நிலைபாட்டின் காரணமாக அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை மறுப்பதுதான் ஒப்பந்தத்தை எதிர்க்காததற்குக் காரணமாகும்.
முல்லைப் பெரியாறு அணை 82 ஆண்டு பழமையானது என்று 1979ல் பிரச்சினையை கேரளா கிளப்பியது. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் கேரள முதல்வர் அச்சுத மேனன் அவர்களுக்கும் இடையில் மத்திய நீர்வளக் கமிஷன் (CWC) தலைவர் சி.ஏ.தாமஸ் அவர்கள் முன்னிலையில் 25.11.1979ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. 152 அடி நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைத்துக்கொள்ளவும், மூன்றுக் கட்ட மராமத்துப் பணிகள் முடிவுற்றவுடன் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்றுக் கட்டப் பணிகள் முடிந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் கேரளா ஒப்பந்தப்படி செயல்பட மறுக்கிறது. பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு மறுப்பைத் தெரிவித்ததால் பிரச்சினை 1998ஆம் ஆண்டு இரு அரசுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாணலாம் என உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவை எட்ட முடியாத நிலையில், உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளின் படி அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தலாம் எனவும், முழு மராமத்துப் பணிகள் முடிந்தவுடன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என பிப்ரவரி 2006ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக கேரள அரசு தனது சட்டப்பேரவையில் கேரள பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு (சட்டத்திருத்த) மசோதா 2006, என்ற பெயரில் ஒரு சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு (2011) செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆனந்த் கமிட்டியிடம் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் கீழே புதிய அணை ஒன்று கட்டப் போவதாக திட்ட அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அறிக்கையின் பக்கம் 37ல் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் எவ்விதமான பாரம்பரிய உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் கேரள சட்டமன்றம் கூடி அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு புதிய அணைக் கட்டவேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கிற முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு ஆனந்த் தலைமையிலான நிபுணர்குழு அறிக்கையும், அதன் மீது உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பும் தமக்கு சாதகமாக இருக்காது என கேரளா கருதுகிறது. எனவே அவர்கள் முல்லைப்பெரியாறும், அணையும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகின்றனர்.
முல்லைப் பெரியாறும் அதில் அமைந்துள்ள அணையும் கேரளாவின் பகுதியிலேயே அமைந்துள்ளது; ஆற்றின் ஒரு பகுதிகூட எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் துவங்கவோ அல்லது அதன் வழியாக செல்லவோ இல்லை. தமிழ் நாட்டிலிருந்து பெரியதாக சொல்லிக்கொள்கின்ற அளவில் இல்லாத ஒரு சிற்றோடைத்தான் ஆற்றில் கலக்கிறதேத் தவிர அந்த ஆற்றின் நீரோட்டப் பாதை முழுவதும் கேரளாவிற்குள்ளேயே ஓடி ஆல்வாயை அடைகிறது என்று கேரள ஆளும் வர்க்கங்களும், அரசியல் கட்சிகளும் கூறுகின்றன. எனவே முல்லைப்பெரியாறு இரு மாநில ஆறு என்று உரிமை கோருவதும், மாநிலங்களுக் கிடையிலுள்ள நீர்தாவா சட்டம் பொருந்தும் என்று வாதிடுவதும் தவறு என்று கூறுவதோடு, அணையும்கூட கேரளப் பகுதியில்தான் உள்ளது என்றும், எனவே ஆறும் அணையும் கேரளாவிற்கே சொந்தம் என்று கூறுகின்றனர்.
கேரள ஆளும் வர்க்கங்களும், அவர்களின் அரசியல் கட்சிகளும் இவ்வாறு கூறுவதன் உண்மையான பொருள் என்ன? ஆறும் அணையும் தங்களுக்கே சொந்தம் என்பதுமட்டுமல்ல தமிழகத்திற்கு அதில் எவ்விதமான உரிமையும் இல்லை என்பதேயாகும். முல்லை பெரியாறும், அணையும் கேரளாவிற்கே சொந்தம் என்பதில் ஏதேனும் உண்மை உண்டா? எள்முனையளவு கூட உண்மையில்லை.
முல்லைப் பெரியாறு இரு மாநில ஆறு
முல்லைப் பெரியாறு தமிழகத்தில்தான் உருவாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியான சிவகிரி உச்சியில், தேவிகுளத்துக்கு 80 கி.மீ தெற்கே, 7000 அடி உயரத்தில் பிறந்து, 232 கி.மீ நீளம் ஓடுகிறது. சிவகிரியில் பிறக்கும் பெரியாறு, தெற்கு முகமாக ஆழமான பள்ளத்தாக்குகளுக்கு இடையே அடர்ந்த காடுகளுக்கிடையில் ஓடி, 16வது கி.மீட்டரில் முல்லை ஆறுடன் இணைகிறது. பிறகு மேற்கு முகமாகத் திரும்பி மீண்டும் மலைகளிடையே பாய்ந்து 11வது கி.மீட்டரில்தான் பெரியாறு நீர்த்தேக்கம் அமையக்காரணமான அணையை அடைகிறது. மலைகளுக்கிடையே ஓடி, வண்டிப்பெரியாறில் தென்படுகிற முல்லைப் பெரியாறு பின்னர் கட்டப்பனையாறு, செருதோனியாரு, எடமலையாறு போன்ற ஆறுகளை இணைத்துக் கொண்டு ஆல்வாய் எனும் இடத்தில் அரபிக்கடலை அடைகிறது.
இதே ஆறு, கம்பம் பள்ளத்தாக்கு வழியே திரும்பி சுருளியாறு, வைகையாறு போன்றவற்றுடன் இணைந்து மதுரையைத்தாண்டி, இராமநாதபுரத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் “பாக் நீர் சந்திப்பை நோக்கிப் பாய்கிறது. முல்லைப் பெரியாறு இரண்டு கடல்களில் கலக்கிறது. இரண்டு ஆல்வாய்களை இணைக்கிறது. எனவே முல்லைப் பெரியாறு கேரள ஆளும் வர்க்கங்கள் கூறுவதுபோல ஒருமாநில ஆறு அல்ல. அது இரு மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுதான். எனவே முல்லைப் பெரியாறு இரு மாநிலங்களுக்கும் சொந்தமான ஆறுதான்.
அணை தமிழகத்துக்கு சொந்கமானது
அடுத்து, முல்லைப் பெரியாறு அணைக் கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவைச்சார்ந்தது, எனவே அணை கேராளாவிற்கே சொந்தம் என்ற கேரளாவின் வாதமும் ஏற்கத்ததகுந்தது அல்ல. முல்லைப் பெரியாறு அணை கேரளாவின் ஆட்சிப் பிரதேசத்தில் அமைந்திருந்தாலும் அது அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர்கள் 92 சதவீதம் வாழ்ந்த பகுதியாகும். அது தாய் தமிழகத்தோடு சேர வேண்டிய பகுதியாகும். 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தாய்தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று பெரும் போராட்டம் நடந்தது. 1889 வரை இப்பகுதிகள் திருவாங்கூருக்கு சொந்தமான பகுதிகளாக இருந்ததில்லை. தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியர்களின் இறையாண்மைக்கு உட்பட்ட மதுரை நாயக்கர்களின் அதிகாரவரம்பிற்குள் 1889 வரை இருந்துள்ளன.
1956ல் மொழிவாரி மாநில பிரிவினையின்போது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் இல்லாத கேரளம் தலையில்லாத முண்டம் போன்றது என்று கூறி அதை கேரளாவோடு இணைக்கவேண்டும் என்று கேரளாவினர் கூறியதை ஏற்று நேரு அப்பகுதியை கேராளாவோடு இணைக்க இசைந்தார். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராசரோ மேடாக இருந்தால் என்ன? குளமாக இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாவில்தானே உள்ளது என்று அகில இந்திய தேசியம் பேசி தமிழகப் பகுதிகளை கேரளாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தார். திராவிட இயக்கங்களோ, திராவிட தேசியம் பேசி தமிழகப்பகுதிகள் பறிபோவதை எதிர்க்கவில்லை. தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமைக்காண இயக்கத்தின் பலவீனமே, தமிழகப் பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்படுவதை தடுக்க முடியாமல் போனது.
அப்பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்ட பிறகு, மலையாளிகள் அங்கு அதிகமாக குடியமர்த்தப்பட்டனர். இன்றும் இப்பகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்கு அவர்களின் மொழி உரிமை, கல்வி உரிமை, பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதோடு வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இது போன்று மலையாளம் அதிகம் பேசும் மக்களை கொண்ட சிறு பிரதேசங்கள் நாகர்கோவில் பகுதியில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே 1956ல் மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சீர் செய்து அந்தந்த மொழி பேசும் மக்களை அதிகம் கொண்ட பிரதேசங்கள் அந்தந்த தேசிய இனங்களோடு இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தம் என்பது நிலைநாட்டப்பட வேண்டும். அணை சொந்தமானால்தான் ஆறு தமிழகத்திற்கு உரிமையானது என்பதையும் நிலைநாட்ட முடியும்.
முல்லைப் பெரியாறில் தமிழக உரிமையைப் பாதுகாப்போம்
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், இராணுவ வலிமையைக் கொண்டு திருவாங்கூர் மன்னரோடு செய்து கொண்ட, ஒரு சமனற்ற 999 வருட ஒப்பந்தமே இறுதியானது என்று தமிழக ஆளும் வர்க்கக் கட்சிகள் கூறுகின்றன. மாறுகின்ற சூழ் நிலைமைகளை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், முல்லைப் பெரியாற்று நீர் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தம் என்றும், அணை மீது முழு உரிமையும் தங்களுக்கே என்றும் கூறுகின்றன. இவ்வாறு எல்லாக்காலத்திற்கும் பொருத்தமான, மாற்றத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத ஒரு ஒப்பந்தம் சரியென வாதிடுவது ஏற்கத்தகுந்தது அல்ல. மாறாக தமிழக ஆளும் வர்க்கங்களின் மேற்கண்ட நிலைபாடுகள் கேரளமக்களின் நலன்களுக்கு எதிரானதே. மறுபுறம் தமிழகத்தின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து தங்களது உரிமைகளை முன்வைக்காமல், ஆறும் அணையும் தங்களுக்கே சொந்தம் என்றும், அணைக்கு அபத்து என்று கேரளா பீதியூட்டுவதும் ஏற்கத்தகுந்தது அல்ல. அது தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும். முல்லைப் பெரியாறு இரு தேசிய இனங்களுக்கும் சொந்தமான ஆறு என்பதை ஏற்று, அணை தமிழகத்திற்கு சொந்தம் என்பதை ஏற்று, ஆற்று நீரில் இரு மாநிலங்களுக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் புதிய ஒப்பந்தங்கள் காணுவதன் மூலம் மட்டுமே முல்லைப் பெரியாற்றுச் சிக்கலைத் தீர்க்க முடியும். அவ்வாறு புதிய ஒப்பந்தம் காணுவது என்பது தமிழகம் இதுவரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமையை அங்கீகரித்து செயல்படுத்திக் கொண்டுதான் புதிய ஒப்பந்தங்களை காண வேண்டும். எனவேதான் கேரளா உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கூறுகிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அணையின் நீர் மட்டத்தை 152லிருந்து 136 அடியாக குறைத்ததால் தமிழகம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முல்லைப் பெரியாற்று நீர் தடுக்கப்பட்டதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாசன வசதியின்றி 1,44,000 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. 57,000 மெட்ரிக் டன் உணவுதான்ய உற்பத்தி வீழ்ந்துவிட்டது, 14000 டன் கால் நடைத்தீவனம் உற்பத்தி இழப்பு, 10 ஆயிரம் டன் பால்பொருள் உற்பத்தி இழப்பு, ஒரு கோடியே 65 லட்சம் வேலை நாட்கள் இழப்பு என்பதோடு 40 லட்சம் பேருக்கு குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு வேறுவழியில் ஈடுகட்ட முடியாதது. எனவேதான் தமிழகத்தின் பழைய உரிமையை நிலைநாட்டும் வகையிலும், கேரளாவின் உண்மையானத் தேவைகளையும் கணக்கில்கொண்டு புதிய ஒப்பந்தங்களைக் காண வேண்டியுள்ளது.
மேலும் கேரள ஆளும் வர்க்கங்கள் அணைக்கு ஆபத்து என்று பீதியூட்டி அணையை உடைக்க வேண்டும், புதிய அணைக் கட்டவேண்டும் என்று கோருவதை ஏற்கமுடியாது. ஏனெனில் அணைக்கு ஆபத்து இல்லாமல், நீர்மட்டத்தை 136 அடியாக வைத்துக் கொண்டே நீர் சிக்கலை தீர்க்க முடியும். அதாவது முல்லைபெரியாற்றின் நீர் மட்டத்தில் 70வது அடியில் இன்னொரு சுரங்கம் வெட்டி இரண்டாவது கால்வாய் அமைப்பதன் மூலம் அணைக்கு ஆபத்து இல்லாமல் தமிழகத்திற்கு தண்ணீரை வழங்கமுடியும். இவை அனைத்தையும் கணக்கில்கொண்டுதான் புதிய ஒப்பந்தங்களைக் காணவேண்டியுள்ளது.
அதற்கு நீர் மிகையாக உள்ள கேரளத்திலிருந்து, நீர் பற்றாக்குறையாக உள்ள தமிகத்திற்கு நீரைத் திருப்பிவிட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் பிரச்சினைகள் தீர்க்கபடவேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பரிசீலிப்போம்.
மிகு நீரை பயன்படுத்தலும் நதிநீர் இணைப்பும்
கேரளாவில் ஆண்டு சராசரி மழை அளவு 3000 மி.மீட்டராகும். ஆனால் தமிழகத்திலோ அது வெறும் 1100 மி.மீட்டர்தான். கேரளா இந்தியாவிலேயே அதிக மழை பொழியும் மாநிலங்களில் இரண்டாவதாக திகழ்கிறது. தமிழகமோ மழை குறைவாக பொழியும் மாநிலங்களில் மூன்றாவதாக உள்ளது. மிகு நீரை பகிர்ந்து கொள்வது என்ற பிரச்சனை தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் உள்ள பிரச்சினை மட்டுமல்ல. அது உலகு தழுவிய அளவிலும், நாடு தழுவிய அளவிலும் நிலவுகின்ற ஒரு பிரச்சினையாகும்.
இந்தியாவில் வடக்கே கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா ஆற்று வடிநிலப்பகுதிகளின் பரப்பு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் மட்டுமே. எனினும் அங்கு கிடைக்கும் நீர்வளம் நாட்டின் மொத்த நீர் வளத்தில் 60 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் வடக்குப்பகுதியின் மிகு நீர் வங்காள விரிகுடாவிலும், கேரளாவில் பெய்யும் மழையின் 90 சதவீத நீர் அரபிக்கடலிலும் வீணாகக் கலக்கின்றன. இதன் விளைவு மழைக்காலங்களில் வடமாநிலங்களில் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்படுகின்றன. நாட்டின் தென்பகுதியோ வறட்சியால் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றன. ஆக நமது நாட்டில் ஒரு பகுதியில் கிடைக்கும் நீர்வளம் அங்கு தேவைப்படும் நீர்த்தேவையைவிட மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவகவோ இருப்பது தெளிவாகிறது. நாட்டில் ஓடும் நதிகளை இணைப்பது ஒன்றுதான் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வழியாகும்.
பன்னாட்டு நீர்வள பயன்பாட்டுக் கொள்கைகளின்படி நீர்வளமானது மனித குலத்தின் பொதுச்சொத்தாக கருதப்படுவதால், நீரோட்டங்களின் மேல்பகுதியில் வாழும் மக்கள் கீழ்பகுதியில் வாழும் மக்களின் நீர்த்தேவைகளையும் (அளவில் மட்டுமல்லாது தரத்திலும்) பூர்த்தி செய்ய வேண்டியவர்களாகின்றனர். எனினும் இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையில் நீர்பற்றாக்குறையின் காரணமாக நதி நீரை பகிர்ந்து கொள்வதில் சர்வதேச சட்டங்களை செயல்படுத்துவதில் கடும் சிக்கலையும், பூசல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பூசல்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி நதிநீர் இணைப்பேயாகும்.
நீர்வளம் அதிகமாக உள்ள மாநிலங்களிலிருந்து நீர்வளம் குறைந்த மாநிலங்களுக்குத் தண்ணீரை திருப்பிவிடுவது என்பது பொதுவான சமூக வளர்ச்சி நலன்களிலிருந்தும், இருபகுதி மக்களின் நலன்களிலிருந்தும் அவசியமானதாகும். அவ்வாறு தண்ணீரைத் திருப்பி அனுப்புவது என்பது பல்வேறு ஆற்றுப் படுகைகளை இணைக்கின்ற நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலமே சாத்தியமாகும். அவ்வாறு நதிகளை இணைப்பது என்பது வெறுமனே பாசன வசதி ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. மாறாக புனல் மின்சாரம் தயாரித்தல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் குடிநீர் போன்ற பல்வேறு திட்டங்களுடன் நதிநீர் இணைப்பு சேர்க்கப்படவேண்டும். அதன் மூலம் நீர் வழங்குகின்ற பகுதி மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வது என்ற பொதுத்திட்டத்தின் மூலம் மட்டுமே நதிநீர் பகிர்வு என்பதும் சாத்தியமானதாகவும், சரியானதாகவும் அமையும். மேலும் நதிநீர் இணைப்பு என்பது எதேச்சதிகார வழிமுறைகள் மூலம் அல்லாது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் (தேசிய இனங்களின்) முழு ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
நதிகள் இணைப்பு என்பது நீர்பாசனத்திட்டத்தோடு, நீர் மின் திட்டம், நீர்வழி போக்குவரத்து மற்றும் குடி நீர் திட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு திட்டம்தான் எரிபொருள்களை சிக்கனப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அமையும். மேலும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும். கடல் வழி போக்குவரத்துடன் உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தும் இணைக்கப்படுவதன்மூலம் பொருள் போக்குவரத்தில் ஒரு புரட்சி ஏற்படும். இவ்வாறு நதி நீர் இணைப்பு வேளாண்மை வளர்ச்சிக்கு உதவுவதுடன் தொழில் புரட்சிக்கும் வித்திடும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். நாட்டின் சுயசார்புக்கு ஒரு அடித்தளமாக அமையும். அமெரிக்கா, ஐரோப்பா, இரசியா போன்ற நாடுகளும் கூட வெற்றிகரமான நதி நீர் இணைப்புகள் மூலமே வளர்ச்சியடைந்தன என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறில் தமிழகத்திற்கும் சம உரிமை
எனவே மேற்கண்ட மிகு நீரைப் பயன்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் நிலவும் முல்லைப் பெரியாற்று நதி நீர் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியும், தீர்வுகாணவும் வேண்டும். உண்மையில் கேரளம் முல்லைப் பெரியாற்று நீரைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவே விரும்புகிறது. முல்லைப் பெரியாற்று நீர் இரு மாநிலங்களுக்கும் சம உரிமை என்ற அடிப்படையில், கேரளம் தமக்குரிய நீரை இடுக்கி அணையில் தேக்கி மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அவ்வாறு நீர் மின்சாரத்திற்கு பயன்பட்ட பிறகு அந்த நீர் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக அரபிக் கடலில் கலக்கும். மாறாக, கேரளாவிற்குரிய நீரையும் தமிழகத்தின் பக்கம் திருப்புவோமானால் தமிழகத்தில் நீர் மின்சாரம் தயாரித்தப் பிறகு அந்த நீர் பாசனத்திற்கு முழுவதுமாக பயன்படும். தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் கேரளாவிற்குரிய பங்கை வழங்க முடியும். இவ்வாறு தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் முல்லை பெரியாறு சிக்கலுக்கு எளிமையாக தீர்வு காண முடியும்.
காலனிய ஆதிக்கவாதிகள் போட்ட ஒப்பந்தமே சரியானது என்றும், ஆற்றின் நீர் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தம் என்றும் கூறி தமிழக ஆளும்வர்க்க கட்சிகள் குறுகிய தேசிய வெறியை தூண்டுவதை ஏற்கமுடியாது. அதேபோல் அணைக்கு ஆபத்து, அதனால் புதிய அணை கட்டவேண்டும் என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு பாதுகாப்பு என்று கூறி கேரள ஆளும் வர்கங்கள் குறுகிய தேசிய வெறியைத் தூண்டுவதையும் ஏற்கமுடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் கேரளாவிற்கு பாதுகாப்பு என்பது தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுப்பதற்கான ஒரு தந்திரம்தான். மாறாக தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவிற்கு மின்சாரம் என்பதுதான் இருதேசிய இனமக்களின் நலன்களுக்கு உகந்ததாகும். அதனடிப்படையில் முல்லைப்பெரியாற்று சிக்கலைத் தீர்வுகாண முடியும். ஆனால் அண்மையில் கேரள முதல்வர் நதி நீர் இணைப்புக்கான ஆணையை பிறப்பித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆதரிக்க முடியாது என்றும், கேரளாவின் மிகு நீரை தமிழகத்திற்கு தரமுடியாது என்று கூறுவதையும் கேரள மக்கள் அனுமதிக்கக் கூடாது. தேசிய நீரோட்டம் பேசி கடந்த 60 ஆண்டுகளாக தேசிய நதிகள் இணைப்பதை மறுத்து, தேசிய இனங்களை மோதவிடும் காங்கிரசு கட்சியின் சதிகளை தமிழகம், கேரளம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனமக்களும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். தமிழக, கேரள மக்கள் இரு தேசிய ஆளும் வர்க்கங்களின் குறுகிய தேசியவெறிக்குத் துணைபோகாமல் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும். முல்லைப் பெரியாறுற்றில் இரு மாநிலங்களுக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் தீர்வுகாண ஒன்றுபடவேண்டும். இவ்வாறு சிக்கலுக்குத் தீர்வுக்காண்பதற்கு அதாவது முல்லைப் பெரியாற்று நீரை இரு மாநில மக்களின் சொந்தமாக்க வேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலோ நாட்டின் முழு நீர் வளத்தையும் ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் துரோகத்தை தொடங்கிவிட்டது.
புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய “வரைவு தேசிய நீர்க் கொள்கை
மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு அறிவித்துள்ள புதிய “வரைவு தேசிய நீர் கொள்கை நாட்டின் பொதுச் சொத்தான நீர் ஆதாரங்கள் முழுவதையும் தனியார் மயமாக்கி ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் துரோகத்தை துவக்கியுள்ளது. நீரையும் வணிகமயமாக்கும் கொள்கைகளை தொடங்கிவைத்துள்ளது. புதிய காலனியாதிக்க அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நிலம், நீர், ஆகாயம் அனைத்தையுமே ஏகாதிபத்திய வாதிகளிடம் ஒப்படைத்து வருகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி எப்படி பொது மராமத்துப் பணிகளைக் கைவிட்டு விவசாயத்தை சீரழித்து மாபெரும் பஞ்சங்களை உருவாக்கியதோ அதே போல, தற்போது மன்மோகன் கும்பல் ஆட்சியும் மக்களிடமிருந்து வரிவசூல் செய்துவிட்டு பொது மராமத்துப் பணிகளை கைவிட்டு விட்டு பன்னாட்டு முதலாளிகளை தண்ணீர் வியாபாரம் மூலம் கொழுக்க வைக்கத் திட்டமிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நாட்டின் மொத்தத் தண்ணீரையும் அவர்களின் உடைமையாக மாற்றிவருகிறது.
2005-ஆம் ஆண்டு உலகவங்கி “இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்வதால், அது நீர் மேலாண்மை அரசு என்பதிலிருந்து விலகிக் கொண்டு, நீர் ஆதாரங்கள் பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றில் தனியாரை அனுமதிக்க வேண்டும்; குடிநீர் மற்றும் பாசனத்திற்கான வினியோகம் உள்ளிட்டு அனைத்து நிலைகளிலும் வணிகமயமாக்கவேண்டும்; நீரின் விலையை மிகமிக அதிகமாக்கவேண்டும் என்றும் விவசாயத்திற்கான மின்கட்டணத்தை உயர்த்தி விவசாயிகள் நீரை பயன்படுத்துவதை தடுப்பது என்றும், குடிநீர் சந்தையை உருவாக்கவேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்தது.
அண்மையில் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளான கார்கில், கொக்கக் கோலா, பெப்சி, யூனிலீவர் மற்றும் மெக்கன்சி போன்றவைகள் உறுபினர்களாக உள்ள “நீர் ஆதாரக் குழு-2030” Water Resource Group-2030) என்ற அமைப்பு, உலக வங்கியின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, தனது இந்தியக் கூட்டாளியான இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (CII) மற்றும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரக் கழகம் (Council on Energy, Environmental and Water) இவைகளுடன் இணைந்து இந்திய திட்டக்கமிஷன் மூலம் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, மத்திய அரசை புதிய “தேசிய நீர் கொள்கையை வெளியிட வைத்துள்ளன.
ஜனவரி 31-ல் மத்திய நீர்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள “வரைவு தேசிய நீர்க்கொள்கை கூறுவதாவது.
1. நீர் என்பது அடிப்படை மனித உரிமை, சமூக சொத்து என்பதை மறுத்து, அதை ஒரு சந்தைப் பொருளாக அறிவிக்கிறது;
2. இந்திய அரசு மக்களுக்கு நீர் வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு அதை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், உள் நாட்டுத்தரகு முதலாளித்துவக் கும்பல்களிடமும் ஒப்படைப்பது;
3. இந்தப் புதிய கொள்கை நீருக்கு வழங்கும் அனைத்து வகையான மானியங்களையும் ஒழித்துவிடுவதோடு, தனியார் நிறுவனங்கள்தங்களது கழிவு நீரை சுத்தப்படுத்தி வெளியேற்று வதற்கும், மறு சுழற்சி மூலம் பயன்படுத்துவதற்கும் அரசு மானியங்களை வழங்கும் என்று கூறுகிறது; மக்களுக்கு வழங்கும் நீருக்கு மானியத்தை வெட்டுவது முதலாளிகளுக்கு மானியம் வழங்குவது என்று கூறுகிறது;
4. நீரை வணிகமயமாக்கி மக்கள் பயன்படுத்தும் குடிநீர், பாசனத்திற்கான நீர் போன்றவைகளுக்கு பயனீட்டாளர்கள் முழு விலையை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது. இதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளைக்குத் துணை போகிறது.
5. மாநில அரசுகளுக்கிடையிலான நீர்ச் சிக்கலைத் விரைந்து தீர்க்க ஒரு நிரந்தர நடுவர்மன்றம் அமைக்கப்படும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இவ்வாறு இந்த அறிக்கையின்படி இனி ஏழை, எளிய மக்கள் குடி நீருக்கும் காசு கொடுத்துதான் குடிக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பாசன நீருக்கு அதிக விலை கொடுக்கவேண்டும். ஏற்கனவே இடுபொருள் விலை உயர்வாலும், மானியங்கள் வெட்டப்பட்டதாலும், விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் மரணப்படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் விவசாயிகளை மண்மூடி புதைப்பதற்குத்தான் இந்த புதிய நீர்க்கொள்கை பயன்படும். மேலும் மாநிலங்களுக்கிடையில் நீர் பிரச்சினையை தீர்ப்பது எனும் பேரில் மொத்த நீரையும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும்.
மான்சாண்டோ நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 2008-ம் ஆண்டில் 420 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி, 63 மில்லியன் டாலர்கள் இலாபம் பெறத் திட்டமிட்டது. 2010ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதுகிறது. குறைந்தபட்சம் இந்தியா, சீனா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 30 விழுக்காடு மக்கள் குடி தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு நீர் பரப்பு 700 கன சதுர கி.மீட்டர் என்றும் ஆனால் நீரின் தேவையோ 1050 கன சதுர கி.மீட்டர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இந்த நீர்த்தட்டுப்பாடு பன்னாட்டு நிறுவனங்கள் நீரை சந்தைப் பொருளாக்கி கொள்ளை லாபம் பெறுவதற்கு வாய்ப்பை வழங்குகிறது.
மேலும், மான்சாண்டோ உள்ளிட்ட கார்கில், கொக்கக்கோலா, பெப்சி போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் “திறமையான நீர்பயன்பாடு, “உற்பத்தித்திறனுள்ள பயிர்கள் சாகுபடி என்று கூறி இதில் முக்கிய கவனம் செலுத்தக் காரணம் உலக சந்தைக்கான உணவு பொருள் உற்பத்திக்கு விவசாயிகளை மாற்றியமைப்பதும்; நீர் வணிகத்தை உத்தரவாதம் செய்வதுமேயாகும். இதன் மூலம் பன்னாட்டு குறிப்பாக அமெரிக்க நாட்டு முதலாளிகள் பல லட்சம் கோடிகளை சூறையாடுவதற்கே வழிவகுக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக தென் அமெரிக்க நாடான பொலியாவில், உலகவங்கியின் ஆணையின்படி தண்ணீரை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அந்நாட்டு சர்வாதிகார அரசு ஒப்படைத்தது. உலக வங்கியிடம் பெற்றக்கடன் 600 மில்லியன் டாலரை இரத்து செய்வது என்ற நிபந்தனையின் கீழ் அந்நாட்டின் ஒட்டுமொத்த நீரையும் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைத்தது. அதன் விளைவு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரின் விலை 30 சதவீதம் உயர்ந்தது. மக்களின் உணவு செலவைவிட தண்ணீருக்கான செலவு மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினர். பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டை விட்டு விரட்டியடித்தனர். உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்றக் கொள்கைகளை முழுவதுமாக ஒழித்தால்தான் முழுவிடுதலை அடையமுடியும் என்று அம்மக்கள் புதியகாலனியத்திற்கு எதிராக போராட்டக்களத்தில் அணிவகுத்து நிற்கின்றனர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நீர்க்கொள்கையை எதிர்த்து அனைத்து தேசிய இன மக்களும் அணிதிரளவேண்டும்.
எனவே முல்லைப் பெரியாற்று நீரை தமிழக மற்றும் கேரள மக்கள் தங்கள் உடமையாக மாற்றவேண்டி போராடும் இன்றையக்கட்டத்தில் மொத்த நீர்வளத்தையும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் மத்திய மன்மோகன் கும்பலின் புதிய காலனிய நீர்க்கொள்கையை எதிர்த்து முறியடிக்க; இரண்டு தேசிய இனங்களுக்கிடையில் உள்ள ஆற்று நீர்சிக்கலை புதிய ஒப்பந்தங்கள் மூலம் பேசித்தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தையை நடத்தும்படி இரு மாநில மக்களும் இரு மாநில அரசுகளையும் நிர்பந்திக்க வேண்டும். நமக்குள் உள்ள முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்போம். புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை முறியடிக்க இரு தேசிய இன மக்கள் மட்டுமல்லாது அனைத்து தேசிய இனமக்களும் ஒன்றுபடுவோம். முரண்பாடுகளை முற்றவிடுவது, இருதேசிய இன மக்களை மோதவிடுவது ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளுக்கே அறிந்தோ அறியாமலோ சேவை செய்யும். முல்லைப் பெரியாற்று பிரச்சினையைத் தீர்க்கும்முறை நாட்டில் பல்வேறு நீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காண ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டும். எனவே இரு தேசிய இனங்களுக்குள் சமத்துவம் என்ற அடிப்படையில் முல்லைப் பெரியாற்று பிரச்சனையை தீர்க்கக் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
ê முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையைக் காப்போம்!
ê அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்து!
ê தமிழக கேரள அரசுகளே இருமாநில நீர்பாசன, நீர்மின் திட்டங்களுக்கான பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்!
ê தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லப் பகுதிகளை தமிழகத்திற்கும், மலையாளிகள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப்பகுதிகளை கேரளத்தோடும் இணைக்கப் போராடுவோம்!
ê இரு தேசிய இன மக்களின் ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் போராடுவோம்!
கருத்தாக்கத்திற்காக கையாளப்பட்ட கட்டுரைகள்:
1. British Rule in India - Karl Marx, (June 1853)
2. Future results of British Rule in India - Karl Marx, August 8, 1853
3. Government of India - Karl Marx
4. India - Karl Marx
5. The Indian Question - Karl Marx, August 14, 1857
6. The Indian Revolt - Karl Marx
7. Marx’s Perception of India (Essays of Indian History) - Irfan Habib
8. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் - சுனித் குமார் கோஷ்

No comments:

Post a Comment