அணுசக்தி காலாவதியாகிவிட்டது”, “அணு உலையை மூடு” என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!
இந்திய அமெரிக்க இராணுவ
மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்யப் போராடுவோம்!
கூடங்குளத்தில் ரசியாவின்
உதவியோடு நிறுவப்படும் அணுமின் நிலையத்தைத் தொடங்கக்கூடாது என 80ஆம் ஆண்டுகளின்
மத்தியிலேயே சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. கிறித்துவத் திருச்சபைகள், அரசுசாரா தொண்டுநிறுவனங்கள், புதிய ‘இடது’ சிந்தனையாளர்கள், மா.லெ. இயக்கத்தைச்
சார்ந்த ஒரு சிலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அணுசக்தியைக் கொண்டு மின்சாரம்
தயாரிப்பது ஆபத் தானது, அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அணு உலைக ளால்
மனித குலத்திற்கு ஆபத்து, மனிதகுலத்தை மீட்க உடனே அணுசக்தியை ஒழித்திட வேண்டும்
என்றும்; இதுவே விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்திக்கும் யாவரும் எடுக்க வேண்டிய
முடிவாகும் என்றும், இதற்கு மாறாக எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும்
மூடத்தனமானது என்றும், மனித நேயத்திற்கு எதிரானது என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள்
கூறுகின்றனர்.
அணுசக்தியை ஆக்கசக்தியாகப்
பயன்படுத்தவே முடியாது என்பதுடன், அணு உலை விபத்து, கதிர்வீச்சு, பாதுகாப்பின்மை
மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அணு உலைகள் உலகெங்கும் மூடப்பட்டு வருகின்றன என்றும்
அணு உலைகள் கூடவே கூடாது என்றும் வாதிடுகின்றனர். அணுசக்தி விஞ்ஞானம் என்றாலே அது அணுகுண்டு
விஞ்ஞானம்தான் என்றும், அணுசக்தியை மின்சக்தியாக மாற்றவே முடியாது என்றும்
கூறி அணுவிஞ்ஞான எதிர்ப்பு இயக்கமாக இதை நடத்துகின்றனர். விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
இனி மனிதகுலத்திற்கு நாசம்தான், நன்மை ஏதுமில்லை, விஞ்ஞானத்தை எதிர்த்து
முறியடிக்க வேண்டிய கடமையை விஞ்ஞானம் நம்முன் வைத்துள்ளது என்று கூறி ‘விஞ்ஞானப் பூர்வமான’ விஞ்ஞான எதிர்ப்பு
இயக்கம் வளர்க்கப்படுகிறது. இன்றைய மனிதகுலம், வரும் தலைமுறைகள், இயற்கைச் சூழல்
யாவும் பெரும் நாசத்திற்கு உள்ளாகும் என்ற வகையில் “பீதியூட்டி” விஞ்ஞானத்திற்கு
எதிரான இயக்கமாக இது நடத்தப்பட்டுவருகிறது.
‘அணுசக்தி என்றாலே
அணுகுண்டுதான்’ என்று கூறி அணு விஞ்ஞானத்திற்கு எதிரான இயக்கத்தை அமெரிக்க இராணுவ
விஞ்ஞானிகள்தான் முதன் முதலில் தொடங்கி வைத்தனர். அமெரிக்காவின் நிலைப்பாட்டையே அணு
உலை எதிர்ப்பாளர்களும் முன்வைக்கின்றனர்.
1970ஆம் ஆண்டுகளில்
உலக முதலாளித்துவம் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு முன்
1929இல் நிலவிய நெருக்கடியைவிட
ஆழமானதும், அனைத்தும் தழுவிய தன்மை கொண்டதாகவும் அந்நெருக்கடி திகழ்ந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், மிகக் குறுகிய
காலத்தில் மிக அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையிலும் நாடு பிடிக்கும் போர்
வெறியிலும் இராணுவத் துறையில் முதலீடு செய்து இராணுவப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்தனர்.
ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகள் இனி விஞ்ஞான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தித் தனது மூலதன
பெருக்கத்திற்குறிய வகையில் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அதாவது விஞ்ஞானம்
எனும் உற்பத்தி சக்திகளோடு மோதாவிட்டால், இனி ஏகபோகம் வாழமுடியாது
என்ற நிலைமையைக் கண்டனர். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்கிட்டு தமது பிற்போக்கு
எதிர்ப்புரட்சியைப் பாதுகாக்க அமெரிக்காவைச் சார்ந்த பிற்போக்கு சக்திகள் விஞ்ஞான எதிர்ப்பு
இயக்கத்தைக் கட்டியமைத்தனர்.
அமெரிக்காவைச் சார்ந்த
எஃப்.சிரிக்கா என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சமுதாயத்தில் விஞ்ஞானம்
வகிக்கும் பாத்திரம் காலாவதியாகிவிட்டது என்றார். விஞ்ஞானத்திற்கான செலவு மிகவும் அதிகரித்துவிட்டது, அதில் போடும்
முதலீட்டிற்கு உரிய பலன் இல்லை, விஞ்ஞானத்தில் ஆன்ம திருப்தி இல்லை, அதன் சாதனைகளோ
சூழல் கேடுகளையே உருவாக்குகின்றன என்று விஞ்ஞானத்திற்கு எதிரான விஷத்தைக் கக்கினார்.
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின்
விஞ்ஞான ஆலோசகராக இருந்த பேராசிரியர் பிரைஸ், அமெரிக்காவில் வளர்ந்துவரும்
விஞ்ஞான எதிர்ப்பிற்குக் காரணம், விஞ்ஞானமானது “வளர்ச்சியின் எல்லையைத்
தொட்டுவிட்டதுதான்” என்று கூறினார். விஞ்ஞானம் “தானே” கரைந்துவிடும்
நிலைக்கு வந்துவிட்டது என்றும், இனி விஞ்ஞானம் ஒரு சுமைதான் என்றும் கூறினார்.
இதனையட்டி அமெரிக்காவின்
சமூகவியலாளரான லூயிஸ் மம்போர்டு “எந்திரம் என்னும் மாயை” என்ற நூலில் பின்வருமாறு
கூறினார்:
“... கெப்ளர், கோபர்நிகஸ் போன்ற
விஞ்ஞானிகள், மானுடத்தை மறந்த விஞ்ஞான வளர்ச்சியின் பாதையைத் திறந்துவிட்ட குற்றத்தைச்
செய்துவிட்டனர். விஞ்ஞானிகளின் உண்மையைத் தேடும் முயற்சியின் காரணமாக மனித இனமே பெருத்த
விலை கொடுக்க வேண்டியுள்ளது. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தியதால் மனிதர்கள் சுவாசிக்கும்
காற்று, அருந்தும் நீர், உண்ணும் உணவு உட்பட்ட
யாவும் விஷமாக்கப்பட்டுவிட்டன. விஞ்ஞான வளர்ச்சி மனிதகுல விடுதலைக்கு எந்த உத்தரவாதத்தையும்
அளிக்கவில்லை. மொத்தமாகப் பேரழிவு எனும் நிழலில் கோடிக்கணக்கான மனித உயிர்கள் வாழ வேண்டியுள்ளது” என்று கூறினார்.
இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் விஞ்ஞானத்திற்கு எதிராகப் பேசி மனித குல வளர்ச்சிக்குத்
தடையாக மாறினர். அமெரிக்காவைச் சார்ந்த இராணுவ விஞ்ஞானிகளும், ஏகபோக நிதி மூலதனக்
கும்பல்களும் மற்றும் கிறித்துவத் திருச்சபைகளும் இத்தகைய விஞ்ஞான எதிர்ப்பு இயக்கத்திற்குத்
தலைமை தாங்கின. இவர்களின் நிலைப்பாட்டையே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களும் தங்களது
நிலைப்பாடாகக் கொண்டுள்ளனர்.
அணுசக்தி எதிர்ப்பாளர்கள்
விஞ்ஞான எதிர்ப்போடு, அணு உலை பற்றிப் பீதியூட்டுவதன் மூலம் அணுசக்தி
எதிர்ப்பு இயக்கத்திற்கு வலுவூட்டுகின்றனர். அமெரிக்காவில் “மூன்று மைல் தீவில்” நடந்த அணு உலை
விபத்து, ரசியாவின் செர்னோபில் விபத்து, தற்போது புகுஷிமா விபத்து
போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது, இன்று வரையிலான அணுத்
தொழில்நுட்பத்தால், அணுக்கதிர்வீச்சுப் பிரச்சினைகள் மற்றும் அணுக்கழிவுகளைப்
பாதுகாப்பது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றும் எனவே உலகில் உள்ள அனைத்து
அணு உலைகளையும் மூட வேண்டும் என்று அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மூன்று மைல் தீவு
விபத்து, செர்னோபில் விபத்து அண்மையில் நடந்த புகுஷிமா விபத்து என இதில்
எந்த ஒரு விபத்தும் அணுத் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டது அல்ல என்றும், முதலாளித்துவ
இலாப வெறியின் காரணமாக இந்தக் கம்பெனிகளின் நிர்வாகம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச்
செய்யாமல் போனதுதான் காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரசியாவின் செர்னோபில்
விபத்திற்கும் கூட சோவியத் இரசியாவில் ஏற்பட்ட மரபுவழி முதலாளித்துவ மீட்சியும், இலாப வெறியும்தான்
காரணமாக அமைந்தது என்பதே உண்மை. எனவே இந்த விபத்துகள் யாவும் அணுசக்தித் தொழில்நுட்பங்களால்
ஏற்படவில்லை. மாறாக முதலாளித்துவ இலாப வெறியே இத்தகைய கோரவிபத்துக்களுக்குக் காரணமாக
இருந்துள்ளது. அணுசக்தி எதிர்ப்பாளர்கள் இந்த உண்மையை மூடிமறைத்து விபத்துப் பற்றிப்
பீதியூட்டி அணு உலையை மூடவேண்டும் என்கின்றனர்.
கூடங்குளம் அணு உலை வரலாறும்
அமெரிக்காவின் எதிர்ப்பும்
1974ஆம் ஆண்டு மே
18இல் இந்திரா காந்தியின்
ஆட்சியின் போது இந்தியா முதன் முதலில் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதைக்
கண்டித்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அணுசக்தித் துறையில் இந்தியாவுக்கு
அளித்துவந்த உதவிகளைத் திடீரென நிறுத்திக் கொண்டன. வெடிப்பரிசோதனையில் ஈடுபட்டு நம்மையே
நாம் அழித்துக் கொண்டோமென வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் இந்தியாவைக் கண்டித்தன. இந்தியா
என்றும் தமது கைக்குள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பதே இந்நாடுகளின் நோக்கமாகும். எனவே
அணு உலைக்கு வேண்டிய உதிரி பாகங்கள், எரிபொருட்கள், கனநீர் தட்டுப்பாடு
போன்ற பிரச்சினைகளுக்கு இந்தியா முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 20 ஆண்டுகளாகத்
தாராப்பூர் அணுமின் நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்க அமெரிக்கா மறுத்து வந்தது.
அந்த அணுமின் ஆலை பல ஆண்டுகளாக உற்பத்தியையே நிறுத்திவிட்டது. இத்தகைய ஒரு சூழலில்தான்
அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ரசிய சமூக ஏகாதிபத்திய
அதிபராக இருந்த கோர்பச்சேவிற்கும் இடையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்
கூடங்குளம் அணு உலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதே அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள்
அதை எதிர்த்தனர். ஆனால் சோவியத் சமூக ஏகாதிபத்திய ரசியாவில் ஏற்பட்ட மரபுவழி முதலாளித்துவ
மீட்சியின் விளைவாக அந்நாடு சிதறுண்டுபோனது. அதன் காரணமாகக் கூடங்குளம் அணு உலை வேலைகள்
நின்றுபோயின.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியா மீண்டும் பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பை
நிகழ்த்தியது. அதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் கடுமையான
பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்தச் சூழலில்தான் வாஜ்பாய் அரசாங்கம் ரசியாவுடன் பழைய
கூடங்குளம் ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தது. தற்போது
கூடங்குளம் அணு உலையும் கட்டி முடிக்கப்பட்டு முதற்கட்ட உற்பத்தியை தொடங்குவதற்கு ஆயத்தமாகி
வருகிறது.
சுப.உதயகுமார் தலைமையிலான
“அணுசக்திக்கு
எதிரான மக்கள் இயக்கம்” கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற
போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்திற்குக் கிறித்துவத் திருச்சபைகளும், தொண்டு நிறுவனங்களும், தங்களை நக்சல்பாரிகள்
என்று அழைத்துக் கொள்பவர்கள் உள்ளிட்ட ஒரு சில மா.லெ. இயக்கங்களும் ஆதரவளித்து வருகின்றன.
கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மக்கள், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரங்கள்
பறிபோவதை எதிர்த்தும், பாதுகாப்பு வேண்டியும் தன்னியல்பாகப் போராடிவருகின்றனர்.
தன்னியல்பான மக்களின் போராட்டத்தின் தலைமையை சுப.உதயகுமார் தலைமையிலான குழுவினர் எடுத்துக்கொண்டனர்.
அணு உலையை மூடவேண்டும்
என்று இடிந்தகரையில் சுப.உதயகுமார் தலைமையில் ஏழு மாத காலமாக பல்வேறு போராட்டங்களையும்
உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் நடத்திவந்தனர். தற்போது மத்திய மாநில அரசுகளின்
தலையீட்டால் அடிப்படைக் கோரிக்கையான உலை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுவதாக
அறிவித்து விட்டனர். கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாகவும், அணு சக்திக்கு
எதிராக உலக அளவில் பொதுவான போராட்டம் தொடரும் என்றும் சுப.உதயகுமார் அறிவித்தார். அதே
சமயம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும்
விடுதலை செய்யவேண்டும்; வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும்; ரசியாவோடு செய்து
கொண்டுள்ள அணு உலை விபத்துக் குறித்த நட்ட ஈடு பற்றிய ரகசிய ஒப்பந்தத்தை வெளியிடவேண்டும்; புவியியல், நீரியல், கடல்சார் வல்லுநர்களைக்
கொண்ட ஒரு குழு கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஆய்வறிக்கையை முன்வைக்க வேண்டும்; கூடங்குளத்தைச்
சுற்றி 30 கி.மீ. தூரத்தில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்புக் குறித்த பயிற்சி
அளிக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிவருகின்றனர். இதன் மூலம்
அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றி வருகின்றனர்.
அணு உலை எதிர்ப்பாளர்கள்
முன்வைக்கும் அணுசக்தி அழிவுக்கானதே என்பது உண்மைதானா? அணுசக்தி தயாரிப்புக்கான
தொழில்நுட்பத்தைக் கட்டுக்குள் வைக்க முடியாது என்பது உண்மைதானா? என்பதை முதலில்
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.
அணுசக்தியைப் பயன்படுத்தி
அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பமும், அணுமின்சாரம் தயாரிக்கும்
தொழில்நுட்பமும் ஒன்றுதான் என்றும், அணுசக்தி மின்சாரத்திற்கான
ஒரு சக்தியே அல்ல என்றும் அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான் என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள்
திட்டமிட்டே பொய்யுரைத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
யுரேனியச் சுரங்கங்கள், அணு உலையில் வைக்கப்படும்
எரி பொருட்கள், அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் இவையாவற்றிலும் நிறைந்து
காணப்படுவது கதிரியக்கம்தான். இதைத் தவிரக் கழிவுகள் என்று குறிப்பிடப்படும் பொருட்களிலிருந்துதான்
அணுகுண்டு தயாரிப்பதற்கான புளூட்டோனியத்தைச் சுத்தப்படுத்தி எடுக்கின்றனர். எனவே அணுசக்தியிலிருந்து
முக்கியமாய்க் கிடைப்பது கதிரியக்கமும், புளூடோனியமும்தான்.
இங்கு மின்சாரம் ஒரு துணைப் பொருள்தான் (by product) என்று கூறுகின்றனர். அணுசக்தியை
மனிதகுல முன்னேற்றத்திற்கு எவ்வகையிலும் பயன்படுத்த இயலாது என்றும் கூறுகின்றனர். ஆக
‘அணு சக்தி விஞ்ஞானம்
ஒரு இராணுவ விஞ்ஞானமே’ என்கிற அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகளின் அணுசக்தி
பற்றிய தத்துவமே அணுசக்தி எதிர்ப்பாளர்களின் தத்துவமாக உள்ளது.
அணுகுண்டு ஆக்கத்தில் “அணுக்கருப் பிளவு” (fission)
என்பது
கட்டுப்பாடற்ற தொடர் வினையை அடிப்படையாகக் கொண்டது.
அணுமின் சக்தி ஆக்கத்தில் “அணுக்கருப் பிளவு” என்பது “அணு உலையில்” முழுமையான கட்டுப்பாட்டோடு, தற்சார்புடைய
முறையில் வினை நடைபெறும் அமைப்பாகும். “அணுக்கருப் பிளவை” கட்டுப்படுத்தும்
நிலையில் அணு உலை கட்டப்படுகின்றன.
அணு குண்டு செய்வதும்
அணு மின்சாரம் தயாரிப்பதும் ஒன்றல்ல. பெரும்பான்மை மக்கள் அஞ்சுவதைப் போல, அணு உலை ஒரு போதும்
அணுகுண்டு வெடிப்பது போன்ற பயங்கர ஆபத்து நிறைந்ததும் அல்ல. அணுகுண்டு தயாரிப்பதிலும்
அணுமின்சாரம் தயாரிப்பதற்கான அணுமின் உலையிலும், நியூட்ரானைக் கொண்டு யுரேனிய
அணுக்கருவில் “அணுக்கருப் பிளவை” ஏற்படுத்தி வெப்ப ஆற்றலை
வெளிப்படுத்துவது என்ற பொதுவான தொழில்நுட்பம்தான் கையாளப்படுகின்றன. இரண்டிலும் “அணுக்கருப் பிளவு” என்பது “தொடர் கிரியை” என்ற தொழில்நுட்பத்தின்
வாயிலாகவே நடத்தப்படுகிறது. ஆனால் அணுகுண்டில் வெளிப்படும் சக்திக்கும், அணுமின்சாரம்
உற்பத்தி செய்வதற்காக வெளிப்படும் சக்திக்கும் உள்ள பண்பு சார்ந்த வேறுபாட்டை உணராமல்தான்
அணுசக்தி எதிர்ப்பாளர்கள் அணுசக்தியால் மின்சாரம் தயாரிக்க முடியாது என்றும், அது அணுகுண்டு
தயாரிப்பதற்கான சக்தியே என்றும் வாதிடுகின்றனர்.
அணுகுண்டில் வெளிப்படும்
சக்தி கட்டுப்படுத்தப்படாத அளவுகடந்த வெப்பமும் கதிரியக்கமும் ஆகும். யுரேனியம், தோரியம், புளூடோனியம் போன்ற
கனமான மூலகங்களே அணுக்கருப் பிளவுக்குப் பயன்படுகின்றன. ஒரு நியூட்ரான் மூலம் அணுக்கருக்களைப்
பிளக்கும்போது, ஒவ்வொரு பிளவிலும் சில நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும்
மேலும் பல பிளவுகளை உருவாக்க வல்லவை. ஒவ்வொரு பிளவுக் கிரியையிலிருந்தும் மென்மேலும்
பல பிளவுகள் ஏற்பட்டு ஒரு நொடிக்குள் பல இலட்சம் பிளவுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாகக்
கிரியை நடைபெறுவதைத்தான் “தொடர்கிரியை” என்கிறார்கள். தொடர்ச்சியாகக்
கட்டுக்கடங்காமல் பிளவுகள் பெருகிக்கொண்டே போகுமானால் குறுகிய காலத்தில் பேரளவிலான
வெப்பச் சக்தி வெளிப்படும். இது மாபெரும் வெடிப்புக்கு அடிகோலும். பேரழிவை உண்டாக்கும்.
அணுகுண்டில் உருவாக்கப்படுவது இதுதான். ஜப்பானில் ஹிரோஷிமாவும், நாகசாகியும் அணுகுண்டால்
நாசத்திற்குள்ளானது இப்படித்தான்.
அணுவைப் பிளக்கும் தொழில்நுட்பம்
என்பது மனித குலத்தைப் பூண்டோடு அழித்துவிடும் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மட்டுமே
உதவுவதுடன் நின்றுவிடவில்லை. அணுப்பிளவில் ஏற்படும் வெப்பம் மின்சாரம் தயாரிப்பதற்கும்
பயன்படுகிறது. அணுமின்சாரம் தயாரிப்பதற்கான அணு உலையில் வெளிப்படும் சக்தி கட்டுப்படுத்தப்பட்ட
சக்தி ஆகும். அணுப் பிளவினைக் கட்டுப்படுத்தி, அதனின்று கிடைக்கும் சக்தியை
நமது கட்டுக்குள் அடக்கி ஆக்கப்பணிகளுக்கு உதவும் வழிவகைகளில் பயன்படுத்துவதற்கு உருவானதுதான்
அணு உலை என்பது. அணு உலை என்பது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தொடர்கிரியை ஏற்படுத்தி
நடத்தவும், தேவையானபோது கிரியையைத் தொடங்கவும், நிறுத்தவும் தகுந்தவாறு
அமையப் பெற்றுள்ள ஒரு சாதனமேயாகும். அணுமின் உலைகளில் பிரதான விளை பொருள் மின்சாரமேயாகும்.
கதிரியக்கம் என்பது இங்கு துணைவிளைவேயாகும். அணுமின் உற்பத்தியே இங்கு தலையாய
நோக்கமாகும். அணுமின் உலையிலிருந்து மின்சாரம் பெறப்படும்போது கிடைக்கும் கழிவுகளின்
கதிரியக்கம் மற்றும் வெடிப்பு அபாயம் என்பவை கட்டுப்படுத்தப்படுகின்றன. அணுகுண்டில்
கட்டுப்பாடு ஏதுமின்றிப் பரவும் வெப்பம் யாவும் இங்கே கட்டுப்படுத்தப்படுகின்றன. அணுசக்தியைக்
கட்டுப்படுத்தும் விஞ்ஞானம், இராணுவ விஞ்ஞானத்திலிருந்து
மாறுபட்டது மட்டுமல்ல வேறுபட்டதும் முரண்பட்டதுமாகும். அணு உலையில் உற்பத்தியாகும்
ஆற்றல் மற்றும் வெப்பம் என்பது குறுகியக் காலத்தில் அதிக அளவு திடீரென உயராது என்பதுடன், ஒப்பீட்டளவில்
ஒரு சிறிய அணுகுண்டு வெடிப்பின் போது வெளியிடப்படும் வெடிப்பு சக்தியை விட மிகவும்
குறைந்ததேயாகும். எனவே ‘அணு உலை என்றாலே ஆபத்தானது’ என்பது உண்மையை
மூடிமறைப்பதேயாகும்.
அணு உலை என்பது எவ்வாறு
பாதுகாப்பான முறையில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது என்பதை இனிப் பார்ப்போம்.
அணு உலையின் முக்கியப் பகுதிகள் என்பன கிரியை (அணுப்பிளவை) புரியும் நியூட்ரான்களின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான “தணிப்பான்” (a moderator); செரிவூட்டப்பட்ட
யுரேனியம் என்ற எரிபொருள் (enriched fuel); கிரியை தொடர்ந்து நடைபெறுவதற்குத்
தேவையான அளவில் எரிபொருட்களில் நிரப்பப்படும் திரவங்கள் (fuel above
the critcal mass); மற்றும் நியூட்ரான்களை உட்கொள்ளும் “கட்டுப்பாட்டுத்
தண்டுகள்” (control rods) போன்றவைகளை உள்ளடக்கியது ஆகும். அணு உலையின் வயிறு போன்ற பகுதியே
குண்டமாகும். அதில் யுரேனியத் தண்டுகள் அடுக்கிவைக்கப்படும். அணுப் பிளவின்போது தோன்றும்
கதிரியக்க வாயுக்கள் கசியா வண்ணம், யுரேனியத் தண்டுகள் ஏற்றதொரு பெட்டகத்திற்குள்
வைத்துக் குண்டத்திற்குள் இறக்கப்படும். இப்பெட்டகமானது நியூட்ரானை உறிஞ்சாமலும், துருப்பிடிக்காமலும்
இருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும்.
அணுக்கருப் பிளவால் தோன்றும்
நியூட்ரான்கள் அதிவேகமுடையன. இந்த நியூட்ரான்கள் சங்கிலித் தொடர் தாக்குதலில் மீண்டும்
ஈடுபடவேண்டுமெனில் அவற்றின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். ஆகவே நியூட்ரானின் வேகத்தை
மட்டுப்படுத்துவதற்கு “தணிப்பான்” அணு உலையின் முக்கியப்
பகுதியாகிறது. கிராஃபைட் எனும் பென்சிற்கரி சிறந்த தணிப்பானாகப் பயன்படுகிறது. இது
தவிர “கனநீர்” என்பதும் வேக தணிப்பானாகப் பயன்படுகிறது. ஆகவே
தணிப்பானாக உதவும் கனநீர்கொண்ட ஒரு தொட்டியில் யுரேனியத் தண்டுகள்கொண்ட பெட்டகம் வைக்கப்பட்டிருக்கும்.
அடுத்து கட்டுப்பாட்டுத் தண்டுகளைக் கொண்டு “பிளவை” வேண்டியபோது தொடங்கவும்
வேண்டாத போது நிறுத்துவதற்குமான ஒரு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் போரான், காட்மியம் போன்ற
நியூட்ரான்களை உறிஞ்சும் தன்மை கொண்ட தண்டுகளை உலைக்குள் இறக்கும்போது அவை நியூட்ரான்களை
உறிஞ்சி அணுக்கருப் பிளவு ஏற்படாமல் தடுத்து விடுகின்றன. அதேபோல் வேண்டும் போது இக்கட்டுப்பாட்டுத்
தண்டுகள் உலைக்குமேல் உயர்த்தப்பட்டு, அணுப்பிளவு தொடர்ச்சியாக
நடைபெற ஏதுவாகிறது. இவ்வாறு அணுக்கரு பிளவு கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.
பிளவுறும் யுரேனியத்தினின்று
வெளியாகும் சக்தி, பெரும் வெப்ப சக்தியாக எரிபொருள் தண்டுகள் மத்தியில்
தோன்றுகிறது. இவ்வெப்பச்சக்தி கொதிகலன்களுக்குள் கொண்டு செல்லப்படும். உலையிலுள்ள யுரேனிய
எரிபொருள் தண்டுகளைச் சுற்றிலும் பெரும் அழுத்தத்துக்குட்பட்ட கார்பன் டை- ஆக்சைட்
போன்ற வாயுவை செலுத்தும்போது அவ்வாயுவானது வெப்பச் சக்தியாக மாறிச் செல்கிறது. இவ்வாறு
பெருமளவு வெப்ப மூட்டப்பட்ட கார்பன் டை ஆக்சைட் வாயுவினை கொதிகலன்களில் செலுத்தினால்
அங்குள்ள நீர் கொதித்து நீராவியாக மாறுகின்றது. இவ்வாறு உருவாக்கிய கொதி நீராவியை டர்பைனின்
அசுரச் சக்கரங்களை நோக்கிப் பீய்ச்சும்போது நீராவியானது சக்கரங்களைச் சுழற்றி, அதன் விளைவாக
எந்திர ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இந்த எந்திர ஆற்றல் ‘ஜெனரேட்டர்’ எனப்படும் மின்பிறப்பாக்கியின்
மூலம் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. எனவே அணுப் பிளவின் போது தோன்றிய வெப்பசக்தியானது
மின்சாரம் தயாரிக்கவே உதவுகிறது. இவ்வாறு அணுசக்தியைக் கட்டுப்படுத்தி அணுமின் சக்தியாக
மாற்றிக்கொள்ள முடியும்.
அணுவின் வெப்பசக்தியை
மின்சக்தியாக மாற்றுவதே அணு உலையின் வேலையாகும். சக்திகளின் வகையை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு
மாற்றுவதன் மூலமாகவே நாம் பயன்தரும் வேலைகளைச் செய்கிறோம். மலை உச்சியிலிருந்து பெருகி
ஓடும் நீர்வீழ்ச்சிகள் இயந்திரங்களின் சக்கரங்களைச் சுழலச் செய்கின்றன. பெருகிவரும்
ஆற்று வெள்ளத்தை அணைகளில் தேக்கி வைத்து, திட்டமிட்டப்படி வெளியேற்றப்படும்போது
தோன்றும் இயக்கப்பண்பு சக்தியால் டர்பைனின் பெரும் சக்கரங்களைச் சுழலச் செய்வதன் மூலம்
மின்பிறப்பாக்கியை இயக்கி மின்சக்தியை பெறுகின்றோம். இதனையே நீர் மின்சக்தி என்பர்.
எரிபொருட்களான விறகு, எண்ணெய், நிலக்கரி என்பனவற்றில்
அடங்கியுள்ளது இரசாயன சக்தி. இதனை வெப்பச் சக்தியாக மாற்றும்போதுதான் பல்வேறு வேலைகளைச்
செய்யமுடிகிறது. சமைத்தல், மோட்டார்களின் இயந்திரம், டீசல் இயந்திரம்
மற்றும் பல்வேறு இயந்திரங்களை இயக்கிப் பயன்பெறுதல் நடைபெறுவதற்கு இரசாயன சக்தியை மாற்றும்
நுட்பமே காரணம். இவ்வாறு வெப்பச் சக்தியைக் கொண்டு மின்சக்தியாக மாற்றும் நிலையங்களை
அனல் மின்நிலையம் என்கிறோம். வெப்பச் சக்தியின் மூலம் நீராவியைத் தேக்கி அதனைக் கொண்டு
இயந்திரங்களை இயக்கும் முறை உருவான பின்பு இங்கு வெப்பசக்தியானது முதன்முதலில் இயந்திர
சக்தியாக மாறியதைக் காண்கிறோம். நீராவி இயந்திரங்கள் மூலம் பெரும் தொழில் புரட்சியே
ஏற்பட்டது. இதே முறையில்தான் அணுசக்தியும் வெப்பச் சக்தியாக மாற்றப்பட்டு மின்சாரம்
தயாரிக்கப் பயன்படுகிறது.
எனவே அணுசக்தியானது ஆக்கப்பூர்வமான
ஒரு அற்புத சக்தியேயாகும். சக்தியின் வடிவத்தை நமது தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும்
அறிவே விஞ்ஞான வளர்ச்சியின் அச்சாணி. மாறாக 1930களில் அறியப்பட்ட அணுசக்தியை
மாற்றக் கற்றுக் கொள்ளாவிட்டால் அம்மாபெரும் சக்தியானது தானே வெடித் துக்கிளம்பி சூழலை
அழித்து மாசுபடுத்தியும் விடுகிறது. எனவே இத்தகைய அணுசக்தியை ஆக்கபூர்வமாக மாற்றிக்
கொள்வதற்கான உகந்த வடிவம் “மின் சக்தியே” ஆகும்.
அணுசக்தியை மின்
சக்தியாக மாற்றுவதில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல்
அணு விஞ்ஞானத்தையே எதிர்ப்பது அறிவீனமாகும். அணு உலைகள் கட்டுவதில், செயல்படுத்துவதில்
ஏற்படும் பிரச்சினைகள் குறித்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சினைகள்
முற்றாகத் தீர்க்கப்படவில்லை என்றாலும் அணுசக்தி விஞ்ஞானம் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இந்த முன்னேற்றம் செர்னோபில் விபத்து போன்ற கொடூரமான விபத்துக்களின் மத்தியிலிருந்து
காணப்பட்டுள்ளது.
அணு உலையில் அணுக்கரு
பிளக்கப்படும்போது கதிரியக்கத் தன்மை வாய்ந்த, நச்சுத்தன்மை கொண்ட கதிர்கள்
வெளிப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை அணு உலைக்குள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுகின்றன.
ஆக அணுப் பிளவின் மூலமாக இருவகையான சக்திகள் கிடைக்கின்றன.
1) அணுப் பிளவின் போது தோன்றும்
வெப்பசக்தி மின் உற்பத்திக்கான ராட்சத சக்கரங்களைச் சுற்றவைப்பதற்கு உதவுகின்றன.
2) அணுப் பிளவின் போது தோன்றும்
கழிவும், கதிரியக்கமும், அணு உலையிலிருந்து இவை கட்டுப்படுத்தப்பட்ட முறையில்
வெளியேற்றப்படுகின்றன. அணுக் கழிவுகள் ஒரு பாதுகாப்பான பெட்டகத்தில் அடைத்துப் பூமிக்கடியில்
பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. அணு உலையில் பணிபுரியும் ஊழியர்களை நச்சுக்கதிர்களினின்றும்
பாதுகாக்க, அணு உலையானது சுமார் 3 அல்லது 4 மீட்டர் கனங்கொண்ட
பலமான கான்கிரீட் கட்டிடத்தால் சூழப்பட்டிருக்கும். அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள
பகுதிகளில் இயற்கையாகவே உள்ள கதிரியக்க அளவைவிட, குறைவாகவே இங்கு கதிர்வீச்சு
அளவு இருக்கும். இதை அடிக்கடி சோதனை செய்து கதிர்வீச்சின் அளவு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
அணுப் பிளவின் போது உலையின் வெப்பம் உயராத வண்ணம், வெடிப்பு ஏற்படாத வண்ணம்
பல அடுக்குகள் கொண்ட குளிர்விப்பான் மூலம் அணு உலையைக் குளிர்விப்பதற்கான ஏற்பாடும்
செய்யப்பட்டுள்ளது.
அணுக் கழிவில் பொதிந்து
கிடக்கும் புளூடோனியம் அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படும் என்பது உண்மைதான். ஆனால் அணுகுண்டு
தயாரிப்பதுதான் நோக்கம் என்றால் அணுப்பிளவின் மூலமாகக் கிடைக்கும் கழிவையே மையமாக கொண்டிருக்கும்.
இந்த நோக்கில் அணுசக்தியை ஆக்க சக்தியாகப் பயன்படுத்த முடியாது என்ற நிலைதான் தோன்றும்.
மாறாக வெப்பசக்தியை மின்சக்தியாக மாற்றுவதுதான் நோக்கம் என்றால் கழிவை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கதிரியக்கத்தை
எவ்வாறு மட்டுப்படுத்துவது என்ற பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டிய விஞ்ஞானப் பிரச்சினைகளாக
மாறிவிடுகின்றன.
அமெரிக்காவைச் சார்ந்த
இராணுவ விஞ்ஞானிகள், நிதிமூலதனக் கும்பல்கள் மற்றும் கிறித்துவத் திருச்சபைகள்
போன்ற பிற்போக்குச் சக்திகள் அணுசக்தி பற்றிய பீதியூட்டி, அணுசக்தி விஞ்ஞானத்திற்கு
எதிரான இயக்கத்தை உலகம் முழுவதும் கட்டியமைக்கின்றனர். அணுசக்தியின் ஆக்கப்பூர்வமான
பயன்பாட்டைத் தடைசெய்வதன் மூலம் சமூக வளர்ச்சிக்கான தடைக்கல்லாக மாறிவிட்டனர்.
இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன்
பாசிசத்துடன் நூற்றுக்கணக்கான வழிகளில் உறவுகொண்டிருந்த வாட்டிக் கனால் (போப்) தலைமை
தாங்கப்பட்ட உலகின் மிகப் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் பாசிசத்தை வென்ற சக்திகளை
நோக்கி தங்கள் சாபக்கணைகளை வீசத் துவங்கினர். அணு ஆற்றலுக்கு எதிராகக் கடும் போரிட்டனர்.
மனித இனம் உருவாக்கிய ஒவ்வொரு விஞ்ஞானத் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் இந்தப் பிற்போக்கு
மூடநம்பிக்கைவாதிகள் எதிர்த்தே வந்துள்ளனர். பிரிட்டனில், அறிவாழமற்ற பழமைவாதியும், அமைதிவாதியுமான
டாக்டர் ஜோட் விஞ்ஞானிகளைக் குற்றஞ்சொல்வதுடன், மனிதகுல வரலாற்றிலேயே
மிகத் தனிப்பெருங்கேடு அணு ஆற்றல்தான் என்று அடித்துக் கூறினார். நெருப்பு, நிலக்கரி போன்ற
ஆற்றல்களை மனிதன் கண்டறிந்தபோது இத்தகைய பிற்போக்குச் சக்திகள் அதை எதிர்த்தே வந்துள்ளன.
அதுபோலவே தற்போது அணு ஆற்றலையும் எதிர்க்கின்றனர்.
மனிதர்கள் இயற்கை ஆற்றலை
கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டது முதல், புதிய கண்டுபிடிப்புகள்
கடும் சவால்கள் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளன. இத்தகைய சவால்களுக்குத் தொடர்ச்சியான
நடைமுறை மற்றும் ஆய்வுகள் மூலம் மனித குலம் தீர்வுகண்டுவந்துள்ளது. ஆற்றலின்
வரலாறும் அதை நிரூபிக்கின்றது.
நெருப்பின் ஆற்றல்
புராதன உலகின் மாபெரும்
தொழிற்புரட்சி நெருப்பைக் கண்டுபிடித்ததுதான். நெருப்பு, இயற்கை ஆற்றலின்
ஒரு வடிவம் என்ற வகையில் வரலாற்றில் அதன் மாபெரும் பாத்திரத்தை ஆற்றத் தொடங்கியது.
மனிதன் சிக்கிமுக்கிக் கல்லால் தனது விருப்பத்திற்கு ஏற்ப நெருப்பை உண்டாக்கும் வல்லமையைப்
பெற்றபிறகுதான், மனிதனுக்கு இயற்கை சக்தி மீது முதல் தடவையாகக் கட்டுப்பாடு செலுத்தும்
ஆற்றல் வந்தது. அது “அவனை மிருக உலகிலிருந்து என்றென்றைக்குமாக பிரித்துவிட்டது” என்று எங்கெல்ஸ்
கூறினார்.
நெருப்பை கண்டுபிடித்ததானது
மனிதர்களின் உற்பத்தித் துறையிலும், உணவுப் பழக்க வழக்கங்களிலும், பண்பாட்டுத் துறையிலும்
பெரும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் கொண்டுவந்தது. ஆற்றலின் இந்தப் புதிய வடிவத்தைக்
கண்ட புராதான சமுதாயத்தின் எதிர்வினையானது ஆர்வமும், ஆச்சரியமும், அச்ச உணர்வும்தான்.
புதிய கற்காலத்தின் போப்பாண்டவர்களும், சமய குருமார்களும், அவர்களுடைய புராணக்
கதைகளில் காணப்படாத இந்தப் பொருளை மனிதனுக்குத் தீமை விளை விப்பது என்று கூறி அவற்றைக்
கண்டுபிடித்த வீரமிக்க கண்டு பிடிப்பாளர்களை, அவர்களின் புனிதமற்ற செயலுக்காகச்
சபித்திருப்பார்கள். (இன்றைக்கும் கூட மூடநம்பிக்கை கொண்ட அறிவற்ற ரோம், நரகத்தை நெருப்பு வடிவிலேயே
விளக்கி வருகிறது).
ஆற்றலின் இந்தப்
புதிய வடிவத்தின் கண்டுபிடிப்பானது பல அபாயகரமான அழிவுப்போக்குகளைக் கொண்டிருந்தது.
நெருப்பைக் கட்டுப்படுத்துவதும், ஒழுங்கு படுத்துவதும் மிகமிகக் கடினமானதாக இருந்தது.
மேலும் அது தொடர்ச்சியான புதிய மற்றும் அவசரமான இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்தது. ஆனால்
மனித முன்னேற்றத்தின் வரலாற்றில் இது ஒரு இயக்கு சக்தியாகும். “மனிதன் தன்னுடைய
சொந்தச் செயல்பாடுகளின் விளைவுகளாலேயே எப்போதும் சவால்களை எதிர்கொள்கிறான்”. மாற்றங்கள் புதிய
போராட்டங்களை உருவாக்குகின்றன. புதிய போராட்டங்கள் மாற்றங்களை உருவாக்குகின்றன. இது
தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். இதுதான் முன்னேற்றத் திற்கான வழியாகும்.
நிலக்கரியின் ஆற்றல்
நிலப்பிரபுத்துவத்தின்
தடையங்களை ஒழித்துக்கட்டிய பிறகு, பல நிலப்பிரபுக்களைத் தம்பக்கம் வென்றெடுத்த பிறகு, முதலாளித்துவம்
புதிய அடிப்படையிலான விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் தொழிற்துறையையும், வணிகத்தையும்
இட்டுச் சென்றது. மிகப்பெரிய தடைகள் வழியிலிருந்தன. விறகுகளை எரிப்பதன் மூலம்தான் முதலில்
இரும்பு மற்றும் பிற உலோகத் தாதுக்கள் உருக்கப்பட்டன. இதற்காகப் பெருமளவில் மரங்கள்
வெட்டப்படுவதை எதிர்த்து அரசாங்கம் பல சட்டங்களை இயற்றியது. இந்த அவசர நெருக்கடி, மனிதன் அறிந்தவற்றில்
மிகக் குறிப்பிடத்தக்க ஒரு ஆற்றலான நிலக்கரியைக் கண்டுபிடிக்கச் செய்தது. ஆனால்
பிற்போக்கு அவநம்பிக்கைவாதிகள் நிலக்கரியை எரித்து ஆற்றலைப் பெறுவதை இறைவனுக்கும் மனிதனுக்கும்
எதிரான குற்றமாக வழக்கம்போல் குறைகூறினர். நூற்றுக்கணக்கான எதிர்ப்பு மனுக்கள் நாடாளுமன்றத்தில்
குவிந்தன. அரசனிடம் உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் ஒரு முறை “மனிதன் தனது சொந்த
நடவடிக்கைகளின் விளைவுகளாலேயே சவால்விடப்பட்டான்.” நிலக்கரியில் அடங்கியிருக்கும்
பெரும் ஆற்றலை விடுவித்துப் பயன்படுத்தும் முயற்சிகள், தொடர்ச்சியான
புதிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானப் பிரச்சினைகளை எழுப்பின. ஆற்றலின் ஒவ்வொரு புதிய
வடிவமும் ஏன் தொழிநுட்ப நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது என்றால் புதிய ஆற்றலைப் பயன்படுத்த, பழைய கருவிகளும்
- உற்பத்தி முறைகளும் - தொழில்நுட்பமும் பயனற்றுப் போய்விட்டன என்பதுடன் தொழில்நுட்ப
மற்றும் விஞ்ஞானத்தின் உயர்நிலை வளர்ச்சி புதிய ஆற்றலை பயன்படுத்தத் தேவைப்படுகிறது
என்பதும்தான். உதாரணமாகப் பூமியின் வயிற்றிலிருந்து நிலக்கரியை வெட்டி எடுப்பதில் உள்ள
ஒரு கடினமானப் பிரச்சினை, சுரங்கங்களையும் அதன் வாயில் களையும் நீர் சூழ்ந்துவிடாமல்
தடுக்கப் போதுமான நீரேற்றிப் பம்புகள் இல்லாததுதான். இத்தகைய நெருக்கடியான நிலைமைக்கு
விடைகாண்பதுதான் அன்றைய விஞ்ஞானத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் முன் இருந்த சவாலாகும்.
படிப்படியாக, மிகவும் சிரமப்பட்டு
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டது. டோரி செல்லிஸ் அவர்களின் வெற்றிக் கண்டுபிடிப்புக்குப்
பின், சாவெறி என்ற இராணுவப் பொறியாளர் 1695ல் ஒரு எஞ்சினை
நிறுவினார். அடுத்து 1712ல் நியூகாமன் எஞ்சின் உருவாக்கப்பட்டது. அதைத்
தொடர்ந்து ஜேம்ஸ்வாட் என்பவர் 1769ல் ஒரு எஞ்சின் உரிமத்தை பதிவு செய்தார்.
1784ல் அதில் மேலும்
மாற்றம் செய்து நீராவி எஞ்சின் உருவாக்கப்பட்டது.
நிலக்கரியும், நீராவி எஞ்சினும்
தொழிற்புரட்சியை ஏற்படுத்தியதுடன் பல தொழில்நுட்பங்களையும், இயற்கை நடைமுறைகளையும்
மாற்றியமைத்தது. இதனால் மனிதனும் உற்பத்தி நடைமுறைகளும் இனிமேலும் ஆற்றலின் இயற்கை
வடிவங்களான காற்று, நீர் அல்லது விலங்குகளைச் சார்ந்திருக்க வேண்டிய
அவசியமில்லாமல் போயிற்று. நிலக்கரியின் ஆற்றலை வெப்ப ஆற்றலாகவும், பிறகு இயந்திர
இயக்கமாகவும் மாற்றியதன் மூலம் மனிதன் இயற்கையில் புதிய வகை மாற்றங்களை உருவாக்கினான்.
அவனுடைய இந்த நடவடிக்கைகள் மனித சமுதாயத்திலும், மனிதனிலும் விரைவான மாற்றங்களை
ஏற்படுத்தின.
அணு ஆற்றல்
அணுக்கருவைப் பிளக்கவும்
மாற்றவும் முடியும் என்பதை நிரூபித்தது என்பது, விஞ்ஞானத்தில் ஏற்பட்ட
ஒரு மாபெரும் புரட்சியாகும். இந்தத் துணிச்சலான மாபெரும் அறிவியல் நடவடிக்கையில் ரூதர்போர்டு, உலகிலிருந்த முன்னணி
இயற்பியல் விஞ்ஞானிகளைத் தன்னைச் சூழ்ந்து செயல்படச் செய்தார். அணுவின் ஆற்றல் குறித்த
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் ரூதர்போர்டின் பேரறிவு வழிகாட்டுதலைச் செய்தபோது, மற்றவர்கள் மதிப்புமிக்கப்
பங்களிப்புகளைச் செய்தனர். அணுவினுடைய ஆற்றலை மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது
என்பது சர்வதேச விஞ்ஞானிகளின் மாபெரும் கூட்டுமுயற்சிகளின் விளைவாகும். ஆனால் அவர்கள், அணுசக்தியானது
தனியரு அரசாங்கத்தின் சொந்த இரகசிய ஏகபோகமாக மாறும் என்பதை ஒரு கணம்கூட நினைத்துப்
பார்த்திருக்கமாட்டார்கள்.
ஒழுங்கு செய்யப்பட்ட சமூகத்திட்டத்தின்
அடிப்படையில் ஏற்படுகின்ற சமூக ரீதியான தொழில்துறை உற்பத்தியில் திறன்களை வெளிப்படுத்திய
இந்த அதிசய அணு ஆற்றல், முதலாளித்துவத்தின் சாதாரனமான சூழ்நிலைமைகளில்
அடையப்பட்டது அல்ல என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. போரினுடைய நெருக்கடியாலும், உடனடித் தேவையினாலும்
இது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் மீது திணிக்கப்பட்டது. ஹிட்லர் ஏதோ ஒரு வகையான
எளிதில் அழிக்கமுடியாத இரகசிய ஆயுதம் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வான்
என்ற எதிர்பார்ப்பாலும் இந்த அணுவெடிப்பு முயற்சி செய்யப்பட்டது. இராணுவ அறிஞர்கள், அணுவின் ஆற்றல்
யுத்தம் பற்றிய விஞ்ஞானத்தை மாற்றியமைத்துவிட்டது என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
ஆனால் அணுசக்தி அதைவிட முக்கிய மான ஒன்றை சாதிக்க உள்ளது. “இந்தப் புதிய
ஆற்றல் ஓருலக அரசைக் கொண்டுவரும். மனித இனத்தை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சிப் போக்கில்
இது இறுதிக்கட்டம்” என்று புகழ்பெற்ற விஞ்ஞானியான லாரென்ஸ் பிராக்
கூறினார். எவ்வாறு நெருப்பு மனிதனை அவனுடைய காட்டுமிராண்டிக் குலக்குழுவிலிருந்து
- குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து நாகரீக சமுதாயத்திற்கு முன்னேறச் செய்ததோ; எவ்வாறு நிலக்கரியும், நீராவியும் அவனை
நிலப்பிரபுத்துவ உள்ளூர்த் தன்மையிலிருந்து விடுவித்து இலட்சக்கணக்கான, ஒழுங்கமைக்கப்பட்ட
கட்டுப்பாடான தொழிலாளர்களைக் கொண்ட இயந்திர உற்பத்தி தேசத்திற்குச் செல்ல வழியைக் காட்டியதோ...
அவ்வாறே அணு ஆற்றல் - (முதலாளித்துவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட பல இலட்சக்கணக்கன மக்களின்
உதவியுடன், பிற்போக்குச் சக்திகளையும், தேசியத் தடைகளையும்
தூக்கியெறிந்து) பல்தேசிய சோசலிச சமூகத்திற்கு மனித இனத்தை இட்டுச் செல்ல விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அணுக்கருவின் சிதைவு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த அழிவுக்கும் காரணமாய்
அமைந்துள்ளது என்பதே அதன் சிறப்பு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை
மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்ற பொருளில் கூறுகிறோம்.
‘நெருப்பு’ கண்டுபிடிப்பின்
போதும், நிலக்கரியை உபயோகிப்பதில் ஆரம்பத்தில் காணப்பட்ட பிரச்சினைகளும்
மனித குலத்தின் முன்பு பெரும் தடைகளாக இருந்தது போலவே அணு ஆற்றலும் நம்முன் பெருமளவிலான
சவால்களைக் கொண்டு வந்துள்ளது. நாம் ஏற்கெனவே பார்த்தது போல மனிதன் சமூக வளர்ச்சியின்
ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய சொந்த நடவடிக்கைகளாலேயே சவால்விடப்படுகிறான். ஆனால்
மனித இனத்தை முன்னுக்குத் தள்ளிவிடுகின்ற ஆக்கப்பூர்வமான சமூகச் சக்திகள் இந்தத் தடைகளை
எதிர்கொள்ளவும், தீர்க்கவும் துணிவைக் கொண்டுள்ளன. இன்று அணு ஆற்றல் விடுத்துள்ள
சவால்களை மனிதகுலம் தீர்க்கும். இயற்கை விஞ்ஞானம் அத்தகைய வல்லமையை வென்றெடுக்கும்.
ஆனால் அணுசக்தி எதிர்ப்பாளர்களோ இந்தத் தடைகளைக் கண்டு அஞ்சுகின்றனர். பாதிப்புகளை
மட்டுமே காட்டி அதை மிகைப்படுத்தி பீதியூட்டி பயமுறுத்துகின்றனர்.
அணு உலைகளை மூடவேண்டும்
என்பதற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறும் காரணங்கள்
அணுசக்தி எதிர்ப்பாளர்கள்
அணு உலைகள் அனைத்தையும் மூடவேண்டும் என்பதற்கு முன்வைக்கும் காரணங்கள் சரிதானா என்பதைத்
தற்போது பரிசீலிப்போம். அணுசக்தி எதிர்ப்பாளர்கள், அணு உலை பீதியை கிளப்பி
அணு உலையை மூடவேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர். அணுசக்தி விஞ்ஞானத்தின் பிரச்சினைகளை
மிகப்பெரிய அளவிற்கு மக்கள் மீது திணிக்கப்பட்ட மரணக் கொடூரம் என்பதாய் சித்தரித்து, அதன் மூலம் பீதியைக்
கிளப்பிவிட்டு மக்கள் மத்தியில் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைக்கின்றனர்.
அணுசக்திக்கு எதிராகப் பூதாகரமாக அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் வருமாறு:
1) நில நடுக்கம், சுனாமி போன்ற
இயற்கைப் பேரழிவுகளின் போது அணு உலை பத்திரமாகச் செயல்படாமல் விபத்துக்கள் ஏற்படும், அது மாபெரும்
சேதங்களை உருவாக்கும்;
2) அணு உலையிலிருந்து வெளியாகும்
அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதும், கதிர்வீச்சுகளைக் கட்டுப்படுத்துவதும் முடியாது.
கதிரியக்கம் மக்கள் நலன்களையும், எதிர்காலத் தலைமுறைகளையும் பாதிக்கும்;
3) உலக அளவில் அணு உலைகள்
காலாவதியாகிவிட்டன எனவே அனைத்து அணு உலைகளையும் மூடவேண்டும்;
4) சூரிய ஒளி, காற்று, நீர், கடலலை போன்ற ஆபத்தில்லாத
வற்றை ஏன் பயன்படுத்த கூடாது;
என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
முதலில் அணு உலை
விபத்துக்களை எடுத்துக்கொள்வோம். அணு உலை விபத்து ஏற்பட்டால், அணு உலை வெடித்தால்
என்னென்ன விளைவுகள் ஏற்படும் என மக்கள் பீதியுறும்வண்ணம் விஞ்ஞான வர்ணனைகள் பல தரப்படுகின்றன.
விஞ்ஞான வதந்தி அடிப்படையிலான இந்தப் பீதியைக் கிளப்பும் அணு உலை எதிர்ப்பாளர்கள், விபத்து என்பதே
“விதி” என்ற தவறான நிலையிலிருந்தும், அணு உலைகளில்
ஏற்படும் விபத்துக்களால் அணு உலைக்கு ஆபத்து என்பதே அறியவரும் பாடம் என்றும் கூறி அணு
உலைகளை மூடவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் அணு உலை விபத்துக்கள் விதியாகிப்போன
வரலாறு அல்ல. எல்லா அணு உலைகளிலும் விபத்து ஏற்படுவதில்லை. நிச்சயம் விபத்து வந்தே
தீரும் என்ற முடிவோடு இந்த விஞ்ஞான யுகத்தில் வாழவே முடியாது.
இதுவரை உலகில் ஏற்பட்ட
அணு உலை விபத்துக்கள் ஒரு சில தவிர, உலகில் உள்ள 500க்கும் மேற்பட்ட
உலைகள் அனைத்திலும் விபத்து ஏற்பட்டுவிடவில்லை. “செர்னோபில்” உட்பட விபத்து
ஏற்பட்ட உலைகள் பற்றிய வதந்திகளே அதிகமாகப் பரப்பப்பட்டதால் அணுவிபத்து பற்றிய பீதி
உணர்வைத் தட்டி எழுப்பி விஞ்ஞானிகளைக் கூட மயக்க அணு உலை எதிர்ப் பாளர்களால் முடிந்தது.
இதுவரை அணு உலையில் ஏற்பட்ட கோளாறுகளினால், விபத்துக்களால் மனித சேதாரமும்
இயற்கைச் சூழல் கேடுகளும் ஏற்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் ஒப்பீட்டளவில் அணு உலை விபத்துக்களால்
ஏற்பட்ட இழப்புகளைவிட, பிற தொழில் துறைகளின் விபத்துக்களால் ஏற்பட்ட
இழப்புகளே மிகவும் அதிகம். அதற்காக அந்நிறுவனங்களை மூடவேண்டும் என்று யாரும் போரிடவில்லை.
அணு உலைகளில் ஏற்படும்
விபத்துக்களை விட நிலக்கரி, எண்ணெய் எரிவாயு மற்றும் நீர் மின்சாரம் தயாரிக்கும்
மின் நிலையங்களில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகும். பிற மின் உற்பத்தி
நிலையங்களில் விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அணு உலை விபத்துக்களால் ஏற்பட்ட
மனித உயிரிழப்புகள் மிகவும் குறைவுதான். அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில்
1 யூனிட் மின்சாரம்
தயாரிப்பதைக் கொண்டு விபத்தின் இழப்பைக் கணக்கிட்டால், அணுமின் நிலையங்களில்
ஏற்படும் விபத்து இழப்பு வெறும் 1 சதவீதம்தான். மாறாக இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து
விபத்தால் வெளியாகும் வாயுக்களால் கடுமையான உயிர் இழப்புகளைச் சந்திக்கிறோம். போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், சுற்றுச்சூழல்
பாதிப்பும் அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துக்களைவிடப் பன்மடங்கு அதிகம் என்பதை நாம் அறிவோம்.
1976-ல் இத்தாலியில்
ரசயான தொழிற்சாலையிலிருந்து வெளியான டை-ஆக்சின் என்ற விஷவாயு பலர் உயிரை பலிவாங்கியது.
அதே விஷவாயுவைத்தான் வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது. இத்தகைய விபத்துக்கள்
நடப்பதால் இந்தத் தொழிற்சாலைகளை மூடுவேண்டும் என்று அணு எதிர்ப்பாளர்கள் கூறுவதில்லை.
ஆனால் அணு உலை விபத்தை மட்டும் காரணம்காட்டி அதை மூடவேண்டும் என்று கூறுவதன் மர்மம்
என்ன? அல்லது அவ்வாறு மூடுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வாகுமா?
அணு உலைகளில் நடந்துவரும்
விபத்துக்கள்கூடத் தவிர்க்க முடியாதது அல்ல. அமெரிக்காவின் மூன்று மைல் தீவுகள், செர்னோபில் மற்றும்
அண்மையில் ஜப்பானின் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்துக்கள் தவிர்த்திருக்கக்கூடிய விபத்துக்கள்தான்.
இவைகள் அனைத்தும் அணுசக்தித் தொழில்நுட்பத்தின் கோளாறுகளால் ஏற்பட்ட விபத்துக்கள் அல்ல.
அந்த ஆலைகள் சரிவரப் பராமரிக்கப்படாததால் ஏற்பட்ட விபத்துக்களேயாகும். புகுசிமா அணு
உலை விபத்துப் பற்றி ஆய்வு செய்த ஜப்பான் நாடாளுமன்ற ஆய்வுக்குழு, அந்த அணு உலை
விபத்துக்குக் காரணம் தொழில்நுட்பப் பிரச்சினைகள் அல்ல என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள்
சரியாகப் பராமரிக்கப்படாதது, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முதலாளித்துவ இலாபவெறிதான்
என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது:
- அணு உலையைச் சுனாமி அலைகள் தாக்கியதால் அவசரகால மின் இணைப்புச் செயல்படாதபோது, வெளியிலிருந்து
மின்சார உதவி கிடைக்கவில்லை. அதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்படவில்லை;
- அணு உலை செயலிழந்தவுடன்
உலை உருகுவதைத் தடுப்பதற்குக் கடல் நீரைக்கொண்டு உடனடியாக உலையைக் குளிர வைக்கவில்லை.
காரணம், அவ்வாறு செய்தால் அணு உலை துருப்பிடித்து அதன் ஆயுட்காலம் குறைந்து
போய்விடும் என்ற அச்சம். அதாவது முதலாளித்துவ இலாபவெறி;
- அணு உலை அமைக்கும் இடம்
சுனாமி தாக்கப்படும் என்று தெரிந்தே அணு உலைகளை ஒரே இடத்தில் அமைத்தது. காரணம், மலிவான விலையில்
இடம் கிடைத்தது;
- ஜப்பானிய முதலாளிகள் காலாவதியாகிப்போன
அணு உலைகளைத் தொடர்ந்து இயக்கி வந்தனர். மொத்தம் உள்ள 54 உலைகளில் 20 உலைகள் காலாவதியானதுதான்.
காரணம், முதலாளித்துவ இலாபவெறி.
எனவே ஜப்பானிய புகுசிமா
அணு உலை விபத்து என்பது அணு உலைப் பாதுகாப்பு குறித்த சர்வதேச அணுசக்திக் கழகத்தின்
பாதுகாப்பு விதிகளைச் சரிவரக் கடைபிடிக்காதது; காலாவதியாகிப்போன அணு
உலைகளை இயக்கியது போன்ற ஏகபோக முதலாளித்துவத்தின் இலாப வெறியின் காரணமாகவே நடந்துள்ளது.
ரசியாவின் செர்னோபில் அணு உலை விபத்திற்கும்கூட, ரசியாவில் ஏற்பட்ட மரபுவழி
முதலாளித்துவத்தின் மீட்சியும் இலாபவெறியுமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அணுசக்தித்துறை விபத்துக்களின் அனுபவங்கள் தனியார்துறையின் கீழ் அணு
உலைகளை நடத்துவதோ, விபத்துக்களைத் தடுப்பதோ சாத்தியமற்றது என்பதைத்தான்
காட்டுகின்றன. எனவே அனைத்து அணு உலைகளையும் பாதுகாப்பாக அரசே ஏற்று நடத்துவதுதான் விபத்துக்களைத்
தவிர்ப்பதற்கான ஒரேவழியாகும்.
இரண்டாவதாக, அணுக்கழிவுகள்
மற்றும் கதிர்வீச்சுப் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம்
“கதிரியக்க அபாயம் மிகுந்த
அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பது எனும் பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வுகாணப்படவில்லை.
இவற்றால் இயற்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் ஏற்படும் கதிர்வீச்சால் புற்று
நோய் உட்பட மரபுவழிக் கோளாறுகள் ஏற்படும். அத்துடன் அணு உலையிலிருந்து வெளிப்படும்
கதிர் வீச்சால் அணு உலையைச் சுற்றியுள்ள பிரதேச மக்களது பல தலைமுறைகள் நாசமாகும். கதிர்வீச்சுக்
காரணமாக கடல் நீர் நச்சுத்தன்மை அடையும். அதனால் கடல்வாழ் உயிரினங்களை உண்ணும் மனிதர்களுக்குக்
கதிர்வீச்சுப் பாதிப்பு ஏற்படும்” என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
அணு உலைகளிலிருந்து வெளியேறும்
கழிவுகளால் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்றவாதம் ஒரு அடிப்படை உண்மையை மூடிமறைத்துவிட்டு
முன்வைக்கப்படுகிறது. அணு உலைகளிலிருந்து வெளியிடப்படும் கழிவுகளால் ஏற்படும் சூழல்
கேடுகள் மற்றும் கதிரியக்க பாதிப்புகளைவிடப் பிற மரபு வழியிலான நிலக்கரி, எண்ணெய் எரிவாயு
போன்ற மின் நிலை யங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாலும், இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து
வெளியேற்றப்படும் கழிவுகளாலும் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.
அணு சக்தி தயாரிக்கும்
நாடுகளில் கதிரியக்கப் பாதிப்புகள் என்பது மொத்த தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும்
கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஒப்பிடும்போது அணு உலைக் கழிவுகள் 1 சதவீதம்தான்
பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும் நீண்டகாலத்திற்குத்
தொடர்ச்சியாகப் பாதிப்புகளை உருவாக்கு பவைதான். நிலக்கரியை எரிப்பதால் வெளியிடப்படும்
சாம்பல்களில் லேசான அளவு கதிரியக்கப் (soft radiation) பாதிப்புகள் உள்ளன.
ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் ஒன்று ஆண்டிற்கு 1.5 மில்லியன் டன்
சாம்பலையும், 20,000 டன் சல்பர்-டை-ஆக்சைடையும் கழிவுகளாக வெளித்தள்ளுகிறது. உலகம்
முழுவதுமுள்ள மொத்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் சாம்பலின் அளவு எந்தளவுக்கு
இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். இவ்வாறு நிலக்கரியிலிருந்து வெளியிடப்படும் சாம்பலிலிருந்து
வெளிப்படும் கதிரியக்கத் தாக்கமானது, அணு உலைகளிலிருந்து வெளியிடப்படும்
கதிர்வீச்சுப் பாதிப்புகளை விட 100 மடங்கு அதிகம் என்று கேக்ரிட்ஜ் நேஷனல் லேபரேட்டரி
(Gagridge National Laboratory) ஆய்வு கூறுகிறது. சாம்பலில் உள்ள கதிர்வீச்சு
குறைந்த அளவானது என்று கூறலாம். அனல்மின் நிலையங்களில் அதிக அளவு சாம்பல் நேரடியாக
வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. அதன் அளவு மிகவும் அதிகம். ஆனால் அணு உலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட
முறையில் குறைந்த அளவே கழிவுகள் வெளியிடப்படுகிறது. எனவே நிலக்கரியிலிருந்து வெளியேறும்
சாம்பலிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தாக்கத்தைவிட இது குறைவானதேயாகும்.
கதிரியக்கம் என்றாலே அது
மனிதர்களுக்குப் பாதிப்பைத்தான் உருவாக்கும் என்று அணு எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
அது உண்மை அல்ல. ஜப்பானில் அணுகுண்டு வெடிப்பதற்கு முன்பிருந்தே கதிரியக்கத்தை ஆக்கப்பணிகளுக்குப்
பயன்படுத்தி வருகிறோம். மருத்துவத்துறையில் ஊடுகதிர் (x-ray) கொண்டு நோய் அறிதல், தொழிற்சாலைகளில்
பற்றவைப்பு (welding) பகுதிகளை சோதனை செய்தல் போன்றவைகளுக்குக் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி
வந்துள்ளோம். உலோகங்களில் கலந்துள்ள மூலகங்களைக் கண்டறியும் கருவிகளிலும் அணுக் கதிர்வீச்சு
பயன்படுத்தப்படுகிறது. இதில் புற்று நோய் அபாயம் உண்டு. ஆனால் புற்று நோயைக் குணப்படுத்தவும்
அதே கதிரியக்கம்தான் மருந்தாகப் பயன்படுகிறது. ரேடியத்தின் கதிர் வீச்சைக்கொண்டு புற்று
நோயைக் குணப்படுத்தும் முறையை மருத்துவத்துறை ஏற்கெனவே கண்டுபிடித்திருக்கிறது.
இன்று அணுப்பிளவுக்குப்
பிறகு, செயற்கை முறையில் கதிரியக்கத் சமதானிகள் உண்டாக்கத் தொடங்கிய பிறகு, இந்நிலை மாறி
இன்று பற்பலத்துறைகளிலும் இவற்றின் பயன்பாட்டை நுகரமுடிகிறது. இன்று கதிரியக்கத் சமதானிகளில்
மிகப்பெரும்பாலானவை மருத்துவத் துறையில்தான் பயன்படுகின்றன. இங்கு நோயைக் கட்டுப்படுத்தும்
துறைகளிலும், நோய் தீர்க்கும் மருத்துவத்திலும் பயன்படுகின்றன. தைராய்டு சுரப்பியின்
அதிக வளர்ச்சியைத் தடுக்க அறுவை சிகிச்சைக்கு பதிலாகவும், இதய அறுவை சிகிச்சையின்றி
இரத்தக்குழாய் அடைப்புகளை அகற்றவும் கதிரியக்க முறைகள் பயன்படுகின்றன. CT-ஸ்கேன், MRI-ஸ்கேன் போன்ற
கருவிகள் நோய்களைக் கண்டறியவும், உறுப்புகளின் செயல்பாடுகளைக் கண்டறியவும் பயன்படுகின்றன.
இதில் பணிபுரிபவர்களுக்கும் கதிரியக்கப் பிரச்சினைகள் உண்டு. ஆனால் அவைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உயிரியல் துறையில் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின்
உயிர்வாழும் முறைகளை ஆராய்வதற்கும், அபிவிருத்திக்கும் கதிரியக்க
முறைகள் பயன்படுகின்றன. விவசாயத்துறையை எடுத்துக்கொண்டோமானால் நிலத்தில் போடும் உரங்களை
எவ்வாறு விளை நிலங்கள் ஈர்க்கின்றன என்பதை அறிய உதவுகின்றன. நோய்களை எதிர்த்துச் சமாளிக்கவல்ல
புதியரகப் பயிர்வகைகள், அதிக விளைச்சலைக் கொடுக்கும் நெல், கோதுமை போன்றவற்றில்
புதிய ரகங்கள்; பெரிய விதைகள், பருமனான பழங்களை கொடுக்கவல்ல புதியரகத் தாவரங்கள்
போன்றவைகள் அனைத்தையும் கதிரியக்கத்தின் மூலமே நாம் பெறுகிறோம். புவியியல் துறையில்
பாறைகள், புதைபடிவங்கள், மற்றும் எலும்புகளின் காலத்தை அறியவும் இத்தகைய
கதிரியக்கங்களே பயன்படுகின்றன.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலிருந்தும், கணினி, தொலைக் காட்சி, கைபேசி போன்ற
அனைத்துப் பொருட்களிலிருந்தும் நாம் கதிரியக்கத்தின் தாக்கத்தைப் பெற்றுக் கொண்டுதான்
இருக்கிறோம். எனவே கதிரியக்கம் என்றாலே ஆபத்துதான் என்கிற வாதம் சரியல்ல. எனவே, அணு உலைகளிலிருந்து
வெளிப்படும் கழிவுகளும், கதிரிவீச்சுகளும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு
ஏற்படுத்துகிறது என்ற அணுசக்தி எதிர்ப்பாளர்களின் வாதம் மிகைப்படுத்திப் பீதியூட்டுவதேயாகும்.
அவ்வாறு பீதி யூட்டி அணு உலையை மூடுவதுதான் அவர்களின் நோக்கமாகும்.
விபத்துக்களே ஏற்படாது
என்றோ, கதிர்வீச்சே இல்லையென்றோ நாம் கூறவில்லை. அணுவை ஆக்கப்பணிகளுக்குப்
பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகளை சவாலாக எடுத்துக்கொண்டு தீர்க்கவேண்டிய பிரச்சினைகளேயாகும்.
அணு சக்தியை மின்சக்தியாக மாற்றுவதற்கு அதாவது கதிரியக்கப் பிரச்சினைகள் இன்றி மின்சாரத்தைப்
பெறுவதற்கு விஞ்ஞானிகள் வேறு ஒரு கோணத்தினின்றும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கணமான
அணுக்கருவைப் பிளந்து (fission) அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தின் மூலம்
ஆற்றலை உருவாக்குவதற்குப் பதிலாக லேசான அணுக்கருக்களைக் கொண்ட மூலகங்களை ஒன்றிணைப்பதின்
மூலம் அதாவது “அணுக்கருத் தொகுப்பின்” (fusion) மூலம் அதிக சக்தியைப்
பெறமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். அணுத்தொகுப்பு மூலம் ஆற்றலை உருவாக்குவதற்கு
நமக்குத் தேவை ஹைட்ரஜன் வாயுவேயாகும். அதுவே இங்கு எரிபொருளாகப் பயன்படுகிறது. இதன்மூலம்
கதிரியக்க வெளிப்பாடுகள் மற்றும் சூழல் கேடுகள் இருக்காது. ஆனால் இதைச் செய்வதற்கான
பிரச்சினை குறைந்த கனமுள்ள ஹைட்ரஜன் அணுக்கருவை உயர்ந்தபட்ச அளவுக்கு வெப்பமூட்ட வேண்டும்.
இன்றைக்குள்ள இரசாயன வழிமுறைகள் மூலம் அவ்வளவு வெப்பத்தை உருவாக்க முடியாது. அணுப்பிளவு
நிகழ்ச்சி ஒன்றின் மூலம்தான் அதை எட்டமுடியும். விஞ்ஞானிகள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு
வருகின்றனர். தொடர்ச்சியான நடைமுறைகள் மூலம் இப்பிரச்சினைகளுக்கு விஞ்ஞானம் தீர்வுகாணும்
என்பதே உண்மை. கதிரியக்க ஆபத்தில்லாத அணுத் தொகுப்பின் மூலம் மின்சாரத்தை அணு விஞ்ஞானம்
உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே அணுசக்தி என்பது ஒரு அற்புதமான சக்தியேயாகும்.
எனவே கதிரியக்கப் பிரச்சினைகளைச் சவாலாக எடுத்துக்கொண்டு அணுத்துறையில் முன்னேறுவதுதான்
அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான வழியாகும்.
மேலும் கதிரியக்கமற்ற
மாசுபடாத சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவற்றால் மின்சாரம்
தயாரிக்கலாம் என்று அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட மாசற்ற முறையிலான
மின் உற்பத்தி செய்வது மிகவும் அவசியம்தான். ஆனால் இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு
நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிட முடியாது. காற்று, சூரிய ஒளி போன்ற
முறைகள் மூலம் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க இயலாது. சூரிய ஒளி வருடம் முழுவதும்
மின்சாரம் தயாரிப்பதற்கோ, இரவு நேரங்களில் மின்சாரம் தயாரிப்பதற்கோ உகந்தது
அல்ல.
காற்றாலைகளை தமிழகம் முழுவதும்
அமைத்தாலும் ஆண்டிற்கு 10,000 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பெறமுடியாது.
அதுவும் ஆண்டுமுழுவதும் கிடைக்காது. காற்று அடிக்கும் காலத்தில் மட்டுமே மின்சாரம்
கிடைக்கும். மொத்த காற்றாலைகளின் உற்பத்தித் திறனில் 20 சதவீதம்தான்
அவைகள் உற்பத்தி செய்யும். ஆனால் கூடங்குளம் ஒரே இடத்தில் மட்டும் 10,000 மெகாவாட் மின்சாரத்தைத்
தயாரிக்க முடியும்.
காலப்போக்கில் நிலக்கரி, எரிவாயு ஆதாரங்கள்
வற்றிப் போகும்போது அணுசக்தித் தொழில்நுட்பம் மேலும் மேலும் முக்கியத்துவம் பெறும்.
உலகில் தற்போது கிடைத்துவரும் மரபு ரீதியான இத்தகைய ஆதார வளங்கள் இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான்
கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நிலக்கரி, எண்ணெய் போன்ற
எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கரியமிலவாயு
காற்றுமண்டலத்தை வெப்பப்படுத்தி, ஓசோன் படலம் ஓட்டை விழுவதால், புவி வெப்பம்
அடைகிறது. அதன் விளைவாகப் பூமியின் இரு துருவங்களிலும் உள்ள பனி உருகி கடல் மட்டம்
உயர்ந்து பல நாடுகள் மூழ்கிபோகும் அபாயத்தைச் சந்திக்கிறோம். எனவே பாதுகாப்பான அடிப்படையில்
அணு மின்சாரம் தயாரிப்பது மிக மிக அவசியமாக மாறியுள்ளது. அதற்கு அணுசக்தி அவசியமான
ஒன்றாக மாறிவருகிறது.
இறுதியாக, அணு உலை காலாவதியாகிவிட்ட
ஒன்று என்றும், புகுஷிமா விபத்திற்குப் பிறகு உலக அளவில்
பல நாடுகள் அணு உலைகளை மூடிவருகின்றன என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்ற வாதங்களை
எடுத்துக்கொள்வோம்.
“அணு உலைகள் உலக
அளவில் காலாவதியாகிவிட்டன; புகுஷிமா விபத்தின் கோர விளைவுக்களுக்குப் பிறகு
உலக நாடுகள் அனைத்துமே அணுமின் நிலையங்களைத் தொடர்ந்து நடத்துவதைப் பற்றி மறு பரிசீலனை
செய்யத் தொடங்கியுள்ளன; பெல்ஜியம் தனது நாட்டின் அணு உலைகளை மூடப்போவதாக
அறிவித்துள்ளது; ஜெர்மனியும் அதையே செய்யப்போகிறது. அவ்வாறு இருக்கையில் இந்தியா
மட்டும் அணுசக்தியை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று அவர்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.
அணுசக்தி எதிர்ப்பாளர்களின்
இக்கூற்று உண்மைக்கு நேர்மாறானது. இன்று மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளின்
விளைவாகச் சில அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன என்ற போதும் உலகின் பல நாடுகளில்
அணுமின் உலைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகள் அனைத்துமே முன்னெப்போதும் கண்டிராத ஒரு கடுமையான உற்பத்தித் தேக்க நெருக்கடியில்
சிக்கியுள்ளன. இதன் விளைவாக அதில் உள்ளடங்கிய நாடுகளின் வளர்ச்சி விகிதங்கள் ஒரு சதவீதம்
ஒன்றரை சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. அந்த அளவிற்கு அவற்றின் எரிசக்தித்
தேவையும் குறைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின்
பல்வேறு தொழில் நிறுவனங்கள் எவ்வாறு மூடப்பட்டு வருகின்றனவோ அதுபோலவே அணுமின் நிலையங்களும்
மூடப்பட்டு வருகின்றன.
மேற்கத்திய நாடுகள் அணு
உலைகளை மூடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அந்நாடுகளில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகளின்
ஆயுட்காலம் முடிந்துவிட்டதும் ஒரு காரணமாகும். ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளாகும்.
எனவே காலாவதியாகிப்போன அணு உலைகளை மூடிவிட்டு புதிய அணு உலைகளைத் திறப்பதில் புகுஷிமா
விபத்துக்குப் பிறகு அந்நாடுகள் அக்கறை காட்டுகின்றன.
செர்னோபில் விபத்துக்குப்
பிறகு, ரசியாவில் புதிய அணு உலைகள் கட்டப்படுகின்றன. தற்போது அணுமின்சாரத்தின்
மூலம் கிடைக்கும் 23,200 மெகாவாட்டை, வரும் 8 ஆண்டுகளில் 43,300 மெகாவாட்டாக
உயர்த்த இரசியா திட்டமிட்டுள்ளது. செர்னோபிலுக்குப் பிறகு இத்தாலியில் காலாவதியாகிப்போன
உலைகள் மட்டுமே மூடப்பட்டன. தற்போது புகுஷிமாவிற்குப் பிறகு அந்நாடு அல்பேனிய எல்லையில்
அணு உலைகளை நிறுவிவருகிறது. ஜப்பானில்கூடப் புகுஷிமா விபத்தின்போதுகூட அதன் அருகில்
அமைந்துள்ள டொகோகூ அணுமின் நிலையம் எந்தப் பாதிப்புமின்றி இயங்கி வருகிறது. சீனா புதிதாக
20 அணு உலைகளைத்
திறக்க உள்ளது. வியட்நாமில் ரசியாவும், சீனாவும் 5 அணு உலைகளை நிறுவி
வருகின்றன. தென்கொரியாவும் கூடத் தனது அணுமின் உற்பத்தியை 30 சதவீதத்திலிருந்து
60 சதவீதமாக உயர்த்துவதற்கு
20 அணு உலைகளை அமைக்கத்
திட்டமிட்டுள்ளது. பிரான்சு நாட்டில் 70 சதவீத மின்சாரத்தை அணு
உலைகள்தான் உற்பத்தி செய்துவருகின்றன. இத்தனைக்கும் அந்த நாடு கத்தோலிக்கக் கிறிஸ்துவத்தை
ஏற்றுக்கொண்ட நாடு. இங்கே இப்போது போர்க்கோலம் பூணும் பாதிரியர்கள் பாரீஸ் சென்று பார்க்க
வேண்டும். அணு உலையின் ஆச்சரியங்களை.
மேலும் நமது நாட்டில்
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் எத்தனையோ புயல் களையும், சுனாமிகளையும்
சந்தித்துப் பாதுகாப்பாகத்தான் தலை நிமிர்ந்து நிற்கின்றது. எனவே இன்று உலகம் முழுவதும்
அணு உலைகள் மூடப்பட்டு வருகின்றன என்ற அணு உலை எதிர்ப்பாளர்களின் வாதம் உண்மையல்ல.
மேலும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுவதைப்போல ‘அணு உலைகள் உலக அளவில்
காலாவதியாகிவிட்டன’ என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. மேலும் உலக நாடுகளில்
ஒரு புறம் உலைகளை மூடுவதும், மறுபுறம் திறப்பதும் என்பது நடந்துகொண்டிருக்கிறது.
அதற்கு அணுத் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணம் அல்ல. அதற்குப் பின்னால் அரசியல் பொருளாதாரக்
காரணங்கள் உள்ளன. அதைப்பற்றி அடுத்துக் காண்போம்.
அணுத்துறையின் அரசியல்
பொருளாதாரம்
அணுசக்தித் துறையில் ஏற்பட்டிருக்கின்ற
நெருக்கடியைப் பற்றிப் புரிந்துகொள்ளவும், அந்த நெருக்கடிகளுக்குத்
தீர்வு காணவும் அத்துறையில் நிலவும் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆய்வு செய்வோம்.
1950களில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும்
மின்னியல் தொழில்நுட்ப துறையிலிருந்து (Electro tech industry) அணுமின் தொழில்துறை
(Atomic Power Industry) தோன்றியது. மின்னியல் தொழிற்துறையில் சர்வதேசச்
சந்தையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த 5 பெரும் ஏகபோக நிறுவனங்கள்
அணுகுண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டன. அமெரிக்காவைச் சார்ந்த ஜெனரல் எலக்டிரிக் (GE) மற்றும் வெஸ்டிங்
ஹவுஸ் (Westing House); ஜெர்மனியைச் சார்ந்த அல்ஜிமென் எலக்ட் ஜிசல் ஷேப்ட் (AEG) மற்றும் சீமன்ஸ்
(Siemens); சுவிட்சர்லாந்தைச் சார்ந்த பிரௌன் பௌரி (Brown Bovry)
மற்றும்
சீ (Cie) போன்ற நிறுவனங்கள் அதில் ஈடுபட்டன. மின்னியல் துறையில் சர்வதேச
ரீதியிலான ஏகபோகம், அவர்களிடம் இருந்த சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப
அடிப்படைகள் போன்ற சாதகமான நிலைமைகளைக் கொண்டு அணுமின் நிலையத்தை உருவாக்க முயற்சித்தனர்.
அமெரிக்காவில் முதலில் அணு உலை உருவாக்கப்பட்டது. அந்தக் கம்பெனிகள் தங்கள் நாடுகளில், தங்களின் உற்பத்திப்
பொருளுக்கு ஏகபோக விலைகளை நிர்ணயிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தன. அதன் விளைவாகக் கொள்ளை
லாபம் ஈட்டியிருந்தனர். இதில் அமெரிக்காவைச் சார்ந்த அணுசக்தி நிறுவனங்கள்தான் தங்களது
சொந்த நாட்டுக்கப்பால் அணு உலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருந்தன.
1970களின் இடைப் பகுதிவரை
சர்வதேச அணு உலைச் சந்தையில் அமெரிக்கக் கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்கா
மொத்த அணு உலைச் சந்தையில் 1974 வரை 84.3 சதவீதத்தைக் கொண்டிருந்தது.
1975க்குப் பிந்தைய
ஆண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகளில் அணுசக்தித் துறையில் நெருக்கடி தொடங்கின. அதே நேரத்தில்
சர்வதேசச் சந்தையில் அமெரிக்காவிற்கு எதிராகப் பிரான்சும், ஜெர்மனியும் பிரதானப்
போட்டியாளர்களாக உருவெடுத்தன. அந்நாடுகள் தங்கள் சொந்த கார்ட்டல்களை உருவாக்கிக் கொண்டு
அமெரிக்காவின் அணு உலை ஏற்றுமதியை 1979ல் 55.3 சதவீதமாகக் குறைத்துவிட்டன.
கீழ்க்கண்ட அட்டவணை அதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நாடுகள்
|
1965-69
|
1970-74
|
1975-79
|
|||
மெகாவாட்
|
%
|
மெகாவாட்
|
%
|
மெகாவாட்
|
%
|
|
கனடா
|
327
|
3.2
|
1229
|
3.8
|
1040
|
6.9
|
பிரான்ஸ்
|
560
|
5.4
|
900
|
2.8
|
2,744
|
18.2
|
மே.ஜெர்மனி
|
780
|
7.5
|
1,612
|
5.0
|
2,934
|
19.5
|
ஸ்வீடன்
|
-
|
-
|
1,312
|
4.1
|
-
|
-
|
அமெரிக்கா
|
8,710
|
83.9
|
27,060
|
84.3
|
8,327
|
55.3
|
மொத்தம்
|
10,377
|
100
|
32,121
|
100
|
15,045
|
100
|
அணுசக்தித்துறையில் இந்நாடுகளைச்
சார்ந்த மிகப்பெரும் நிறுவனங்கள் பங்கேற்றன. அவைகள் பின்வருமாறு:
- பிரான்ஸ் நாட்டைச் சாரந்த பிரமாடோன் அதன் தாய்
நிறுவனம் கிரிசாலோரம், எஃகு மற்றும் கனரகப் பொறியியல் துறையில் ஈடுபட்டது.
-
மேற்கு ஜெர்மனியின் கிராப்ட் ஒர்க் யூனியன் (KWU), அதன் தாய் நிறுவனம்
சீமன் நிறுவனம் - மின்துறை பொறியியல் துறையில் ஈடுபட்டது.
-
கனாடா நாட்டைச் சார்ந்த அணுசக்தி கார்ப்பரேசன் (AECL) அந்நாட்டு மத்திய
அரசின் ஆராய்ச்சி நிறுவனம்.
-
அமெரிக்காவைச் சார்ந்த ஜெனரல் எலக்டிரிக் (GE) மின் பொறியியல், விமான இயந்திரம்
செய்யும் தொழில்களிலும்; வெஸ்டிங் ஹவுஸ் மின் பொறியியல் துறையிலும்; பேப்காக் அண்ட்
வில்காக்ஸ் அதன் தாய் நிறுவனமான ரே எம்.எல் டெர்மெட் நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியிலும், கம்பஸ்ஷன் பொறியியல்
அதன் தாய் நிறுவனமான சி.இ. (CE) கனரகத் தொழில் செய்முறையிலும் ஈடுபட்டுள்ளன.
-
ஜப்பானைச் சார்ந்த மிட்சுபிசி கனரகத் தொழில் மற்றும் கப்பல் கட்டும் தொழிலிலும்; தோஷிபா - மின்
பொறியியல் துறையிலும்; ஹிட்டாச்சி - மின் பொறியல் துறையிலும் ஈடுபட்டுள்ளன.
- ரசியா அரசு நிறுவனம் அணு
உலைகள் ஏற்றுமதி செய்தது.
மேற்கண்ட நிறுவனங்கள் இன்று அணுசக்தித்
துறையில் உலகின் மிகப்பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்கின்றன.
1975ஆம் ஆண்டுகளில்
ஏற்பட்ட நெருக்கடியின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவென்றால், அணு உலைகளை உற்பத்தி
செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் சொந்த நாட்டில் அணு உலைக்கான சந்தை சுருங்கிப் போனதுதான்.
உதாரணமாக 1974ல் அமெரிக்காவில் 118 அணு உலைகள் அமைப்பதற்கான
திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் சில ஆண்டுகள் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தங்கள்
கிடைக்கவே இல்லை. இந்த நெருக்கடிப் பற்றி வாக்கர் மற்றும் லோன்ராத் என்பவர்கள் கூறுவதாவது
“1960ஆம் ஆண்டுகளின்
இறுதியிலும் 1970ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் அணுமின் துறையில் ஏராளமான ஆர்டர்கள்
குவிந்தன. அதன் காரணமாக அந்தத் தொழிலில் வேகமாக உற்பத்தி நடந்தது. அந்த ஆர்டர்கள் வேகமாக
சரிந்து வந்ததால், சந்தை சுருங்கியதால் அந்தத் துறையின் தொழில்நுட்பத்
துறையிலும், உற்பத்தியிலும் உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத
நிலை ஏற்பட்டது. உற்பத்தியில் ஒரு மந்தநிலை உருவானது. மோசமான காலங்களில் உற்பத்தி ஒரு
சில சதவீதம் குறைவது போல் அல்ல இந்த நெருக்கடி. 1975லிருந்தே ஆர்டர்கள் இல்லாமல்
போனதால், அணுமின் உற்பத்தியில் ஈடுபட்ட கம்பெனிகள் பெரும்பாலும் செயல்பட
முடியாத நிலை ஏற்பட்டது.”
இத்தகைய ஒரு சூழலில் பன்னாட்டுக்
கம்பெனிகளுக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரேவழி, மூன்றாம் உலகநாடுகளுக்கு
அணு உலைகளை ஏற்றுமதி செய்வது தான் என்ற நிலை உருவானது. எனவே அவர்கள் மூன்றாம் உலக நாடுகளின்
சந்தையைக் கைப்பற்றுவது என்ற முடிவுக்கு வந்தனர். தங்கள் நாடுகளில் சந்தை இல்லாததால்
அங்கு உற்பத்தி செய்த உலைகளை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டினர். ஒன்று முழுமையாக
அங்கிருந்து அனைத்தையும் கொண்டுவந்தனர். அல்லது இந்தியாவில் செய்ததைப் போல உதிரிபாகங்கள்
மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்று உள்நாட்டு முதலாளிகளோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.
ஏற்கனவே மேல்நிலை வல்லரசுகளாலும், ஏகாதிபத்தியவாதிகளாலும் ஆதிக்கம் செய்யப்பட்ட
மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களுக்கு
அடிபணிந்து கட்டுப்பட்டுப் போனார்கள்.
இத்தகைய அடிமைப்பட்டுப் போகும் நிகழ்வுப்போக்கிற்கு
இந்தியா ஒரு விதிவிலக்கல்ல. தரகுத்தன்மை வாய்ந்த மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள்
ஒன்றிரண்டு உலைகளுக்கு மட்டுமல்லாது அவர்களின்
முழுத்திட்டத்திற்கும் உடன்பட்டுப் போயின. வாக்கர், லோன்ராத் வார்த்தைகளில்
சொன்னால் “முதலாளித்துவ நாடுகளுடைய சந்தை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றப்
பட்டுவிட்டது. அவ்வாறு 20ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் 10,000 ஜிகா வாட் மின்சாரம்
தயாரிப்பதற்கான பெரும் திட்டங்கள் தீட்டப்பட்டன”. இந்தியா அணுசக்தி மூலம்
10,000 மெகா வாட் மிசாரத்தை
2001க்குள் தயாரிக்கவேண்டும்
என்று 1981ல் போட்ட பெரும் திட்டங்களை, ஏகாதிபத்தியவாதிகளின்
நிர்ப்பந்தங்களோடு இணைத்தே பார்க்கவேண்டும்.
ஒரு புறம் ஏகாதிபத்திய
நாடுகள் சந்தை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மிகத் தீவிரமான அணு உலை ஏற்றுமதிகளுக்கு
இட்டுச் சென்றது. மறுபுறம், இந்திய அரசும் ஆளும் தரகுப் பெருமுதலாளித்துவ
வர்க்கங்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆற்றல் நெருக்கடிக்கு இது ஒரு அற்புதமான மருந்து
என்று கூறி அந்நிய முதலீட்டை அணுசக்தித் துறையில் அனுமதித்தன. இவ்வாறு ஏகாதிபத்திய
நெருக்கடிகளுக்குத் தோள்கொடுக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் தயாராகிவிட்டன.
ஏகாதிபத்திய நாடுகள் தங்கள்
சொந்த நெருக்கடியை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றிவிடுவதற்கு நிதிமூலதனத்தைப் பயன்படுத்திக்
கொண்டனர். பல்வேறு சர்வதேச நிதிநிறுவனங் களைப் பயன்படுத்திக் கொண்டனர்.சர்வதேச நிதிநிறுவனங்கள், இருதரப்பு - பலதரப்பு
ஒப்பந்தங்கள் மூலம் மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலைகள் மற்றும் கருவிகளை வாங்குவதற்குக்
கடன்களை வழங்கின. இதே முறையில்தான் இந்தியாவில் அணுமின் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இந்திய அணுத் துறையின்
கட்டமைப்பு
இந்தியாவில் 1947 ஆட்சி மாற்றத்திற்குப்
பிறகு, அந்நிய மூலதனத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. பிரிட்டன் மூலதனம் தொடர்வதோடு
அமெரிக்கா, சோவியத் ரசியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற
பிற ஏகாதிபத்திய மூலதனங்களும் இங்கு குவிந்தன. முதலில் இந்திய அணுசக்தித் துறையில்
அந்நிய மூலதனத்தின் பங்கைப் பற்றி எடுத்துக்கொள்வோம். அடுத்ததாக அந்நிய மூலதனம் அணுத்
துறையில் உள்நாட்டு மூலதனத்தோடு எவ்வாறு கூட்டுவைத்துக்கொண்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
மேலும் இவ்வாறு உருவானது சுயசார்பா அல்லது புதியகாலனியத் தன்மை வாய்ந்ததா என்பதையும்
பரிசீலிப்போம்.
இந்தியாவில் அணுமின் நிலையங்கள்
அந்நிய மூலதனத்தின் நலன்களிலிருந்தும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ
வர்க்கங்களின் நலன்களிலிருந்தும் இவர்களின் ஒன்றிணைந்த கூட்டுக்கள் மூலமே கட்டப்படுகின்றன.
அவை புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் நோக்கத்தில்தான் கட்டியமைக் கப்படுகின்றன.
தாராப்பூர் அணுமின் நிலையத்தை
(TAPS) அமெரிக் காவின் ஜெனரல் எலக்டிரிக் நிறுவனம்தான் கட்டியமைத்தது.
அதற்கான கட்டுமானப் பணிகளை அமெரிக்காவின் பெக்டெல் கம்பெனி செய்து கொடுத்தது. அமெரிக்காவின்
ஏற்றுமதி இறக்குமதிக்கான நிதி வழங்கும் நிறுவனம் அதற்கு நிதி உதவி செய்தது. தாராப்பூர்
அணுமின் நிலையம் 100 சதவீதம் அந்நிய மூலதனத்தால் நிறுவப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்
உள்ள RAPS-I, RAPS-II அணுமின் நிலையத்தைக் கனடிய அணுசக்திக் கழகம் (AECL) கட்டியது. இதற்கான
நிதியை கனடிய ஏற்றுமதி இறக்குமதி கடன் பாதுகாப்பு என்ற நிதிநிறுவனம் 6 சதவீத வட்டிக்கு
கடனாகக் கொடுத்தது. RAPS-Iக்கான அந்நிய முதலீடு 60 சதவீதமாகும்.
இந்த உலைக்கான கனநீர் ரசியாவால் வழங்கப்படுகிறது.
RAPS-IIல் கனடிய அணுசக்திக்
கழகம் 40 சதவீத முதலீடு செய்துள்ளது. கல்பாக்கத்தில் 20 சதவீதம், நரோராவில் 15 சதவீதம் அந்நிய
மூலதனத்தின் உதவியுடன்தான் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்பாக்கத்தில் உள்ள
அதிவேக ஈனுலை பிரான்சின் உதவியோடு கட்டப்பட்டுள்ளது. கைகா அணு உலையில் பிரான்ஸ் மூலதனம்
போட்டுள்ளது.
ரசியா சமூக ஏகாதிபத்தியம், அணு உலை அமைப்பதற்குக்
கோர்பச்சோவ் காலத்தில் ரூ.1,000 கோடி கடன் வழங்கியது. இந்தியாவில் அமைக்கும்
அணு உலைக்கு வாழ்நாள் முழுவதும் ரசியா எரிபொருள் வழங்குவதாக ஒப்பந்தம் போட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் ரசியாவின் உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது.
ஜெர்மனி, பஞ்சாபில் நங்கல்
என்ற இடத்தில் கனநீர் தயாரிக்கும் தொழிலில் 100 சதவீதம் முதலீடு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் பரோடாவில், பிரான்ஸ், ஸ்விஸ் இரண்டு நாடுகளும்
சேர்ந்து கனநீர் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்துப்
பார்க்கும்போது இந்தியாவின் அணுமின் திட்டம் முழுவதும் சுயசார்பு அற்றது என்பதைத் தெளிவாகக்
காட்டுகிறது.
இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பதில்
உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளின் பங்கு பற்றித் தற்போது பார்ப்போம்.
அணு உலை தொடங்கியபோது
டாட்டா, லார்சன் டியூப்ரோ, வால்சந்த், கிர்லாஸ்கர் அண்ட்
பிரதர்ஸ், சீமன்ஸ் இந்தியா லிமிடெட் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங் களும்
பாரத் மிகுமின் நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களும் அணுமின் நிலையத்திற்கான உதிரி பாகங்கள்
மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதில் பங்கேற்று வருகின்றன. தற்போது அமெரிக்காவுடன்
அணுசக்தி ஒப்பந்தம் போட்ட பிறகு பல்வேறு உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ நிறுவனங்கள்
அணுமின் நிலையம் அமைப்பதற்கு இந்திய அரசு தனியாருக்குத் திறந்து விட்டுள்ளது.
இவ்வாறு இந்திய அரசு ஏகாதிபத்திய
பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு தரகுமுதலாளித்துவ வர்க்கங்களின் கூட்டின்
அடிப்படையிலேயே அணுமின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஏகாதிபத்தியவாதிகளின்
நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்கவும் புதிய காலனியத்திற்குச் சேவை செய்யும் வகையிலுமே
அணுமின் நிலையங்களைக் கட்டியமைத்து வருகிறது.
ஆனால் இத்தகையத் திட்டங்களை
செயல்படுத்தி மின் உற்பத்தி செய்வதிலும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு
வழங்குவதிலும் கடும் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகள்
மற்றும் ஜப்பான் உள்ளிட்ட அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் கடும் பொருளாதார நெருக்கடி
தீவிரமடைந்துள்ளது. 2008ல் அமெரிக் காவில் தொடங்கிய இந்த நெருக்கடியிலிருந்து
இன்னும் இந்த நாடுகள் மீளவில்லை. பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
போன்றவை திவாலாகி மூடப்பட்டுவிட்டன. அமெரிக்கா மட்டும் இத்தகைய நட்டமடைந்த நிறுவனங்களுக்கு
ஆண்டுக்கு 700 பில்லியன் டாலர்களை நட்ட ஈடு என்றும், ஊக்கத்தொகை என்றும்
மக்களின் வரிப்பணத்தை வாரிவழங்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் உட்பட
அனைத்து நாடுகளிலும் இவ்வாறுதான் பெரும் ஏகபோக நிறுவனங்களுக்கு ஏராளமாகச் சலுகைகள்
வழங்கப்படுகின்றன. இந்த அளவுக்குச் சலுகைகள் வழங்கியும் கூட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து
அந்நிறுவனங்களால் மீளமுடியவில்லை. முதலாளித்துவப் பொதுநெருக்கடியின் காரணமாக மற்ற
தொழில்துறைகள் எப்படி சிக்கலை சந்திக்கின்றனவோ அதே போல் அணுசக்தித் துறையும் சிக்கலையும்
அழிவையும் நோக்கிச் செல்கிறது. எனவே அழிந்துவரும் முதலாளித்துவத்தின் கீழ் ஆற்றலின்
புதிய வடிவங்கள் வளம்வாய்ந்த உறுதியான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு மாறாக அபாயகரமான
மற்றும் சமூகச் சீரழிவிற்கான வடிவங்களாக மாறிவருகின்றன.
அணு ஏகபோகம்
அணுசக்தித் துறையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரசியா மற்றும்
சீனா போன்ற அணுசக்தி நாடுகள் ஏகபோகத்தை நிறுவியுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக
ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்த பிறகு அணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்ட
மைப்பு (NSG), சர்வதேச அணுசக்திக் கழகம் (IAEA) போன்றவை களைப் பயன்படுத்திக்கொண்டு
அணுசக்தி மீது ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதன் மூலம் அணு எரிபொருளான யுரேனியம், அணுத் தொழில்நுட்பங்கள்
குறிப்பாக இரட்டைத் தொழில்நுட்பங்கள் (அணுசக்தி மற்றும் அணு ஆயுதம் செய்வதற்கானது)
போன்றவற்றை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவே மூன்றாம் உலக ஒடுக்கப்பட்ட
நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துவதற்குத் தடையாக மாறியுள்ளது. மேலும் அணு ஆயுத பரவல்தடை
(NPT), அணு ஆயுத சோதனைத் தடைச் சட்டம் (CTBT), போன்றவைகள் மூலம்
அணு ஆயுத ஏகபோகத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தையே அழிக்கும் அளவிற்கு
அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துக்கொண்டு அணு ஆயுதப் பரவல் தடைப் பற்றிப் பேசுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து
நாடுகளும் அணுசக்தித் துறையில் ஏகபோகத்தை நிறுவியுள்ளதுடன் அணுசக்தி வர்த்தகத்தில்
போட்டியும் போடுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் தமக்கு அடிபணியாத நாடுகள் அணுமின்சாரம்
தயாரிப்பதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறது. அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்ற ஒப்பந்தத்தில்
கையெழுத்துப் போட்டுள்ள ஈரான் அணு சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத்து என்று
கூறி அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு தயார்செய்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவைத்
தமது உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் ஒரு இரண்டாம் நிலைக் கூட்டாளிக்கான இராணுவ
உடன்படிக்கைகளையும், அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களையும் செய்த பிறகு
அணுசக்தித் துறையில் தனது தடைகளைத் திரும்பப் பெற்றது. இந்தியாவை “பொறுப்புள்ள அணு
சக்தி” நாடு என்று அறிவித்தது. இந்தியாவின் அணுசக்தித் துறையைத் திறந்து
விடுவதற்கும், இந்திய அணுசக்தித் துறையில் தமது கட்டுப்பாட்டை நிறுவும் வகையிலும்
அணுசக்தி ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தம் இந்தியாவில் அணு உலைகளை நிறுவுவதில் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார்
தரகுப் பெருமுதலாளிகளும் பங்கேற்கும் வகையில் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா
இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தங்களைப் போட்டாலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில்
புதிய உலைகளைத் தொடங்கவில்லை. காரணம் அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது, அமெரிக்க நிறுவனங்கள்
விபத்துக் கால நட்ட ஈடு வழங்கவேண்டும் என்ற இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கின்றன.
அண்மையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த அரேவா என்ற நிறுவனம் இந்தியாவில் 6 அணு உலைகளை நிறுவுவதற்கு
ஒப்பந்தம் போட்டது. ஆனால் அந்த நிறுவனம் நிறுவ இருக்கும் புதிய வகை அணு உலைகளை அமைப்பதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு அந்நிறுவனம் 3 டிரில்லியன் யூரோ நட்டத்தில்
இயங்குகிறது. எனவே திட்டமிட்டப்படி அந்த நிறுவனம் அணு உலைகளைக் கட்டுமா என்பது சந்தேகமே.
அப்படியே ஏகாதிபத்திய நாடுகள் அணு உலைகளை நிறுவினாலும் அது கட்டுபடியாகுமா. அந்தத்
தொழில் தொடர்ச்சியாக நடைபெறுமா என்பது “என்ரான்” நிறுவனத்தின்
அனுபவத்தைப் பார்க்கும்போது சந்தேகமே. எனவே இன்று ஏகபோக நிதி மூலதனக் கும்பல்கள், தீவிரமடைந்துவரும்
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண சக்தியற்றவைகளாக மாறிவிட்டன.
இவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல், உற்பத்தி உறவுகளை
மாற்றுவதற்குத் தடையாக ஏகபோக நிதிமூலதனக் கும்பல்கள் மாறிவிட்டன. இத்தகைய நெருக்கடியிலிருந்து
மீள்வதற்கு அணு உலைகளை மூடுவது தீர்வாகுமா? தீர்வாகாது. மாறாக நெருக்கடிகளை
அது தீவிரப்படுத்துவதில்தான் முடியும்.
தோழர் மாவோ இந்த முரண்பாட்டைப்
பற்றி பின்வருமாறு கூறுகிறார். “உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்ச்சியடைந்தால்
- உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளோடு பொருந்திவாரா. மேல்கட்டுமானம் உற்பத்தி உறவுகளுடன்
பொருந்தி வராது. இந்தச் சந்தர்ப்பத்தில் உற்பத்தி சக்திகளுடன் பொருந்தி வரும் வகையில்
மேல் கட்டுமானமும் உற்பத்தி உறவுகளும் மாற்றி யமைக்கப்பட வேண்டும்” என்றும், “முதலில் உற்பத்தி
உறவுகள் மாற்றப்படவேண்டும். அதன் பிறகு மட்டுமே உற்பத்தி சக்திகள் பரந்த அளவில் வளர்ச்சியடைய
முடியும். இது ஒரு உலகுதழுவிய விதி” என்றும் கூறுகிறார். எனவே
அணுசக்தித் துறையில் தனியார் மற்றும் ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளை ஒழித்துக்கட்டி
அரசே ஏற்று நடத்தும்போது மட்டுமே அணுமின்சாரம் தயாரிக்க முடியும். விபத்துகளின்றி இயங்கவும்
முடியும். மேலும் ஏகாதிபத்திய புதிய காலனிய உற்பத்தி உறவுகளுக்கு முடிவுகட்டி சோசலிசம்
மற்றும் நாடுகளின் விடுதலை, ஜனநாயகத்தை உருவாக்குவது என்ற திசையில்தான் உற்பத்திச்
சக்திகளின் வளர்ச்சியை முழுமையாகக் கட்டவிழ்த்துவிடவும் முடியும்.
ஆற்றல் துறையில் சுயசார்பு
இன்று நாடு முழுதும், இந்திய அரசு கடைபிடித்து
வரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளன.
அனைத்துத் துறைகளிலும் நெருக்கடி நிலவுவதைப் போலவே ஆற்றல் துறையிலும் நாம் கடும் நெருக்கடியை
சந்திக்கிறோம். நாட்டின் ஆற்றல் துறை நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அணுமின்சாரம் உள்ளிட்ட
காற்றாலை, கடலலை, நீர், சூரிய ஒளி உட்பட அனைத்தையும்
கொண்ட ஒரு சுயசார்பு மின் திட்டத்தை உருவாக்கவேண்டும்.
அத்தகைய ஒரு திட்டத்தை
உருவாக்க ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பல்களாலோ, தரகுப் பெருமுதலாளித்துவக்
கும்பல்களாலோ முடியாது. பிரிட்டிஷ் பொதுவுடமைக் கட்சியை சார்ந்த தோழர் வில்லியம் பால்
அவர்கள் 1940களிலேயே இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்களை ஏகாதிபத்தியவாதிகளால்
முழுமையாக பயன்படுத்த முடியாது என்று கூறினார். உலகெங்கிலும் இயற்கையில் கிடைக்கும்
நீரை பயன்படுத்தி 60 கோடி குதிரைத் திறன் உள்ள மின்சாரத்தை உருவாக்க
முடியும்; சூரிய ஒளியைப் பயன்படுத்தி பூமியின் பரப்பில் ஒரு சதுரமைல் பரப்பளவில்
விழும் சூரியக் கதிர்களைக் கொண்டு ஆண்டு முழுதும் 10 லட்சம் குதிரைத் திறன்
மின்சாரம் தயாரிக்க முடியும் என்று எடுத்துக்காட்டினார். ஆனால் இன்று வரை அதை ஏகாதிபத்தியவாதிகளால்
முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இந்தியாவில் தமிழக, கேரள கடற்கரையில்
இந்தியாவிற்கு 500 ஆண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் அளவிற்குத்
தோரிய வளம் கொட்டிக்கிடக்கிறது. இவை அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு இந்திய
ஆளும் வர்க்கங்களாலோ அவர்களின் எஜமானர்களாலோ முடியாது.
அவ்வாறு அவர்களால் முடியாததற்குக்
காரணம், ஏகபோக நிதிமூலதனக் காரர்களுக்கும், உள்நாட்டுத் தரகுப்
பெருமுதலாளிகளுக்கும் அணு உலையில் முதலீடுகள் அதிக அளவு செய்ய வேண்டியுள்ளதால் இலாபம்
அதிகமாகக் கிடைக்காது. அவர்களால் அணு உலைகளை நடத்த இயலாது. அடுத்து இன்றைய முதலாளித்துவப்
பொது நெருக்கடியின் காரணமாக அணுசக்தித் துறையினை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியமும்
குறைந்து வருகிறது. ஏற்கனவே நமது நாட்டில் அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாட்டா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்
உள்ளிட்ட நிறுவனங்கள் நட்டம் அடைந்து அந்தத் தொழிலை நடத்த முடியாமல் திணறி வருகின்றன.
அரசாங்கத்திடம் நட்ட ஈடு கோருகின்றன. நட்ட ஈடு கொடுத்தாலும் இவர்களால் மின் உற்பத்தியை
தொடர்ந்து நடத்த முடியாது, இலாப நோக்க அடிப்படையில் அவ்வாறு இத்தொழில்களை
நடத்தவும் இயலாது. எனவே அணுமின் நிலையம் உட்பட அனைத்துக் கட்டமைப்புத் துறைகளையும்
அரசாங்கமே ஏற்று நடத்துவதுதான் ஒரே தீர்வாகும்.
முதலாளித்துவச் சமூகத்தில்
போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறிவிட்ட கட்டத்தில், பொருளுற்பத்தியில்
முதலாளித்துவ வர்க்கம் எவ்வாறு அவசியமற்றதாகிவிட்டது என்பதையும் அரசுடைமை சோசலிச உற்பத்தி
முறையே உற்பத்தி வளர்ச்சிக்கு அவசியமாக மாறிவிட்டது என்பதையும் 150 ஆண்டுகளுக்கு
முன்பே பாட்டாளிவர்க்க ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் தமது புகழ்மிக்கக் கற்பனாவாத சோசலிசமும்
விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“... டிரஸ்டுகளின்
சுதந்திரமான போட்டி அதற்கு நேர் முரணானதாகிறது - ஏகபோகமாகிறது. முதலாளித்துவச் சமுதாயத்தின்
உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தி படையெடுத்து வரும் சோசலிசச் சமுதாயத்தின்
உறுதி வாய்ந்த திட்ட வழியிலான பொருளுற்பத்தியிடம் சரணடைகிறது. இதுவரை இன்னமும் இது
முதலாளிகளுடைய ஆதாயத்துக்காகவும் அனுகூலத்துக்காகவும் ஆனதே என்பது மெய்தான். ஆனால்
இந்தச் சுரண்டல் இப்படி அப்பட்டமாக இருப்பதால் இது தகர்க்கப்பட்டே ஆகவேண்டும். லாப
வெறியர்களது ஒரு சிறு கும்பல் இப்படிப் பட்டவர்த்தனமாக சமூகத்தைச் சுரண்டுவதற்கு ஏற்பாடு
செய்து டிரஸ்டுகள் நடத்தும் பொருளுற்பத்தியை எந்தத் தேசமும் சகித்துக் கொண்டிருக்காது.
எப்படியும், டிரஸ்டுகள் இருந்தாலும்
இல்லாவிட்டாலும், முதலாளித்துவச் சமுதாயத்தின்
அதிகாரப் பூர்வமான பிரதிநிதியாகிய அரசு முடிவில் பொருளுற்பத்தியின் நெறியாண்மையை ஏற்க
வேண்டிவரும்*. அரசின் உடைமை யாக மாற்றப்பட வேண்டிய இந்த அவசியம் தகவல் தொடர்புக்கும்
போக்குவரத்துக்குமாகிய மாபெரும் ஏற்பாடுகளான அஞ்சல் நிலையம், தந்தி, ரயில்வே ஆகியவற்றில்
எல்லாவற்றிற்கும் மேலாக உணரப்படுகிறது. (*“வேண்டிவரும்” என்று கூறுகிறேன்; ஏனெனில் பொருளுற்
பத்திக்கும் வினியோகத்துக்குமான சாதனங்கள் கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் மூலமான நிர்வாக
வடிவை மெய்நடப்பில் விஞ்சி வளர்ந்துவிடும் போதுதான், ஆகவே அரசு இச்சாதனங்களைத்
தானே எடுத்துக் கொள்ளுதல் பொருளாதார வழியில் தவிர்க்க முடியாமலாகும் போதுதான், அப்பொழுது மட்டுமேதான்
- இதைச் செய்வது இன்றுள்ள அரசாகவே இருப்பினும்கூட - இது பொருளாதார முன்னேற்றமாக இருக்கும், உற்பத்தி சக்திகள்
யாவற்றையும் நேரே சமுதாயமே எடுத்துக் கொள்வதற்குப் பூர்வாங்கமாக அமையும் மற்றொரு நடவடிக்கையாக
இருக்கும். ஆனால் சிறிது காலமாக, பிஸ்மார்க் தொழில்
நிலையங்களை அரசு உடைமையாக்கும் முயற்சியில் இறங்கியது முதலாக, ஒருவகைப் போலி
சோசலிசம் அவதரித்திருக்கிறது; அடிக்கடி இது
அடிவருடியின் நிலைக்கு ஒத்த கேவல நிலைக்கு இழிவுற்று எல்லா அரசு உடைமையுமே, பிஸ்மார்க் வகைப்
பட்டதும் கூட, சோசலிசமே என்பதாகக் கூறுமளவுக்குச்
செல்கிறது. புகையிலைத் தொழிலை அரசு எடுத்துக் கொள்வது சோசலிசமாகி விடுமாயின், நெப்போலியனையும்
மெட்டர்னிகையும் நிச்சயம் சோசலிசத்தின் மூலமுதல்வர்களது வரிசையிலேதான் அமர்த்த வேண்டும்.
பெல்ஜிய அரசு மிகச் சாதாரண அரசியல், நிதிவிவகாரக்
காரணங்களை உத்தேசித்துத் தனது பிரதான ரயில் பாதைகளைத் தானே கட்டியமைத்துக் கொண்டதெனில், பிஸ்மார்க் எந்தப்
பொருளாதார அவசியத்தையும் முன்னிட்டு அல்லாமல், பிரஷ்ய ரயில்
பாதைகள் அரசின் கையில் இருந்தால் யுத்தம் ஏற்படும் பட்சத்தில் நல்லதுதானே என்றும் ரயில்வே
சிப்பந்திகளை அரசாங்கத்துக்கு ஓட்டுப் போடும் ஆட்டு மந்தையாக வளர்த்திடலாம் என்றும்
இன்னும் முக்கியமாக நாடாளுமன்ற ஓட்டுகளுக்கு உட்படாத சுயேச்சையான புதிய வருமான ஆதாரத்தைத்
தனக்கு சிருஷ்டித்துக் கொள்ளலாம் என்றும் பிரதான பிரஷ்ய ரயில் பாதைகளை அரசின் உடைமையாய்
எடுத்துக் கொண்டாரெனில் - எவ்விதத்திலும் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ, உணர்வுபூர்வமாகவோ
மனம் அறியாமலோ ஒரு சோசலிச நடவடிக்கை ஆகிவிடவில்லை. இல்லையேல் மன்னரது கடற்கப்பல் கம்பெனியும்
மன்னரின் பீங்கான் பண்டத் தயாரிப்பும் சேனையின் பட்டாளத்துத் தையல் துறையுங்கூடச் சோசலிச
நிறுவனங்களாகிவிடும், ஏன் மூன்றாவது
பிரெடெரிக்-வில்ஹெல்முடைய ஆட்சியின் போது கபட வேடதாரி ஒருவர் கூறிய ஆலோசனைக்கேற்ப விபசார
விடுதிகளை அரசு எடுத்துக்கொண்டு விடுவதுங்கூடத்தான். - பி.எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு)
நவீன உற்பத்தி சக்திகளைத்
தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்துவம் ஆற்றலற்றதாகி விட்டது என்பதை நெருக்கடிகள்
கண்கூடாக்குகின்றன என்றால், பொருளுற்பத்திக்கும்
வினியோ கத்திக்குமான மாபெரும் ஏற்பாடுகள் கூட்டுப் பங்குக் கம்பெனிகளாகவும் டிரஸ்டுகளாகவும்
அரசு உடைமை களாகவும் மாற்றப்பட்டிருப்பது முதலாளித்துவ வர்க்கத்தினர் இந்தக் காரியத்துக்கு
எவ்வளவு தேவையற்றவர்களாகி விட்டனர் என்பதைத் தெளிவுபடுகிறது. முதலாளி செய்து வந்த எல்லாச்
சமூக வேலைகளையும் இன்று சம்பளச் சிப்பந்திகள் செய்து விடுகின்றனர். லாபப் பங்கீடுகளை
மூட்டை கட்டிக்கொள்வதையும் வட்டி லாபம் பெறுவதையும் முதலாளிகள் ஒருவர் முதலை ஒருவர்
சூறையாடிக்கொள்ளும் பங்குச் சந்தையில் சூதாடுவதையும் தவிர முதலாளிகளுக்கு இனி சமூக
வேலை எதுவும் இல்லாமற் போய்விட்டது. முதலாளித்துவப் பொருளுற்பத்திமுறை முதலில் தொழிலாளர்களை
வெளியே தள்ளுகிறது; இப்பொழுது அது முதலாளிகளையும்
வெளியேதள்ளி, தொழிலாளர்களைச் செய்தது
போலவே, இவர்களையும் சிறுமைப்படுத்துகிறது; உடனடியாகவே தொழில்துறை
ரிசர்வ் பட்டாளத்தின் அணிகளுக்கு இல்லாவிட்டாலும், வேண்டாத உபரி
மக்கள் தொகையோரின் அணிகளுக்குத் தாழ்வுறச் செய்கிறது.” என்று எங்கெல்ஸ்
கூறுகிறார்.
எனவே நாட்டின்
ஆற்றல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அணு மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்
துறை முழுவதையும் அரசே ஏற்று நடத்தவேண்டும். நாட்டை நாசமாக்கிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளைக்
கைவிட்டு சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்திட வேண்டும். அதுவே அணுசக்திப்
பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக இருக்கமுடியும். ஆற்றல் துறையில் அணுசக்தி உள்ளிட்டு
அனல், புனல், சூரிய ஒளி, காற்று இவைகளைக்
கொண்ட சுயசார்பு மின் திட்டத்தைச் செயல்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அவர்களுக்குச்
சேவை செய்யும், நாட்டை புதியகாலனியாக மாற்றிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை
ஒழித்துக்கட்ட வேண்டும். மேலும் இத்தகைய சுயசார்பு மின் திட்டத்தை நிலவுகின்ற அரசமைப்புக்குள்ளேயே
தீர்க்கவும் முடியாது. எனவே இந்தியாவின் தரகுப் பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆளும்
வர்க்கங்களை தூக்கியெறிந்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது ஒன்றுதான் வழியாகும்.
அது நீண்டகாலத் திட்டமாகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும்
தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள்
மற்றும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட ஒரு மக்கள் சக்திதான் - ஐக்கிய முன்னணிதான் -
இன்றைய அணுசக்தித் துறை நெருக்கடி உள்ளிட்ட அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காணும்.
சுயசார்பு மின் திட்டத்தை செயல்படுத்தும்.
இந்தியா அமெரிக்காவின்
புதிய காலனியாவது குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் நிலைபாடு
மத்தியில் ஆளும் மன்மோகன்
கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்துகொண்டுள்ள, இராணுவ மற்றும்
அணுசக்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்திய நாட்டை அமெரிக் காவின் புதிய காலனியாகவும் அமெரிக்காவின்
உலக மேலாதிக் கத்திற்குச் சேவை செய்யும் எடுபிடி நாடாகவும் மாற்றுவதைக் கூடங்குள அணு
உலை எதிர்ப்பாளர்கள் ஆதரித்தே வருகின்றனர். அத்தகைய தேசத்துரோக ஒப்பந்தங்களை நிறைவேற்ற
மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசுசாரா அமைப்புகள் களப்பணி ஆற்றுகின்றன.
இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அணு உலை உற்பத்தியில்
ஈடுபடும் நிறுவனங்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும், ரூ 1,60,000 கோடி மதிப்புள்ள
இந்திய அணுமின் உற்பத்திக்கான சந்தையை வெஸ்டிங் ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக், ரொஸாட்டம், சீமன்ஸ் போன்ற
பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவக் கார்ப்பரேட்டுக்களான
டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் எனர்ஜி, வேதாந்தா போன்றவர்களுக்குத்
திறந்து விடப்படுகிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கூட்டு சேர்ந்து கொள்ளை
லாபம் அடையவிருக்கின்றனர்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தம் இந்திய அணுசக்தி மற்றும் ஆற்றல் துறையின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்டு வருவதோடு இந்தி யாவின் சுயேச்சையான மூன்றுகட்ட அணுசக்தித்
திட்டத்திற்குச் சமாதி கட்டுகிறது. அதாவது சாதாரண யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் தயாரித்தல்
(Light Water Reactor), அடுத்துச் செறிவூட்டப்பட்ட புளுடோனியத்தை எரிபொருளாகக்
கொண்ட அதிவேக ஈனுலை அமைத்தல் (Pressurised Heavy Water Reactor), இறுதியாகத் தோரியத்தைப்
பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரித்தல் என்ற இந்தியாவின் சுயேச்சையான திட்டத்திற்குச்
சமாதிகட்டப்படுகிறது.
இந்த அணுசக்தி ஒப்பந்தப்படி
“இந்தியா இனி அணு
குண்டு சோதனை செய்யக்கூடாது; இந்தியா அணுகுண்டு செய்வதற்கான மூலப்பொருட்களை
உற்பத்தி செய்யக்கூடாது; இந்தியா அணு ஆயுதம் செய்ய மாட்டோம் என்று அணு
ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையப்பம் இடவேண்டும்; இந்தியாவின் அணுமின்
நிலையங்களை அமெரிக்காவும், சர்வதேச அணுசக்தி கழகமும் (IAEA) சோதனையிடுவதற்கு
ஒப்புக்கொள்ள வேண்டும் அத்துடன் அமெரிக்காவின் வெளி யுறவுக் கொள்கைக்கு ஒத்துழைக்கும்
வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின்
ஹைட் (HYDE) சட்டத்தை இந்தியா ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்; இந்தியா இந்த
நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றாலோ அல்லது அமெரிக்காவிற்கு இந்தியாவின் நடவடிக்கை
திருப்தி அளிக்காவிட்டாலோ அமெரிக்கா இந்தியாவிற்கு யுரேனியம் மற்றும் அணுத் தொழில்நுட்பங்களை
வழங்காமல் நிறுத்திவிடும் உரிமை உண்டு; அவ்வாறு இந்த ஒப்பந்தத்திலிருந்து
அமெரிக்கா விலகிவிட்டாலும் இந்தியா தனது உலைகளைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.” இந்த ஒப்பந்தம்
இந்தியா அமெரிக்காவிற்கு எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனமேயாகும்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி
ஒப்பந்தம் அணுசக்தித் துறையில் வணிகம் சார்ந்த பொருளாதார வகைப்பட்டதாக மட்டுமே இருக்கவில்லை.
அமெரிக்காவின் ஹைடு சட்டத்திற்கு ஏற்றவாறு பல அரசியல் நிபந்தனைகளையும் இந்திய அரசு
ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம்
மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது ஏகபோகத்தை நிறுவுவதற்குத்
தமக்கு அடிபணியாத நாடுகளைப் பயங்கரவாத நாடுகள் என்று அறிவித்து அந்நாடுகள் மீது இராணுவ
ஆக்கிரமிப்புச் செய்து ஆட்சி மாற்றத்தின் மூலம் தமது பொம்மை ஆட்சிகளை உருவாக்கிவருகிறது.
ஆப்கன், ஈராக்கிற்கு அடுத்து ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா தயாரிப்புச்
செய்துவருகிறது. சிரியாவில் உள்நாட்டுக் கலகத்தை நடத்திவருகிறது. அமெரிக்காவின் ஈரான்
மீதான தாக்குதலுக்கு, இந்தியா உதவ வேண்டுமென நிர்ப்பந்தம் கொடுத்து
வருகிறது. ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், ஈரானிலிருந்து
எண்ணெய் எரிவாயுக் குழாய் வழிப் பாதையைப் பாகிஸ்தான் வழியாக (ஈரான் - பாகிஸ்தான் -
இந்தியா) கொண்டுவரக்கூடாது என்றும், அமெரிக்கா முன்வைக்கும்
குழாய் வழிப்பாதையை (துருக்மெனிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா) ஏற்க
வேண்டும் என்றும் இந்தியாவை அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்கிறது. மன்மோகன் கும்பலின்
மத்திய ஆட்சியோ ஏற்கெனவே சர்வதேச அணுசக்தி கழகத்திலும், ஐ.நா பாதுகாப்பு
சபையிலும் அமெரிக்காவின் தீர்மா னத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது. ஈரானிடமிருந்து எண்ணெய்
இறக்குமதியைக் குறைத்துக் கொண்டது. அமெரிக்கா முன்வைக்கும் குழாய் வழிப்பாதைக்கும்
சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது
விதித்துள்ள பொருளாதாரத் தடையை இந்தியா ஏற்காது என்று கூறிக்கொண்டே, ஐ.நா.வின் தடைகள்
மூலம் அமெரிக்கா ஈரானை சுற்றிவளைக்கும் தந்திரத்திற்கு இந்தியா துணை போகிறது. இவ்வாறு
அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் அணுசக்தி துறையின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் நிறுவப்படுவதற்கும், அமெரிக்காவின்
வெளியுறவுக் கொள்கையை ஏற்றுச் செயல்படுத்தி, இந்தியாவின் அரைகுறையான
சுயேச்சையான வெளியுறவுக் கொள்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
அணுசக்தித்துறையில் அமெரிக்காவின்
தடைகளைத் தளர்த்துவது என்ற அற்பச் சலுகைகளுக்காகத்தான், இந்தியா அமெரிக்காவுடனான
இராணுவ ஒப்பந்தம் என்ற பெரும் விலையைக் கொடுத்துள்ளது. இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்
தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான குறிப்பாக ஆசியாவின் மீதான
அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவதற்கான ஒரு யுத்ததந்திரக் கூட்டாளியாக இந்தியா சேவை
செய்கிறது. ஆசியாவில் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்குச் சவால்விடும் நாடாகச்
சீனா உருவெடுக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே இந்தியாவைச் சீனாவிற்கு எதிராக
நிறுத்துவது என்பது அமெரிக்காவின் யுத்தத்தந்திரமாகும். “... முக்கியத்துவமான
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு ஒரு முக்கியப்
பங்குண்டு” என்றும், “... முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில்
சக்திகளின் சமநிலையை மாற்றியமைப்பதில் அமெரிக்காவிற்கு இந்தியா அச்சாணியாகத் திகழும்” என்றும் அமெரிக்காவின்
பாதுகாப்புத்துறை செயலர், லியோன் பனிட்டா அண்மையில் கூறியதிலிருந்து அமெரிக்காவின்
நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்திய - அமெரிக்க இராணுவ
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ஆசியாவின் மேலாதிக்கத்திற்கு அடுத்த
பதினைந்து ஆண்டுகளில் சீனாவிற்கு எதிராக இந்தியாவைப் பயன்படுத்துவது; பயங்கரவாத எதிர்ப்பு, மனித உரிமை மீறல்
என்ற பேரில் தமக்கு அடிபணியாத நாடுகள் மீது அமெரிக்கா இராணுவத் தலையீடு செய்வதை இந்தியா
ஆதரிக்க வேண்டும்; பேரழிவு ஆயுதம் பரவுவதைத் தடுப்பது என்ற பேரில்
சர்வதேசக் கடல் எல்லையில் போகும் மூன்றாவது நாட்டுக்கப்பலை அமெரிக்காவுடன் சேர்ந்து
இந்தியா சோதனையிடுவது; ஆசிய-பசிபிக் கடல் எல்லையில் அமெரிக்காவின் வர்த்தகக்
கப்பல்களுக்கு இந்தியா காவல் காக்கும் பணியை ஏற்பது; அத்துடன் இந்தியா அமெரிக்காவிடமிருந்து
ஆயுதத்தளவாடங்களை வாங்குவது போன்ற மேலும் பல்வேறு கேவலமான அம்சங்களையும் இந்த ஒப்பந்தம்
உள்ளடக்கியுள்ளது.
இந்திய அரசு அமெரிக்காவிற்கு
அடிபணிந்து அந்நாட்டுடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தமும், இராணுவ ஒப்பந்தமும்
இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாகவும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச்
சேவை செய்யும் எடுபிடி நாடாகவும் இந்தியாவை ஆக்கியுள்ளது. அதன் விளைவாக அணு ஆற்றல்
துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே மேற்கண்ட
அடிமை ஒப்பந்தங்களை எதிர்த்து நாட்டின் இறையாண்மைக்கும், சுயசார்புக்கும்
போராடுவது இன்று நாட்டு மக்கள் முன் உள்ள முக்கியக் கடமையாகும். ஆனால் சுப.உதயக்குமார்
தலைமையிலான அணு உலை எதிர்ப்பாளர்கள் அணு உலையை மூடவேண்டும் என்று போராடுவதன் மூலம்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்களின் போராட்டத்தை திசைதிருப்புவதையே தங்களது குறிக்கோளாகக்
கொண்டுள்ளனர். அத்துடன் இந்திய அணு உலைச் சந்தையில் நடக்கும் போட்டியில் தனது எஜமானர்களான
அமெரிக்க முதலாளிகளுக்குச் சாதகமான முடிவெடுக்க இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர்.
எனவேதான் ரசியாவின் ஆதரவுடன் துவங்கும் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் எனப் போராடுகின்றனர்.
இந்திய அரசும், அரசுசாரா அமைப்புகளும்
மன்மோகன் சிங் பிப்ரவரி
24,
2012ல் “சைன்ஸ்” பத்திரிக்கைக்குப் பேட்டி அளிக்கும்போது “கூடங்குளத்தில்
அணு உலைக்கு எதிராகப் போராடுபவர்களின் பின்னணியிலும், மரபணுமாற்று விதைகளை
எதிர்த்துப் போராடுபவர்களின் பின்னணியிலும் அந்நியக்கை உள்ளது” என்று குற்றம்
சுமத்தினார். இத்தகைய அமைப்புகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலிருந்து
நிதி வருகிறது. அதைக்கொண்டு அவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர் என்று
மன்மோகன் கும்பல் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. அத்துடன் அவ்வாறு நிதி பெறும்
அமைப்புகள் பற்றிய ஒன்றிரண்டு விபரத்தை வெளியிட்டதுடன், கூடங்குள அணு
உலை எதிர்ப்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு
நடவடிக்கை எடுப்பதன் மூலம் மன்மோகன் கும்பல் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி உதவி
பெற்றுச் செயல்படும் அமைப்புகளை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கிறது. உண்மையில் இந்திய
அரசும், இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களும் இத்தகைய அமைப்புகளைக் கட்டுப்படுத்துமா
என்பதைப் பரிசீலிப்போம்.
இந்திய அரசு 1970ஆம் ஆண்டு அந்நிய
முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அந்நிய செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக்
(FERA) கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு இந்திராகாந்தியின்
காலத்தில் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி
பெற்று இயங்கிவரும் அமைப்புகளை ஒழுங்குப்படுத்தும் சட்டதைக் (FCRA) கொண்டுவந்தது.
இந்தச் சட்டங்களின் உள்ளடக்கம் என்ன? இந்தச் சட்டங்களால் அந்நிய
நிதி உதவி பெறும் அமைப்புகளைக் கட்டுப்படுத்த முடிந்ததா என்பதை அனுபவ ரீதியாகப் பார்ப்போம்.
1960ஆம் ஆண்டுகளில்
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்தும், சுரண்டல் மற்றும்
அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஆசிய-ஆப்பிரிக்க-இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் தேச
விடுதலைப் போராட்டத்தில் கடுமையாக ஈடுபட்டனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப ஏகாதிபத்தியவாதிகளும்
அவர்களின் ஏவல் நாய்களான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு
சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் விளைவுதான் இந்திராகாந்தி 1970ல் அந்நிய செலாவணிக்
கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்தது. எனினும் ஆளும் தரகுமுதலாளித்துவ வர்க்க நலன்கள்
காரணமாக ஏகாதிபத்தியம் மற்றும் அந்நிய மூலதனத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடரமுடியவில்லை.
அந்நிய நாட்டிலிருந்து
நிதி உதவி பெறும் அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (1976) அத்தகைய அமைப்புகளைக்
கட்டுப்படுத்தவில்லை. இச்சட்டப்படி அந்நிய நிதி உதவி பெறும் நிறுவனங்கள் அரசாங்கத்திடம்
பதிவு செய்துகொண்டு செயல்படலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுநலச்
சங்கங்கள், அறக்கட்டளைகள் எனும் பேரில் அரசுசாரா அமைப்புகள் சட்டப்படியே செயல்பட
அனுமதிக்கப்பட்டன. உண்மையில் இந்தச் சட்டம் அத்தகைய அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்குப்
பதிலாக ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக அவைகளை மாற்றிக்கொள்ளவே பயன்பட்டது. இச்சட்டத்தால்
ஏகாதிபத்தியவாதிகள் - இந்திய அரசு - அரசுசாரா அமைப்பு களுக்கிடையில் உறவுகள் பலப்பட்டு, இந்தியச் சமூகத்தில்
அந்நியக் கைக்கூலிகள் பெருமளவு ஊடுருவினர். இந்தியாவின் கடந்தகால அனுபவங்கள் இதைத்
தெளிவாகக் காட்டுகின்றன.
1970ஆம் ஆண்டுகளில்
மேற்கு பாகிஸ்தானை எதிர்த்து கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினர்.
சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் துணையோடு இந்தியா, கிழக்கு பாகிஸ்தானுக்கு
ஆதரவாகப் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது. பாகிஸ்தானை இரண்டாக உடைத்து வங்காள தேசத்தைத்
தனி நாடாக்கியது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக அந்தப் போரில் இந்தியாவுக்கு எதிராகச்
செயல்பட்டது.
பாகிஸ்தானுடனான போருக்குப்
பிறகு, யுத்தத்தால் ஏற்பட்ட சுமைகளும் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளும்
சேர்ந்து கொண்டு இந்திரா காந்தியின் ஆட்சி கடும் நெருக்கடியில் சிக்கியது. எனவே இந்திரா
காந்தி 1975ல் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நெருக்கடி நிலையின் அடக்குமுறைக்
கொடுமைகளை எதிர்த்து காந்தியவாதி ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுப்பட்டு போராடின. அத்தகைய போராட்டத்திற்கு
அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் ஆதரவுடன் இந்தியாவில் செயல்பட்ட அரசுசாரா
தொண்டு நிறுவனங்களும் ஆதரவளித்தன. ஏராளமாக நிதி உதவி செய்தன. தமக்கு எதிராகப் போராடிவரும்
இந்த அமைப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகத்தான் 1976ல் அரசுசாரா அமைப்புகளை
ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இந்திராகாந்தி கொண்டுவந்தார்.
இந்திராகாந்தியின் ஆட்சி
தூக்கியெறியப்பட்டு, மொரார்ஜி தலைமையிலான ஜனதா அரசாங்கம் ஆட்சிப்பீடம்
ஏறியபிறகும் கூட அந்நிய மூலதனத்திற்கு எதிராகவோ, ஏகாதிபத்திய ஆதரவு அரசுசாரா
தொண்டு நிறுவனங்களுக்கு எதிராகவோ எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. அந்த
ஆட்சியே உள்முரண்பாடுகளின் காரணமாகப் பாதியிலேயே வீழ்ச்சியுற்றது.
மீண்டும் ஆட்சிப்பீடம்
ஏறிய இந்திராகாந்தி தமக்கு எதிராகச் செயல்பட்ட அரசுசாரா அமைப்புகளைப் பழிவாங்கவும், அவைகளுக்குப்
பாடம் புகட்டவும், அவைகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும்
அந்த அமைப்புகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குடால் கமிஷனை அமைத்தார். அந்தக்
அறிக்கை முழுவதுமாக வெளியிடப்படவே இல்லை. அந்த அறிக்கையின்படி சிவில் உரிமைகளுக்கான
மக்கள் இயக்கம் (PUCL), ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (PUDR) போன்ற அமைப்புகளுக்குக்
கிடைத்துவந்த அந்நிய நிதி உதவி தடுத்து நிறுத்தப்பட்டது. “காந்திய அமைதிக்கான
நிதி” என்ற அமைப்பிற்கு, அமெரிக்காவின் வேர்ல்டு
நைபர்ஸ் (World Neighbours), பிரிட்டனின் ஆக்ஷன் எய்டு ஆக்ஸ்பாம் (Action Aid
Oxfam), நெதர்லாந்தின் நோவிப் (NOVIB), கனடிய நாடுகடந்த சர்வதேசியம்
போன்ற அந்நிய நிறுவனங்கள் உதவி செய்தது அம்பலத்திற்கு வந்தது. குறிப்பாக அமெரிக்காவைச்
சார்ந்த வேர்ல்டு நைபர் என்ற நிறுவனமும், ஜெர்மனியின் EZE என்ற நிறுவனமும்
காந்திய அமைதி நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கின என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு காந்தியின் பெயரிலேயே அந்நிய நிதி உதவி பெறும் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது
வெளிப்பட்டது.
இத்தகைய ஏகாதிபத்திய நிதி
உதவிகள் அனைத்தும் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கும்; ‘ஜனநாயகம்’, ‘சுதந்திரம்’ என்ற பேரில் ஏகாதிபத்தியவாதிகளின்
புதிய உலக ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கும்தான் வழங்கப்பட்டது. இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும்
இதே நோக்கத்தோடுதான் ஏகாதிபத்திய வாதிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர். புதிய காலனியாதிக்கத்தின்
தாசர்களாககத் திகழ்கின்றனர். எனவே இவர்களின் நோக்கம் அரசுசாரா அமைப்புகளைக் கட்டுப்படுத்துவது
அல்ல. மாறாக அவைகளைத் தங்களுக்குக் கீழ் கைப்பாவைகளாக மாற்றிக்கொள்வதுதான். குடால்
கமிஷன் அறிக்கைக்குப் பிறகு கிராமப்புற வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் கீழ், கிராமப்புற தொழில்நுட்ப
மேம்பாடு மற்றும் மக்கள் நடவடிக்கைகளுக்கான கவுன்சில் (CPART) என்ற பேரில் அரசுசாரா
அமைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
இன்று உலகமயக் கொள்கைகள்
செயல்படுத்தப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் சுமார் 24,000க்கும் மேற்பட்ட அரசுசாரா
அமைப்புகள் இயங்குகின்றன. அமெரிக்காவின் போர்டு பவுண்டேசன், ராக்பெல்லர், மைக்ரோசாப்ட்
போன்ற பலவேறு நிதி அளிக்கும் நிறுவனங்கள் மனித உரிமைகள், வன உரிமை பாதுகாப்பு, வேளாண்மை, கல்வி, பொதுநலம் மற்றும்
தகவலறியும் அமைப்புகள் போன்ற சிவில் அமைப்புகளோடு சேர்ந்து செயல்படுகின்றன.
அன்னா அசாரே தலைமையிலான
“ஊழல் எதிர்ப்பு
இந்தியா” இயக்கத்தைச் சார்ந்தவர்கள் போர்டு பவுண்டேசன் என்ற அமெரிக்க நிறுவனத்தின்
உதவியுடன் செயல்படும் “இந்திய சர்வதேச மையம்” என்ற அமைப்பிலிருந்து
நிதி உதவி பெற்றே செயல்படுகின்றனர். “ஊழல் எதிர்ப்பு இந்தியா” என்ற அமைப்பின்
முக்கியஸ்தர்களான கேஜரிவால் மற்றும் அவரது நண்பர் மணிஷ் சிசோடியா நடத்திவரும் “கபீர்” என்ற அரசுசாரா
அமைப்பும் மேற்சொன்ன மையத்திடமிருந்து 3,97,000 அமெரிக்க டாலர்கள் நிதி
பெற்றுள்ளது. போர்டு பவுண்டேசன் ஆண்டிற்கு ரூ.70 கோடி அளவிற்குச் சிவில்
உரிமை அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின்
தலைவர் சுப.உதயகுமார் தனது கல்வி அறக்கட்டளைக்கு ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி
உதவி பெறுவதை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த அமைப்பில் பலரும் அரசுசாரா நிறுவனங்களுடன்
தொடர்பு கொண்டுள்ளவர்கள்தான். இந்த அமைப்புகள் யாவும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய
ஏகாதிபத்தியங்களின் நலன்களைக் காக்கும் வகையிலேயே செயல்பட்டுவருகின்றன.
தற்போது மன்மோகன் கும்பல் அரசுசாரா அமைப்புகள் மீது எடுத்துவருகின்ற சட்டப்பூர்வமான
நடவடிக்கைகளோ அல்லது அந்நிய நிதி உதவி பெறுவதைக் கண்டுபிடித்து வெளியிடுவதோ அந்த அமைப்புகளின்
செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கானது அல்ல. அத்தகைய அமைப்புகளை ஒடுக்குவதற்குமானதுமல்ல.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதும் மன்மோகன் கும்பலின் நோக்கமல்ல. மாறாக ஆளும் வர்க்கங்களின்
நலன்களிலிருந்து ஏகாதிபத்தியவாதிகளுடன் நடக்கும் வர்த்தகப் பேரத்தில் தமது ஆட்சிக்கு
எதிராகப் போராடும் அரசுசாரா அமைப்புகளை அடக்கி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான
நடவடிக்கைகளேயாகும். மேலும் புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில்
இந்திய அரசும், அரசுசாரா அமைப்புகளும் கூட்டாகவே செயல்படுகின்றன.
மன்மோகன் கும்பல் கூடங்குளம்
அணு உலை எதிர்ப்பாளர்களை அந்நிய கைக்கூலிகள் என்று கூறுவதையும் அவர்களுக்கு எதிராக
எடுக்கும் நடவடிக்கைகளையும் புதிய இடதுகள், பின்நவீனத்துவவாதிகள், தமிழ் தேசியம்
பேசுகின்ற குழுக்கள், மா.லெ இயக்கங்களைச் சார்ந்த ஒருசில அமைப்பினர்
எதிர்க்கின்றனர். இது மக்களுக்காகப் போராடுபவர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும், போராளிகளுக்கு
எதிரான அவதூறு என்றும் கூறி கண்டனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஏகாதிபத்திய ஆதரவுடன்
இயங்கும் அரசுசாரா அமைப்புகளுக்கு ஆதரவாக இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.
இ.க.க மா.லெ (செங்கொடி)
அமைப்பானது கூடங்குள அணு உலை எதிர்ப்புத் தலைவர்களை அந்நியக் கைக்கூலிகள் என்று மன்மோகன்
கும்பல் கூறுவதை அவதூறு என்று கண்டனம் செய்கிறது. இன்றைய புதிய காலனிய காலக்கட்டத்தில்
உண்மையான அந்நியக் கைக்கூலிகள் யார் என்பதை உலகுக்குக் காட்டவேண்டும் என்று அந்த அமைப்பு
கூறுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும்
மன்மோகன் கும்பல்தான் உண்மையான அந்நியக் கைக்கூலி என்பதற்கான ஒரு பட்டியலை அது முன்வைக்கிறது.
ஆனால் அதில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்ய மறுக்கிறது.
உதாரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
ஆக்கிரமிப்புப் போர்களுக்குத் துணைபோவது; பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியாவின் இயற்கை மற்றும் கனிம வளங்களைச் சூறையாடுவதற்கு ஆதரவாகச் செயல்படுவது; அணுசக்தி ஒப்பந்தத்தின்
மூலம் அமெரிக்க நிறுவனத்தின் நெருக்கடிக்குத் தோள்கொடுப்பது; மரபணுமாற்று விதைகளை
அனுமதித்துப் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வை பறிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் உண்மையான
அந்நியக் கைக்கூலிகள் மன்மோகன் கும்பல்தான் என்று செங்கொடி கூறுகிறது. அதே சமயம் இவை
அனைத்திலும் அரசுசாரா நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்ய மறுக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள்
வியட்நாம் மீது குண்டு போட்டு அழித்ததுடன் அம்மக்கள் மீது இரசாயன விஷவாயுவைத் செலுத்தி
கொன்றொழித்தது. கொரியாவை ஆக்கிரமித்தது; தென் அமெரிக்க நாடுகளில்
கம்யூனிஸ்டுத் தலைவர்களான அலண்டே, சேகுவாரா, பாட்ரைஸ் லுமும்பா போன்றவர்களைப்
படுகொலை செய்தது. அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி எடுத்த சர்வாதிகாரிகளை அந்நாடுகளின்
தலைவர்களாக்கியது; இது போன்ற இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஆட்சிக்
கவிழ்ப்புகளுக்கு மன்மோகன் கும்பல் போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளான மூன்றாம் உலக நாடுகளின்
ஆட்சியாளர்கள் துணைபோயினர். எனவே இவர்கள்தான் உண்மையான அந்நியக் கைக்கூலிகள் என்று
செங்கொடி அமைப்பு கூறுகிறது.
மேலும் அண்மையில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் ஆப்கன், ஈராக் போன்ற நாடுகளில் ஆக்கிரமிப்புப் போர் நடத்தி
பல லட்சம் மக்களைக் கொன்றொழித்தது. அந்நாடுகளில் பொம்மை ஆட்சியை நிறுவியது. இவை எல்லாவற்றையும்
மன்மோகன் கும்பல் ஆதரித்தது. எனவே இந்தக் கும்பல்தான் உண்மையான அந்நியக் கைக்கூலி என்று
செங்கொடி அமைப்பு கூறுகிறது.
ஆனால் அரசுசாரா அமைப்புகள்
அன்று வியட்நாம் முதல் இன்று ஈராக் வரையிலும், ஈரான் மீதான தற்போதைய
அச்சுறுத்தல் வரை அனைத்து அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளையும் ஆதரித்தே
வருகின்றன. வியட் நாமில் அமெரிக்கா நாபாம் குண்டுகளையும் இரசாயன விஷவாயுக்களையும் கொண்டு
தாக்கியபோது அரசுசாரா அமைப்புகள் ரொட்டித்துண்டுகளைக் கொடுத்தன. அப்போரில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு மறுவாழ்வு போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. சி.ஏ.ஆர்.சி (பொது நிவாரண
உதவிக் கான கூட்டமைப்பு); சீ.ஆர்.எஸ்.(கத்தோலிக்க நிவாரணச் சேவைகள்); வோர்ல்டு விஷன்
(World Vision), அமெரிக்கச் செஞ்சிலுவை சங்கம் மற்றும் வியட்நாம் கிறித்துவச்
சேவை போன்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இலத்தீன் அமெரிக்க
நாடுகளில் நிகரகுவா, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில்
ஏற்பட்ட எழுச்சிகளை அந்நாட்டு சர்வாதிகார அரசுகளுடன் சேர்ந்துகொண்டு ஒடுக்குவதற்குத்
துணைநின்றன. மனித உரிமை பற்றி வாய்கிழிய பேசும் அரசுசாரா அமைப்புகள், மனித உரிமையை
மீறும் உள்நாட்டுச் சர்வாதிகார ஆட்சியுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டாளிகளாகச்
செயல்படுவதைக் கண்டிப் பதில்லை. 1965ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நடந்த மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, அரசுசாரா அமைப்புகள் துணைபோயின.
அமெரிக்காவின் போர்டு பவுண்டேஷன், ராக்பெல்லர் போன்ற அமைப்புகளிடம் நிதி உதவிபெற்றுச்
செயல்பட்டன. அதன் மூலம் ஆட்சிக்கு வந்த சுகார்த்தோ என்ற சர்வாதிகாரி அந்நாட்டில் 5 லட்சம் கம்யூனிஸ்டுகளைக்
கொன்றொழித்தான். அதை அரசுசாரா அமைப்புகள் ஆதரித்தன. தற்போது ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்க
ஏகாதிபத்தியம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போர்களை ஆதரிக்கின்றன. ஒரு கையில் குண்டு, ஒரு கையில் ரொட்டி
என்று இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. (தகவல்கள்: என்.ஜி.ஓ-கள் பற்றி பி.ஜே.ஜேம்ஸ்)
செங்கொடி அமைப்பு மன்மோகன் கும்பலை அந்நியக் கைக்கூலி என்று கூறும் அதே வேளையில் அரசுசாரா
அமைப்புகளின் இத்தகைய ஏகாதிபத்திய சேவையை மக்களுக்குக் கூற மறுப்பதேன்? மேற்கண்ட அரசுசாரா
அமைப்புகளின் சேவைகளை அறிந்திருந்தும், அரசுசாரா நிறுவனங்கள்
மீது குற்றம் சுமத்தும் போது போராடுபவர்கள் மீது பழி என்று கூறுவது ஏன்? பரிந்து பேசுவது
ஏன்?
மாண்டேக்சிங் அலுவாலியா, சிதம்பரம் போன்ற
ஏகாதிபத்தியங்களின் விசுவாசிகளைக் கொண்ட மன்மோகன் கும்பல் உலகவங்கி, ஐ.எம்.எப்-ன்
ஆணைகளை ஏற்று நாட்டின் இயற்கைவளங்களையும், கனிம வளங்களையும் ஏகாதிபத்திய
பன்னாட்டு உள்நாட்டு பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிடுவதற்குச் சட்டவிரோதமான
முறைகளில் செயல்படுகின்றது. ஒரிசாவில் போஸ்கோ நிறுவனம் இரும்புத் தொழிற்சாலை அமைப்பது
அதற்கு ஒரு உதாரணமாகும். அரசாங்கம் அமைத்த கமிட்டிகள் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்
கூடாது என்று கூறியிருந்தபோதிலும், தென்கொரிய பிரதமரின் நிர்ப்பந்தத்தை ஏற்று, மன்மோகன் சிங்
அரசு சுற்றுச் சூழல் அமைச்சகத்தை நிர்ப்பந்தித்து இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கச்
செய்தது. இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் பல லட்சம் மலைஜாதி மக்கள் வாழ்வுரிமை இழந்து சொந்த
மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். போராடும் அம் மக்கள் மீது துணை இராணுவப் படைகளை
ஏவி பசுமை வேட்டை என்ற பேரில் மக்களைக் கொன்றொழிக்கிறது. எனவே இந்த மன்மோகன் கும்பல்தான்
உண்மையான அந்நியக் கைக்கூலி என்று சரியாகவே செங்கொடி கூறுகிறது.
ஆனால் அரசுசாரா அமைப்புகளும்
இதே பணிகளைத்தான் வேறு வழிகளில் செய்கின்றன என்பதை மூடிமறைக்கிறது. உதாரணமாக அமெரிக்காவைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கன்சர்வேசன் இண்டர்நேசனல் (CI), இயற்கை பாதுகாப்பு (TNC), இயற்கைக்கான உலகு
தழுவிய நிதியம் (WWF), ஆப்பிரிக்க வனவிலங்கு அமைப்பு (AWF), வனவிலங்கு பாதுகாப்புச்
சங்கம் போன்ற ஐந்து அமைப்புகள் இந்தப் பணியில் ஈடுபடுகின்றன. உலகில் எந்த ஒரு இடத்திலிருந்து
மக்கள் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டாலும் அங்கே இந்த அமைப்புகளில்
ஏதேனும் ஒன்றின் பங்கு கட்டாயம் இருக்கும்.
காடுகளில் வாழும் மக்களுக்கு
கல்வி, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. மக்கள் காடுகளைவிட்டு வெளியேற
விரும்புகின்றனர். அவர்களை நம்மைப்போல் வாழவைப்பது நமது கடமை என்று இந்த அமைப்புகள்
கூறுகின்றன. விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை என்றும், புலிகள் சரணாலயம்
போன்ற பகுதிகளில் உள்ள மனிதர்கள் வெளியேறவேண்டும் என்றும் கூறி காடுகளிலிருந்து மக்களை
வேளியேற்றும் பணியைச் செவ்வனே செய்கின்றன. அவ்வாறு காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு
அந்த இடத்தில் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை உட்காரவைத்து - இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும்
சூறையாடுவதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் சிறந்த சேவை செய்கின்றன. (ஆதாரம்: கார்ப்பரேட்
என்.ஜி.ஓ.களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள்). மன்மோகன் கும்பல்தான் அந்நியக்
கைக்கூலி என்று கூறும் செங்கொடி அரசுசாரா அமைப்புகளின் இத்தகைய துரோகத்தை ஆய்வு செய்ய
மறுப்பதேன்?
அமெரிக்காவின் விசுவாசமான
அடிமையான மன்மோகன் கும்பல் அமெரிக்காவுடனான அணுசக்தி மற்றும் இரா ணுவ ஒப்பந்தங்கள்
மூலம் அமெரிக்க முதலாளிகளின் நெருக்கடிகளுக்குத் தோள்கொடுப்பது மட்டுமல்லாது, இந்தியாவின் யுத்தத்தந்திர
ரீதியான பாதுகாப்பிற்கும் உலைவைத்து விட்டது. இந்தியாவின் அணுசக்தித் துறைமீது அமெரிக்காவின்
கட்டுப்பாட்டை நிறுவுவதுடன், தென் ஆசியாவில் அமெரிக்காவின் மேலாண்மையை நிறுவுவதற்கு
இந்தியா ஒரு கருவியாக மாறியுள்ளது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ரூ. 6 லட்சம் கோடி
அளவிற்கு வர்த்தக வாய்ப்பை வழங்கியுள்ளது. அதே சமயம் இந்தியாவில் அணு உலை அமைக்கும்
பன்னாட்டு நிறுவனங்கள் ரூ. 1500 கோடி (300 மில்லியன் டாலர்கள்)
நட்ட ஈடு கொடுத்தால் போதும் என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் புகுசிமா விபத்தில் நட்ட
ஈடோ 16 பில்லியன் டாலர்கள் இழப்பீடு என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்திய அரசு மிகக் குறைவாக நட்ட ஈட்டை நிர்ணயித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பரிசு வழங்குகிறது. கூடங்குளத்தில் சுயேச்சையான நிறுவனங்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள
பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவே இல்லை. இதன் மூலம் மக்களின்
உயிர்ப் பாதுகாப்பைச் துச்சமாகக் கருதுகிறது. இத்தகைய சூழலில் கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்கள்
அந்நியக் கைக்கூலிகள் என்று அரசாங்கம் ஆய்வு செய்தால், கட்டாயம் அரசாங்கம்
பன்னாட்டு நிறுவனங்களோடு செய்து கொண்டுள்ள மேற்கண்ட இரகசிய உடன்படிக்கைகள்தான் முதலில்
ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று செங்கொடி அமைப்புக் கூறுகிறது. இங்கும் கூடச் செங்கொடி
அமைப்பு அரசாங்கம் அந்நிய நிறுவனங்கள் குறித்த ஆய்வைத்தான் செய்யவேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தையும், இராணுவ ஒப்பந்தத்தையும் அரசுசாரா நிறுவனங்கள்
ஆதரிக்கின்றன என்பதையும், இத்தகைய ஒப்பந்தங்கள் இரு அரசுகளுக்கிடையில் ஏற்படுவதற்கு
இந்த அமைப்புகளின் பங்கு ஏராளம் என்பதையும் ஏன் செங்கொடி அமைப்பு ஆய்வு செய்ய மறுக்கிறது?
இறுதியாக மரபணு மாற்று
விதைகள் மற்றும் பொருட்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் பின்னால் அந்நியக்கை இருப்பதாக
மன்மோகன் கும்பல் கூறுகிறது. ஆனால் அதன் பின் இருக்கும் உண்மையான அந்நியக் கைக்கூலி
மன்மோகன் கும்பல்தான் என்று செங்கொடி அமைப்புக் கூறுகிறது.
“நாட்டில் வருங்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை
உருவாக்கவல்ல மரபணு நீக்கப்பட்ட வீரிய விதைகள் பற்றிய பிரச்சினையில், அமெரிக்காவின்
கைப்பாவையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்தோ-அமெரிக்க வேளாண்மை அறிவுசார் முனைப்பு ஒப்பந்தம், இந்திய-அமெரிக்கக்
கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள் குழுமம், இந்திய-அமெரிக்க வர்த்தக
மன்றம் போன்ற அமைப்புகள் மூலம் இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் அந்நியத் தலையீடு
இருக்கிறது என்பதும் - அது நாட்டுமக்களின் வாழ்வை கடுமையாகப் பாதிக்கிறது என்பதும்
வெளிப்படையாகத் தெரிகிறது” என்று செங்கொடி அமைப்புக் கூறுகிறது. எனவே உண்மையான
அந்நியக் கைக்கூலி மன்மோகன் கும்பல்தான் என்று அது கூறுகிறது. மேலும் கூடங்குள எதிர்ப்புப்
போராட்டமும், மரபணு விதைகளை எதிர்த்தப் போராட்டமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால்
திணிக்கப்பட்டுள்ள அந்நிய கைப்பாவையான மன்மோகன் ஆட்சியை எதிர்த்தப் போராட்டமே என்று
அது கூறுகிறது.
ஆனால் மரபணு நீக்கப்பட்ட
விதைகள் எதிர்ப்பு இயக்கமோ அல்லது கூடங்குள அணு உலை எதிர்ப்பு இயக்கமோ இவையெல்லாம்
அரசுசாரா அமைப்புகளால் நடத்தப்படுவது என்பதையும், அது ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராட்டத்தைத் திசைதிருப்பும் இயக்கங்களேயாகும் என்பதையும் செங்கொடி அமைப்பு ஆய்வு
செய்ய மறுக்கிறது. இதன் மூலம் ஏகாதிபத்திய அடிவருடிகளான அரசுசாரா அமைப்புகளைப் பாதுகாக்கிறது
செங்கொடி அமைப்பு. இதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு சந்தர்ப்பவாத
செயல்தந்திரத்தையே அது மேற்கொள்கிறது.
புதிய ஜனநாயகம் மற்றும்
மகஇக போன்ற, தாங்கள் தான் நக்சல்பாரியின் உண்மையான வாரிசுகள் என்று உரிமை கோருகின்ற
மா.லெ. குழுவினர், கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்களை மன்மோகன் கும்பல்
அந்நியக் கைக்கூலிகள் என்று குற்றம் சுமத்துவதை அவதூறு என்றும், போராளிகளை இழிவுபடுத்தும்
செயல் என்றும் கண்டிக்கிறது. அணு உலையை மூட வேண்டும் என்று அவ்வமைப்புகளுடன் சேர்ந்து
போராட்டம் நடத்துகிறது. அங்கு போராட்டத்தை நடத்துபவர்கள் அரசுசாரா அமைப்பினர் என்பதைப்
பு.ஜ. அங்கீகரிக்க மறுக்கிறது.
கூடங்குளம் “அணுமின் நிலையத்தை
இழுத்து மூடு” என்ற ம.க.இ.க வெளியிட்டுள்ள பிரசுரத்தில் அதற்கான கார ணத்தை அது
இவ்வாறு கூறுகிறது: “... இந்த அணுமின் நிலையங்கள் உற்பத்தி செய்யவிருக்கும்
மின்சாரத்தில் பெரும் பகுதியை பயன்படுத்தி இலாபமீட்டப் போகிறவர்கள் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான்.
அணுமின் நிலையங்களை இந்தியாவிற்கு விற்கப் போகிறவர்களும் பன்னாட்டு நிறுவனங்கள்தான்.
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்களையும் டாட்டா, அம்பானி போன்ற
தனியார் முதலாளிகள் தொடங்கவிருக்கிறார்கள். அணுசக்தி துறையில் இறங்கியிருக்கும் பில்கேட்ஸ், முகேஷ் அம்பானியை
கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறார். கழிவு நீரை ஆற்றில் விடுவது, காடுகளை அழிப்பது
உள்ளிட்ட பஞ்சமா பாதகங்களையும் செய்யத் தயங்காத கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் அணு
உலைகளை ஒப்படைப்பதென்பது அணுகுண்டையே ஒப்படைப்பதற்கு இணையானது”. எனவே அணு உலையை
இழுத்து மூடவேண்டும் என்கிறது.
கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து
அணு உலைகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்குச்
சேவை செய்பவைதான். அணுசக்தி அல்லாத பிற மின்துறைகளிலும், தொழிற்சாலைகளிலும்
போடும் அந்நிய முதலீடுகளும் அதே ஆளும் வர்க்கங்களுக்குத்தான் சேவை செய்கின்றன. இந்தச்
சுரண்டலை எதிர்த்து முறியடிக்க வேண்டுமானால் நிலவுகின்ற உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க
வேண்டும். அதாவது நாட்டின் மீதான புதிய காலனியாதிக்கத்திற்கு (பு.ஜ. பாஷையில் மறுகாலனியாதிக்கத்திற்கு)
முடிவுகட்டுவது ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். மாறாக அணு உலைகளை இழுத்து மூடுவது இப்பிரச்சினைகளைத்
தீர்க்காது. மேலும் புதிய ஜனநாயகம் மற்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்களை இதே காரணங்களுக்காக
இழுத்து மூடவேண்டும் என்று போராடுவது இல்லை. எனவே கூடங்குளத்தை இழுத்து மூடு என்ற அதன்
போராட்டம் ஒரு அராஜகவாத செயல்தந்திரமேயாகும்.
மேலும் பு.ஜ. குழுவினர்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து இயக்கம் நடத்தியபோது அணு உலைகளை இழுத்து
மூடவேண்டும் என்று கோரவில்லை. 2007 ஆகஸ்டில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை
எதிர்த்து ம.க.இ.க வெளியிட்டுள்ள பிரசுரத்தில் “கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா
விதித்த தடைகளைச் சவாலாக ஏற்றுச் சுயசார்பாக அணுத் தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கும்
இந்திய விஞ்ஞானிகளுடைய மேன்மையையும், தன்மான உணர்ச்சியையும்
இந்த ஒப்பந்தம் கற்பழிக்கிறது” என்று கூறி அணு உலைகளை ஆதரித்தது. ஆனால் தற்போது
தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கான உண்மையான காரணத்தை அணிகளுக்கும் மக்களுக்கும்
பு.ஜ. விளக்குமா?
புதிய ஜனநாயகம் அரசுசாரா
தொண்டு நிறுவனங்களின் தலைவர்களைக் குறிப்பாகக் கூடங்குள அணு உலை எதிர்ப் பாளர்களை ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராளிகளாகச் சித்தரிக்கிறது. புதிய ஜனநாயகம் மே-12, 2012 இதழில் கூடங்குளம்
போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும் என்ற கட்டுரையில், அப்போராட்டத்தின்
தோல்விக்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்து கூறும்போது இவ்வாறு கூறுகிறது, “... கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்கா - ரசியா
முதலிய மேலை நாடுகள் இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலைகொடுத்தாவது, என்ன காரியம்
செய்தாவது கூடங்குளத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும்
உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் மக்களைச் சென்றடையவே இல்லை” என்று கூறுகிறது.
இவ்வாறு கூறுவதன் மூலம் கூடங்குள அணு உலை எதிர்ப்புப்
போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி
இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள் போராடுவார்களா? அரசுசாரா தொண்டு
நிறுவனத்தினர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் போராளிகள் என்று பு.ஜ. கருதுகிறதா?
அத்துடன் அதே கட்டுரையில்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவர்களின் வர்க்கத் தன்மையை நடுத்தர
வர்க்கத்தினர் என்று பு.ஜ. குறிப்பிடுகிறது. “... இது மத்தியத்தர அறிவுஜீவி
வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான்” என்று குறிப்பிடுவதன்
மூலம் அவர்களை நடுத்தர வர்க்கத்தினர் என்று கூறுகிறது. ஆனால், பு.ஜ. 2004 ஜனவரியில் வெளியிட்டுள்ள
“அரசுசாரா நிறுவனங்கள்:
ஏகாதிபத்திய கைக்கூலிகள்” என்ற புதிய ஜனநாயக வெளியீட்டில், (ஜேம்ஸ் பெட்ராசின்
ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு) அரசுசாரா நிறுவனங்களின் தலைவர்கள் பற்றிப் பின்வருமாறு
கூறுகிறது “... அரசுசாரா நிறுவனங்களின் தலைவர்கள் புதியதொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்
என்றே கருதலாம். இவர்கள் பூர்வீக சொத்துடைமை அல்லது அரசின் ஊதியத்தைச் சார்ந்து வாழ்பவர்கள்
அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான, பிரபலமான மக்கள்திரள் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும்
தமது சொந்த ஆற்றலையும், ஏகாதிபத்தியத்திடம் காசு வாங்கு வதையும் சார்ந்து
வாழ்பவர்கள். ஒரு புதிய வகைப்பட்ட தரகுக் கூட்டத்தினரே இவர்கள். சமுதாயத்திற்கு அவசியமான
எந்த உற்பத்தியிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை. தமது சொந்த ஆதாயத்துக்காக உள்நாட்டு ஏழ்மையை
வைத்து, நிதி உதவி அளிக்கும் எஜமானர்களுக்குத் தொண்டூழியம் செய்து காசு
பார்ப்பவர்கள்; வியாபாரம் செய்பவர்கள்” என்ற வரையறையை ஏற்று அன்று
பு.ஜ. இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று இவ்வாறு நடுத்தர வர்க்கம் என்று
மாற்றிக் கூறுவதற்குக் காரணம் என்ன? இது தொண்டு நிறுவனங்களின்
தரகுத் தன்மையை மூடிமறைப்பதாகாதா? தொண்டு நிறுவனங்களின் வரையறைகளை மூடிமறைப்பதாகாதா?
அதே பு.ஜ. மே.12 இதழின் அதே கட்டுரையில்
கூடங்குள அணு உலைப் போராட்டம் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டது என்பதைப் பு.ஜ.வே கூறுவதைப்
பாருங்கள். “மும்பையிலுள்ள கிறித்துவத் திருச்சபை கார்டினல் மூலம் பேரங்கள்
நடத்தி, நிர்ப்பந்தங்கள் செய்து, மதுரை மண்டல ஆயர் ஃபெர்ணாண்
டோவைத் தூது அனுப்பிக் காரியத்தைக் கச்சிதமாக முடித்தனர் ஆட்சியாளர்கள்”. என்று கூறுகிறது.
இதிலிருந்தே தெரியவில்லையா கூடங்குள போராட்டத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது.
சுப.உதயகுமார் உள்ளிட்ட கூடங்குள எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்கள் தொண்டு நிறுவனங்களைச்
சார்ந்தவர்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகவில்லையா? ஏன் சுப.உதயகுமாரே
சர்வதேச அளவில் ஒரு அமைப்பாளராக அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்தான் என்பதை ஒப்புக்
கொண்டுள்ளாரே (காலச்சுவடு பேட்டியை பார்க்க). எனவே அவரும் ஒரு ஜெகத்கஸ்பர் போன்றவர்தான்.
இவை அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டே பு.ஜ. நடுத்தரவர்க்கத்தினர் என்று அவர்களின்
தரகுத் தன்மையை மூடி மறைப்பது ஏன்?
மேலும் அரசுசாரா தொண்டு
நிறுவனங்கள் குறித்து எத்தகைய செயல்தந்திரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மகஇக, பு.ஜ.தொ.மு உள்ளிட்ட
அமைப்புகள் வெளியிட்டுள்ள KNOW THE ENEMY என்ற ஆங்கிலப் பிரசுரத்தில்
பின்வருமாறு எழுதுகின்றனர். (அந்தப் பிரசுரம் உலகச் சமூக மாமன்றம் (WSF), ஹைதராபாத்தில்
ஆசிய சமூக மாமன்ற (ASF) மாநாட்டை CPM-கட்சி உள்ளிட்டவை, உலகளாவிய தொண்டு
நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தியபோது அதை விமர்சித்து எழுதப்பட்டது) “... 80-களில் மார்க்சிஸ்டு
கட்சி அரசுசாரா நிறுவனங்களை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என்று அம்பலப்படுத்தியது.
ஆனால் அக்கட்சி தற்போது தலைகீழாக மாறி அவைகளைச் சமூக மாற்றத்திற்கானவை என்று கூறுகிறது.
இத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விளக்கமின்றித் தத்துவார்த்தப் போராட்டத்தை எளிமைப்
படுத்திவிடுகிறது. அரசுசாரா அமைப்புகள் வெறும் பாதுகாப்பு வால்வு (Safty
Valve) மட்டுமல்ல, அவைகள் ஏகாதிபத்திய அதிகார மையத்துடன் இணைந்து
மறுகாலனியாதிக்கத்தை அடி ஆழம்வரை கொண்டு செல்லும் அதிகார மையமாகச் செயல்படுகின்றன.
20 ஆண்டுகளுக்கு
முன்னால் இ.க.க (மா. லெ. விடுதலை) தீய நோக்கம் கொண்ட அமைப்புகளில் (NGOs) உள்ள சிறந்த ஊழியர்களைக்
கூட்டு நடவடிக்கை மூலம் வென்றெடுப்பது என்ற அதன் வாதமும் அடிப்பட்டுப் போனது. மேலும்
எந்த ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியும் கட்டாயம் அதன் நிலைப்பாட்டை, அரசுசாரா நிறுவனங்கள்
(NGO’s) பற்றிய ஊசலாட்டமில்லாத நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியம்” என்று கூறினர்.
அதாவது தொண்டு நிறுவனங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அதில் ஊசலாட்டம்
கூடாது என்றும் பு.ஜ. அன்று கூறியது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பு.ஜ குழுவினர் எங்கே
ஊசலாடக்கூடாது என்று கூறினார்களோ அங்கே, அரசுசாரா அமைப்புகள் குறித்துத்
தற்போது ஊசலாடுகின்றனர். அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதை பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.
அதற்காகத்தான் அவர்களை நடுத்தர வர்க்கம் என்றும், போராளிகள் என்றும் பட்டம்
சூட்டிப் பாராட்டுகின்றனர். புதிய காலனிய ஆதிக்கமோ அல்லது மறுகாலனிய ஆதிக்கமோ எதுவாக
இருந்தாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதுதான் அடிப்படை என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, பு.ஜ. அரசுசாரா
தொண்டு நிறுவனங்களோடு கூட்டணி அமைப்பது ஒரு சந்தர்ப்பவாத செயல்தந்திரமேயாகும்.
“விடியல்” வெளியிட்டுள்ள
மாவோயிஸ்டு கட்சியின் அரசுசாரா அமைப்புகள் குறித்த அணுகுமுறை பற்றிய பிரசுரத்தில் பின்வருமாறு
குறிப்பிடப்படுகிறது. “... அவை (அரசுசாரா அமைப்புகள்) ஏகாதிபத்திய அமைப்புகளாகிய
உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியம், உலக வர்த்தகக் கழகம், ஆசிய வளர்ச்சி
வங்கி மற்றும் பிறயாவும் சீர்திருத்தி அமைக்கப்பட முடியும் என்ற மாயையை மக்களிடம் பரப்ப
முயல்கின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை நீர்த்துப்போகச்
செய்து, சீர்த்திருத்தக் கருத்தாக்கத்திற்கு மக்களைத் திருப்பியிழுத்துச்
செல்ல முயல்கின்றன” என்று அரசுசாரா அமைப்புகள் பற்றி ஒரு பொதுவான
வரையறையை முன்வைக்கிறது. ஆனால் இறுதியாக அத்தகைய அமைப்புகளுடனான உறவு குறித்துப் பின்வருமாறு
கூறுகிறது. “அதே நேரத்தில் அரசுசாரா அமைப்புத் தலைவர்கள் நடத்திய உலகச் சமூக
மாமன்றம் பற்றிய குறுங்குழுவாத நிலைப்பாட்டை எடுக்காமல் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
ஒன்றுபடுவதும் - போராடுவதும் என்பதே நமது நிலைபாடாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறது.
இவ்வாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பது என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையே
அக்கட்சி முன்னெடுத்துள்ளது. தொண்டு நிறுவனங்களுடனான கூட்டணி நடவடிக்கைகள், செயல்பாடுகள்
என்பவை ஒரு புரட்சிகர இயக்கத்தை எவ்வாறு சீரழிக்கிறது என்பதை அவர்களின் சொந்த அனுபவத்திலிருந்து
கற்றுணர்ந்து மீண்டு வருவார்கள் எனப் புரட்சிகர ஜனநாயக சக்திகள் எதிர்பார்க்கின்றனர்.
சி.பி.ஐ. (CPI), சி.பி.எம். (CPM) போன்ற திருத்தல்வாதக்
கட்சிகள் 1980களில் அரசுசாரா அமைப்புகளை அமெரிக்காவின் கைக்கூலிகள் என்று கூறி
அவைகளைத் தனிமைப்படுத்தின. ஹைதராபாத் மாநாட்டிற்குப் பிறகு (WSF) அரசுசாரா அமைப்புகள்
சமூக மாற்றத்திற்கானவையே என்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. அந்நிய முதலீடுகளைப்
பறிமுதல் செய்யவேண்டும் என்ற தமது திட்டத்தைத் திருத்தி ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்குச்
சேவை செய்யும் கட்சிகளாக மாறிவிட்டதன் விளைவுதான் இது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே
இக்கட்சிகள் கூடங்குளம் அணு உலையைத் திறக்க வேண்டும் என்று கூறும் அதே வேளையில் அந்தத்
தலைவர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக்
கண்டிப்பது என்ற பெயரால், ஜனநாயக உரிமை என்ற பெயரால், அரசுசாரா அமைப்புகளின்
ஏகாதிபத்திய ஆதரவு நிலைபாட்டை எதிர்த்துப் போராடாமல் அவைகளை ஆதரிப்பது திருத்தல்வாதமேயாகும்.
அகில இந்திய தரகுமுதலாளித்துவ
ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகள்
புதிய காலனிய தாசர்கள் என்ற வகையில் ஆளும் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க
நலன்களிலிருந்தும், ஏகாதிபத்திய நலன்களிலிருந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
புதிய காலனியாக இந்தியாவை மாற்றுவதிலும், ஆசியாவில் அமெரிக்காவின்
மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வதிலும் இக்கட்சிகள் போட்டி போடுகின்றன. அரசுசாரா அமைப்புகளுடன்
கரம் கோர்த்துத் தோழமையாகச் செயல்படுகின்றன. ஆளும் வர்க்க நலன்களி லிருந்து கூடங்குள
அணு உலையைத் திறக்கின்றன. இதில் மக்களின் நலன்கள் எள்முனை அளவு கூட இல்லை. மாநில அளவிலான
தி.மு.க, அ.தி.மு.க போன்ற தரகு முதலாளித்துவக் கட்சிகளும் அதே நிலைபாட்டையே
மேற்கொள்கின்றன. புதிய காலனிய தாசர்களே இக்கட்சிகளும்.
ஏகாதிபத்திய கைக்கூலிகள்தான்
அரசுசாரா அமைப்புகள்
அரசுசாரா அமைப்புகள்
கூறிக்கொள்வதைப் போல, அவை அரசுசாரா அமைப்புகள் அல்ல. அரசுசார்பு அமைப்பு
களேயாகும். ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இவை நிதி உதவி பெறுகின்றன. உள்நாட்டு அரசிடமிருந்தும்
தனிப்பட்ட துணை காண்டிராக்டர்கள் என்ற முறையில் இவை நிதி உதவி பெறுகின்றன. தத்தம் நாட்டு
அரசுகளுடன் நெருக்கமான உறவுகள் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மானியத்தால் நடக்கும்
தனிப்பட்ட அறக்கட்டளைகளிடமிருந்தும் நிதி உதவி பெறுகின்றன. உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும்
உள்ள பல்வேறு அரசுகளின் ஏஜென்சிகளுடன் அடிக்கடி வெளிப்படையாக ஒத்துழைத்து வேலை செய்கின்றன.
இந்த அரசுசாரா அமைப்புகள் தமது திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்குப் பதில்
சொல்லக் கடமைபட்டவை அல்ல. நிதி உதவி அளிக்கும் வெளிநாட்டு எஜமானர்களுக்கு மட்டுமேதான்
இவை பதில் சொல்லவேண்டும். நிதி உதவி அளிப்பவர்கள்தான் இவற்றின் வேலைகளைப் பரிசீலிக்கின்றனர்; மேற்பார்வையிடுகின்றனர்.
நிதி அளிப்பவர்களின் நிபந்தனைகளுக்கும், நலன்களுக்கும் ஏற்பவே
இவை செயல்பட முடியும்.
அரசுசாரா அமைப்புகளுக்கு
ஏகாதிபத்தியங்கள் நிதி உதவி அளிப்பது என்பது, உள்நாட்டு பிற்போக்குக்
கும்பல்கள் ஏகாதிபத்திய நலன்களைக் காக்க முடியாமல் போகும் பட்சத்தில் ஏகாதிபத்திய நலன்களைக்
காப்பீடு செய்துகொள்வது போன்றதுதான் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உள்நாட்டுக்
கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பரந்துபட்ட மக்கள் திரள் இயக்கங்களால் தூக்கியெறியப்படும்
நிலை ஏற்படும்போது, இந்த அரசுசாரா நிறுவனங்கள் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களாலும்
ஏகாதிபத்தியவாதிகளாலும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவோராக முன்நிறுத்தப்படுகின்றனர்.
1960ஆம் ஆண்டுகளில்
என்றுமே காணாத அளவிற்கு உலக அளவில் அரசியல் கொந்தளிப்புகளும், பூசல்களும் பெருமளவில்
வெடித்துக்கிளம்பின. ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகவும், அவர்களின் அடிவருடிகளான
உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க
நாடுகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கிளர்ந் தெழுந்து
உறுதியான தேசவிடுதலைப் போராட்டங்களை நடத்தினர். அரசியல் ரீதியில் பெரும் பாதிப்புகளை
அவை உருவாக்கின. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் கூட்டாளி நாடுகளும் இத்தகைய
சூழலை மூன்று வழிகளில் எதிர்கொண்டனர். நேரடி இராணுவத் தலையீடு, பொருளா தாரச்
சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் திசைதிருப்பும் நடவடிக்கைகள் மூலம் இத்தகைய எதிர்ப்புகளைச்
சந்தித்தனர். 1980களில் ரீகன் உருவாக்கிய “ஜனநாயகத்திற்கான திட்டம்” இதே நோக்கம் கொண்டதுதான்.
இந்தத் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த அரசுசாரா நிறுவனங்களை ஒரு கருவியாக அமெரிக்க
ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்தினர்.
அமெரிக்காவின் தலைமையிலான
மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகளின் நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்குத் தொண்டு நிறுவனங்கள்
சேவை புரிகின்றன. 70களில் வியட்நாம் போரின் போது இந்த அமைப்புகள்
எவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் நேரடித் தலையீட்டிற்கு உதவின என்பதை முன்பே
பார்த்தோம். 1980களில் போலந்தில் வாலேசா தலைமையிலான “சாலிடாரிட்டி” அமைப்பிற்கு வாடிகனின்
பிற்போக்கு போப்பும், அரசுசாரா நிறுவனங்களும் ஆதரவளித்து அந்த நாட்டில்
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின. 1990களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை பிளவுபடுத்தவும், அதற்குப்பின்
அதிலிருந்து பிரிந்த நாடுகளில் (CIS) உள்நாட்டுக் கலகத்தின் மூலம், அமைதி வழியில்
பலவண்ணப் புரட்சிகள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அரசுசாரா அமைப்புகள் பெரும் பங்காற்றின.
தற்போது பயங்கரவாத எதிர்ப்பு, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் ஆப்கானிலும், ஈராக்கிலும் இராணுவத் தலையீட்டின் மூலம் பல லட்சம்
மக்களைக் கொன்றொழித்து, அந்நாடுகளில் செய்த ஆட்சி மாற்றத்திற்கு இந்த
அமைப்புகள் உதவிகள் புரிந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் சிரியாவில் மக்களைத் தூண்டி உள்நாட்டு
கலவரம் நடத்துவதையும், ஈரானை மிரட்டுவதையும் இந்த அமைப்புகள் ஆதரிக்கின்றன.
அரபு வசந்தம் என்றழைக்கப்படும் எகிப்து, லிபியா போன்ற நாடுகளின்
சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான உள்நாட்டுக் கலகங்களை அமெரிக்க ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டில்
கொண்டு வருவதில் இந்த அமைப்புகள் மாபெரும் பங்காற்றின. இவ்வாறு மனித உரிமை, ஜனநாயகம் பேசிக்கொண்டு
ஒரு கையில் குண்டு, மற்றொரு கையில் ரொட்டித்துண்டு என்று அமெரிக்க
ஏகாதிபத்தியவாதிகள் நேரடி இராணுவ தலையீட்டின் மூலம் மூன்றாம் உலக நாடுகளை ஒடுக்குவதற்கு
அரசுசாரா அமைப்புகள் தொண்டூழியம் புரிகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியம்
90 ஆம் ஆண்டுகளில்
உலகம் முழுவதும் திணித்த புதிய காலனியத்திற்குச் சேவை செய்யும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதாரச்
சீர்திருத்த கொள்கைகளைச் செயல்படுத்துவதில் இந்த அரசுசாரா அமைப்புகள் முக்கியப் பங்கு
வகிக்கின்றன. ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் போன்ற
நிதி நிறுவனங்கள் மூலம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடன் வழங்கும் போது அந்த நிதியில்
ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி அரசுசாரா நிறுவனங்கள் மூலம் திட்டப்பணிகளை நிறைவேற்ற
வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. இந்த அமைப்புகள் “பங்கேற்பின் மூலம்”, “மனித நேயத்துடனான” உலகமயம் என்று
ஒரு மனித நேய முகமூடியை அணிந்துகொண்டு அக்கொள்கைகளுக்குச் சேவை செய்கின்றன. இவைகள்
உலகமயமாக்கல் கொள்கைகளை எதிர்ப்பவைகள் அல்ல, மாறாக உலகமயமாக்கல், தனியார்மய மாக்கலின்
மோசமான விளைவுகளை ஈடுகட்டும் பணியில் தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. ஏகாதிபத்திய
புதியகாலனி யாதிக்கக் கருவிகளான உலகவங்கி, ஐ.எம்.எப், உலக வர்த்தகக்
கழகம், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற அமைப்புகள் அனைத்தையும் சீர்திருத்திவிட
முடியும் என்ற மாயையை மக்களிடம் பரப்ப முயல்கின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
மக்களின் கோபத்தை நீர்த்துப்போகச் செய்து, சீர்த்திருத்தக் கருத்தாக்கத்திற்கு
மக்களை இழுத்துச்செல்ல முயல்கின்றன.
கருத்தியல் துறையில், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள்
கம்யூனிசத்திற்கு எதிராகவும், தேசவிடுதலைப் போருக்கு எதிராகவும் முன்வைக்கும்
திசைதிருப்பும் கொள்கைகளை, அரசுசாரா நிறுவனங்கள் ஊக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அமைப்புகள் கம்யூனிசத்திற்கு மாற்று என்று கூறி சீர்திருத்த வாதிகளும், முதலாளித்துவவாதிகளும்
முன்வைத்த பிற்போக்குத் தனங்களையும், கோட்பாடுகளையும் கொண்டு
புரட்சிகர இயக்கங்களைத் திசை திருப்புகின்றன.
பிராங்க்பர்ட் பள்ளியை
சார்ந்த புதிய இடது சிந்தனையாளர்கள், முதலாளித்துவச் சமூகத்தில்
அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக மார்க்சியத்தை கீன்ஸ்
கொள்கையைக் கொண்டு புத்தாக்கம் செய்யவேண்டும் என்று கூறினர். 1950களில் கம்யூனிசத்திற்கு
மாற்றாக கீன்ஸ் கொள்கைகளை முன்நிறுத்தினர். நவீன முதலாளித்துவச் சமுதாயத்தின் பொருளாதார
விதிகள் அதாவது அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உருவான
தன் மூலம் முதலாளித்துவம் சமூக நல அரசுகளாக மாற்றம் அடைந்துள்ள சூழலில் மார்க்சியத்தை
அதற்கேற்றவாறு மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். முதலாளித்துவப் பொருளாதாரப் பிரச்சினைகளை
முதலாளித்துவச் சமூக அமைப்பிற்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும், கலாச்சார மற்றும்
பண்பாட்டுப் பிரச்சினைகளில்தான் இனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
70ஆம் ஆண்டுகளின்
முதலாளித்துவப் பொதுநெருக்கடிக்கு பிறகு கீன்ஸ் கொள்கைகளைக் கைவிட்டு ஏகாதிபத்தியவாதிகள்
முன்வைத்த சந்தைப் பொருளாதாரம் என்ற புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைச்
செயல்படுத்த இந்த அமைப்புகள் துணைபோகின்றன. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைத்
திசைதிருப்பி சாதியம், பெண்ணியம், தேசிய இனவாதம் போன்ற பிரச்சினைகளில்
வர்க்க உள்ளடக்கம் இல்லாமல் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். இதன் மூலம் சோசலிசத்திற்கும், தேசிய விடுதலைக்குமான
புரட்சிகரப் போராட்டங்களைத் திசைதிருப்புகின்றனர். அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இதில்
முழு அளவில் ஈடுபட்டுச் செயல்படுகின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்குக் கருத்தியல்
துறையில் தொண்டூழியம் புரிகின்ற அமைப்புகளே அரசுசாரா அமைப்புகள்.
அரசுசாரா அமைப்புகள் குறித்த
பாட்டாளிவர்க்க செயல்தந்திரம்
நாம் மேலே கண்டவாறு அரசுசாரா
அமைப்புகள் ஏகாதிபத்தியவாதிகளுக்குச் சேவை செய்யும் அமைப்புகளேயாகும். அரசுசாரா அமைப்புகளில்
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு ஆதரவாகச்
செயல்படும் அமைப்புகள் இருக்கின்றன. இதில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசுசாரா அமைப்புகளே
வலிமையானதாகவும், செல்வாக்கு மிக்கதாகவும் திகழ்கின்றன. ஏகாதிபத்திய முரண்பாடுகளுக்கு
ஏற்ற வகையில் இவைகளுக்குள் முரண்பாடுகள் நிலவுகின்றன. எனினும் இவைகள் அனைத்தும் கம்யூனிசத்திற்கு
எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படும் அமைப்புகளாகவே
உள்ளன. எனவே பாட்டாளிவர்க்க இயக்கம் பொதுவாக அரசுசாரா அமைப்புகளை எதிரியாகவே பாவித்துத்
தனிமைப்படுத்தும் செயல்தந்திரத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஓவ்வொரு நாட்டிலும்
புறநிலை நிகழ்வுப்போக்கின் ஆய்விலிருந்து அரசுசாரா அமைப்புகளைத் தனிமைப்படுத்துவதா
அல்லது தாக்குதல் இலக்காகக் கொள்ளவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதுவே அரசுசாரா
அமைப்புகள் குறித்த பாட்டாளி வர்க்க இயக்கத்தின் செயல்தந்திரமாக இருக்கவேண்டும்.
இ.க.க. மாலெ (செங்கொடி), புதிய ஜனநாயகம்
குழு, மாவோயிஸ்டுகள் போன்ற மா.லெ குழுக்களை அடிப்படையில் மா.லெ புரட்சிகரக்
குழுக்களாகவே நாங்கள் கருதுகிறோம். எனினும் அக்கட்சிகள் அரசுசாரா அமைப்புகள் குறித்துக்
கடைப்பிடிக்கும் செயல்தந்திரங்கள் பிழையானது என்பதையும், புரட்சிக்கு பாராதூரமான
கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் சுட்டிக் காட்டுவது சகோதரப் புரட்சி
இயக்கத்தின் கடமை என்ற வகையிலேயே எமது விமர்சனங்களை முன்வைத்துள்ளோம். இத்தகைய பிழைகளைக்
களைந்துகொள்வதன் மூலம் மட்டுமே இந்தியாவில் புரட்சிகரக் குழுக்களுக்கிடையில் ஐக்கியத்தை
ஏற்படுத்தி ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டவும், உண்மையில் மக்களுக்குத்
தலைமை தாங்குவதில் ஒரு படி முன்னேறவும் முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். இது குறித்து
இவ்வமைப்புகள் பரிசீலிக்கும் என்று நம்பிக்கையுடனேயே இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளோம்.
கூடங்குளம் அணு உலை குறித்த
எமது நிலைபாடு
அணுசக்தியை அழிவு சக்தியாகக்
கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் அணு ஆயுதங்களைச் செய்து குவித்து உலக மக்களை அச்சுறுத்துவதை
எதிர்த்தும், உலகெங்கிலும் உள்ள அணு ஆயுதங்களை முற்றாக ஒழித்து அணு ஆயுதமற்ற
உலகத் திற்காகவும் போராடுவது; அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட நாடுகள்
ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதம்
வைத்துக் கொள்வதை ஆதரிப்பது.
அணுசக்தி காலாவதியாகிவிட்டது
என்ற பிற்போக்கு சக்திகளின் வாதத்தை முற்றாக நிராகரித்து, அணுசக்தியை அமைதிவழியில்
(மின் உற்பத்தி போன்ற) பயன்படுத்துவது அவசியமானது என்றும்; அவ்வாறு பயன்படுத்தும்போது
ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் தாசர்களான உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ வர்க்கங்களின்
இலாப வெறிக்காகக் காலாவதியாகிப்போன அணு உலைகள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
அணு மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை மூடவேண்டும்; பாதுகாப்பான, புதிய தொழில்நுட்பத்தின்
அடிப்படையிலான அணு உலைகளைத் திறக்க வேண்டும் என்று போராடுவது;
இந்தியாவிலுள்ள ஜெய்டாபூர், கைகா, இரத்னஹள்ளி உள்ளிட்ட
அனைத்து அணு உலைகளையும் இதனடிப்படையில் ஆய்வு செய்து, இயக்கக் கோருவதுடன்
கூடங்குளம் அணு உலையை இதனடிப்படையில் துவங்குவதை ஆதரிப்பது;
அதே நேரத்தில், கூடங்குளம் அணுமின்
நிலையம் அமைப்பதால் பாதிக்கப்படும் மக்களுக்கு நட்ட ஈடு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களைச்
செயல்படுத்தல்; மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தீர்வுகாணுதல்; அணுமின் நிலை
யத்தைச் சுற்றியுள்ள 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி
ஏற்படுத்துதல், பேரிடர் மேலண்மை மற்றும் மீட்பு பணிகளுக்குப் பயிற்சி அளித்தல்
போன்ற மக்களின் உடனடிக் கோரிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும்
நிறைவேற்றி அணு உலையைத் துவங்கப் போராடுவது என்பதே எமது நிலைபாடாகும்.
அணுசக்தி, மனிதகுல ஆற்றல்
பற்றாக்குறை எனும் இருளைப் போக்கும் அற்புத விளக்காக, இயற்கை உயிரியல்
துறையில் சாகசங்கள் புரியும் உயிர் சக்தியாக, கடவுள் படைப்பு எனும்
மாயையைக் கட்டுடைத்து இயற்கையின் உண்மையை உலகுக்குக் காட்டும் மாபெரும் சக்தியாகத்
திகழ்கிறது. அந்த அற்புதச் சக்தியை மனிதகுலம் தம்வசப்படுத்தி வளம் பெற்றிட கீழ்க்கண்ட
முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்.
« “அணுசக்தி காலாவதியாகிவிட்டது”, “அணு உலையை மூடு” என்ற பிற்போக்கு
முழக்கத்தை முறியடிப்போம்!
« இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை
ரத்துசெய்யப் போராடுவோம்!
« ஏகாதிபத்தியங்கள், உள்நாட்டுத் தரகுப்
பெருமுதலாளிகளின் இலாபவெறிக்காக இயங்கும் பழைய காலாவதியான அணு உலைகளை மூடு, புதிய தொழில்நுட்ப
ரீதியிலான, பாதுகாப்பான அணு உலைகளை அனுமதி!
«
மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி கூடங்குளம்
அணு உலையைத் திற!
« அனல், புனல், காற்று, சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட
தேசிய மின்திட்டத்திற்காகப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர்
கழகம், தமிழ்நாடு
ஆகஸ்ட், 2012
No comments:
Post a Comment