புதியகாலனிய ஜி.எஸ்.டி வரியை முறியடிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஜூன்
30-ஆம் தேதி நள்ளிரவில் பொருட்கள் மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரிச்சட்டத்தை அமல்படுத்தி
உள்ளது. இதன் மூலம் பன்முக வரிகளை ஒழித்து, நாடு முழுவதும் ஒரே வரியைக் கொண்டுவந்து
வரலாற்றுச் சாதனை புரிந்து விட்டதாக மோடி கும்பல் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.
1947ஆகஸ்ட்-15 நள்ளிரவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அரசியலதிகாரம் இந்திய
ஆளும் வர்க்கங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2017 ஜூன் 30 நள்ளிரவில் ஒருநாடு,
ஒரு சந்தை, ஒரு வரி என்றபேரில் பொருளாதாரம் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற,
சட்டமன்றங் களிடமிருந்து பன்னாட்டு முதலாளிகளிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அத்துடன்
மாநிலங்களின் வரிபோடும் உரிமையை பறித்து தேசிய இனங்களை ஓட்டாண்டி யாக்குகிறது. கொடிய
வரி விதிப்புகள் மூலம் நாட்டுமக்களை சூறையாடும் சட்டமாக அமைந்துள்ளது. சுமுக்கமாக ஜி.எஸ்.டி
வரி சட்டம் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாக மாற்றுவதில் மற்றும்
ஒரு மைல் கல்லாகும்.
புதியகாலனிய
வரிவிதிப்புச் சட்டம் ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி வரி விதிப்பு மோடியின் மூளையில் உதித்த
‘சுதேசிய’ திட்டமல்ல. உலகின் 140 நாடுகளில் ஜி.எஸ்.டி அமலில் உள்ளது. உண்மையில் உலக
வர்த்தகக் கழகம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆணைகளுக்கு
அடிபணிந்தே மோடி கும்பல் இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
2015 ஜூன் 4ம் தேதி உலகவர்த்தகக் கழகத்தின் (WTO) இந்தியாவிற்கான
கொள்கைத் திட்டப் பரிசீலனையின் 6-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தியாவில் நடப்பில்
உள்ள கூடுதல் சுங்கவரி, சிறப்பு கூடுதல் சுங்கவரி போன்றவை நிலையற்றதாகவும் சிக்கலனாதாகவும்
உள்ளது. எனவே இந்தியா விரிவான வரி சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும், அந்நிய முதலீட்டிற்கான
தடைகள் அனைத்தையும் நீக்கவேண்டும் என அக்கூட்டத்தில் கீஜிளி வற்புறுத்தியது. அத்துடன்
மோடி அரசாங்கம் இன்று அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி.சட்டத்தை வரவேற்பதாகவும் கூறியது.
2016 செப்டம்பர் 23-ல் புதுடில்லியில் கூடிய அமெரிக்க
- இந்திய வர்த்தகக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்
தங்கள் நாட்டு லாஜிஸ்டிக் (lojistics- சரக்கு பரிவர்த்தனை
மற்றும் சரக்கு கையாளுகை) கம்பெனிகளுக்கு இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என நிர்ப்பந்தம்
செய்தனர். இந்திய நாட்டின் சந்தையை உலகளாவிய வர்த்தக சந்தை சங்கிலியுடன் இணைப்பது என்ற
பேரில் இந்திய சந்தையை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மூன்று கொள்கைத்
திட்டங்களை முன்வைத்தனர். 1) ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி அமெரிக்காவின் லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கு
இந்தியச் சந்தையை திறந்துவிட வேண்டும். 2) உலக வர்த்தகக் கழகத்துடன் செய்துகொண்டுள்ள
வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் உடன் படிக்கைகளை அதாவது இறக்குமதி பொருள்களுக்கான தடைகளை
அகற்றுவதுடன் சுங்கவரிகளை குறைப்பது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
3) இணைய தள வர்த்தகத்திற்கான (ஆன்லைன் வர்த்தகத்திற்கான) கட்டமைப்பு வசதிகளை செய்து
தரவேண்டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நிர்ப்பந்தித்தனர். மேற்கண்ட உலகவர்த்தகக்
கழகம், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முன்வைத்த இந்தியச் சந்தையை முழுவதுமாக திறந்துவிடும்
புதியகாலனியத்திற்கு சேவை செய்யும் வரிக்கொள்கைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் விதமாகத்தான்
மோடி கும்பல் ஜி.எஸ்.டி சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம்,
சட்டமன்றங்களின் அதிகாரத்தை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்தல்
இதுநாள் வரை பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வரிவிதிக்கும்
அதிகாரத்தை நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் கொண்டிருந்தன. எவ்வளவு வரிவிகிதம் விதிக்க
வேண்டும் என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதித்துவ அமைப்புகள் வரவு செலவு
திட்டத்தின் மூலம் தீர்மானித்து வந்தன. இனி மத்திய மாநில அரசுகளைச் சார்ந்த அமைச்சர்கள்
அடங்கிய ஜி.எஸ்.டி கவுன்சில் என்ற ஒரு தனி அமைப்பிற்கு வரி விதிக்கும் அதிகாரம் மாற்றிக்
கொடுக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு சம்பந்தமான நாடாளுமன்ற ஜனநாயக முறைகள் முற்றிலும்
தூக்கியெறியப்பட்டு விட்டது. பெயருக்கு இந்த கவுன்சில் முடிவு என்பது அரசிற்கு சிபாரிசுதான்
என்று கூறப்பட்டாலும் உண்மையில் அதிகாரம் கவுன்சிலிடம்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே மோடி அரசாங்கம் திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு அதனிடத்தில் நிதி ஆயோக்
என்ற பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுக்களின் அடிவருடிகளை அதில் உட்கார வைத்துவிட்டது.
தற்போது ஏகாதிபத்திய ஏவல்நாய்களைப் போல் செயல்படும் அமைச்சர்களைக் கொண்டு வரிவிதிக்கும்
அமைப்பும் நாடாளுமன்ற முறைக்கு அப்பால் உருவாக்கப் பட்டுவிட்டது. இவ்வாறு இந்தியாவில்
நாடாளுமன்ற ஆட்சிமுறை என்ற திரைமறைவுக்குள் ஏகாதிபத்திய சுரண்டலுக்கான பொம்மை ஆட்சி
மெல்ல மெல்ல கட்டியமைக்கப்பட்டு வருகின்றன.
வளர்ச்சிக்கான நாடுகளின் கூட்டமைப்பு (OECD),
ஐ.எம்.எப், உலக வங்கி, உலக வர்த்தக கழகம், ஐநா வளர்ச்சிதிட்ட குழுமம் போன்ற ஏகாதிபத்திய
புதிய காலனிய நிறுவனங்களும்; பிரைட்வாட்டர் ஹவுஸ் கூப்பர், கே.பி.எம்.ஜி, டெலோயிட்,
கிரைம்சன் அண்ட் கம்பெனி, நாடு கடந்த வரி ஆய்வு அமைப்பு (TIWB),
வரிநிர்வாக அமைப்பு (FTA)
போன்ற அமைப்புகளும் இணைந்து ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக வரிகளை
கட்டுப்படுத்துவதோடு, இந்திய சந்தையை தங்குதடையின்றி எங்கெங்கும் ஓடோடி சென்று சூறையாடி
செல்வதற்கே இந்த ஜி.எஸ்.டி. சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், ஜி.எஸ்.டி-சட்டம் “ஒரு நாடு, ஒரு சந்தை,
ஒரு வரி” என்பதன் மூலம் புதியகாலனி ஆதிக்கத்துக்கு சேவை செய்வதோடு, ஆர்.எஸ்.எஸ். கும்பல்
முன்வைக்கும் “ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பண்பாடு” என்ற இந்துராஷ்டிரத்தை உருவாக்க சேவை
செய்யும் சட்டமுமாகும். மேலும் இட்லரின் பாணியில் “ஒரு மக்கள், ஒரு நாடு, ஒரு தலைவன்”
என மோடி தலைமையில் ஒரு இந்துத்துவப் பாசிச சர்வாதிகார ஆட்சியை கட்டியமைக்கவும் உகந்த
சட்டமாகும். இவ்வாறு ஜி.எஸ்.டி அரசியல் ரீதியில் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும்
இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் சட்டமாக திகழ்கிறது.
மாநில
உரிமைகள் பறிக்கப்பட்டு தேசிய இனங்கள் ஓட்டாண்டியாக்கப்படுதல்
இந்திய
துணைக்கண்டத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மொழிவழி தேசிய இனங்களாகும். இந்திய அரசு
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து தேசிய இனங்களின் சிறைக்கூடமாக திகழ்கிறது.
ஏற்கனவே மோடி கும்பல் பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்து மாநில உரிமைகளை பறித்து மத்தியில்
அதிகாரத்தைக் குவித்து வருகிறது. தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பில் ஒரு நாடு, ஒரு வரி,
ஒரு சந்தை என்ற பேரில் மாநில வரி விதிப்பு அதிகாரத்தை பறித்து மத்தியில் குவிக்கிறது.
இறுதியில் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நாடுமுழுவதும் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கு
ஒரே வரிவிகிதம்தான் என்கிறது ஜி.எஸ்.டி சட்டம். இது நாள் வரை மாநில அரசுகளின் கீழ்
விற்பனைவரி இருந்து வந்தது. மாநில அரசுகளின் வரிவருவாயில் 80-சதவீதம் விற்பனை வரியிலிருந்துதான்
கிடைத்துவந்தது. இனி விற்பனை வரியை எந்த மாநில அரசும் விதிக்கமுடியாது. இந்த வரி நேரடியாக
மத்திய அரசிற்கு சென்றுவிடும். இதன்மூலம் மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களின்
வரிவருவாயை சூறையாடி மாநிலங்களின் கஜானாவை காலி செய்து தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்கிவிட்டது.
அனேகமாக அனைத்து தேசிய இனங்களும் தங்களின் தயவை எதிர்பார்த்து திருவோடு ஏந்தும் நிலைக்கு
மத்திய அரசு தள்ளிவிட்டது.
மாநிலங்கள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு வரியை மாற்றியமைக்க
வேண்டுமானால் ஜி.எஸ்,டி. கவுன்சிலின் ஒப்புதலை பெறவேண்டும். ஜி.எஸ்.டி கவுன்சிலில்
மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்கு இருக்கிறது. அதில் மத்திய அரசின் கையே ஓங்கியுள்ளது.
இதற்கு முன்பு இருந்துவந்த மதிப்புக்கூட்டு வரிவிதிப்புமுறை என்பது உற்பத்தி செய்யும்
மாநிலங்களுக்கு சாதகமாக இருந்தது என்றும், தற்போது ஜி.எஸ்.டிக்குப்பின் அது நுகர்வோர்
வரியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக வரிவிதிப்பின் பலன்கள்
சேரும் என்று கூறி மாநிலங்களை உற்பத்தி மாநிலங்கள் என்றும் நுகர்வோர் மாநிலங்கள் என்றும்
பிளவுப் படுத்திவிட்டது. தமிழ்நாடு, மகராஷ்டிரா, ஆந்திரா போன்ற உற்பத்தியில் முன்னேறிய
மாநிலங்கள் இதன் மூலம் கடுமையாக பாதிக்கின்றன. தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி
இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நட்ட ஈட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்
போவதாக மத்திய அரசு கூறுகிறது. எத்தனை நாளைக்கு இந்த உதவி நீட்டிக்கும்?
எனவே ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் சார்ந்த நலன்கள்
மற்றும் வளர்ச்சித் திட்டங்களை கணக்கில் கொண்டு பொருட்கள் மீதான வரிவிதிக்கும் உரிமைகளை
இழந்துள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாநிலங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள
தாக்குதலாகும். இதன் மூலம் மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள
வரிபோடும் அதிகாரத்தை பறித்து தேசிய இனங்களை கொத்தடிமைகளைப் போல் மாற்றிவிட்டது.
ஜி.எஸ்.டியால்
பயனடயும் கார்ப்பரேட்டுக்கள்
ஜி.எஸ்.டியால் பயனடைவது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுக்களே
ஆகும். ஜி.எஸ்.டி வரி என்பது உற்பத்தியில் போடுவதற்குப் பதிலாக நுகர்வோர் மீது போடப்படுவதாகும்.
அதாவது இந்த வரிகள் அனைத்தும் மறைமுக வரிகள் என்பதும், அந்தவரிகளை உயர்த்துவதற்கான
ஏற்பாடே ஜி.எஸ்.டி. யின் நோக்கம் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர். அதாவது
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தின் மீது விதிக்கப்படும் நேரடிவரிகளான சுங்கவரி,
கார்ப்பரேட் வரி, மூலதன ஆதாய வரி போன்றவைகள் குறைக்கைப்பட்டு மறைமுக வரிகளை உயர்த்துவதன்
மூலம் மக்கள் மீது வரிச்சுமைகளை சுமத்துவதாகும்.
இந்தியாவில் மொத்த வரிவிதிப்பில் 65 சதவீதம் மறைமுகவரிகளாகும்.
இனி இவை ஜி.எஸ்.டி யின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளாக நேரடிவரிகள்
குறைக்கப்பட்டு மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதரத்தை
ஆய்வு செய்தால் 2007-08 ஆம் ஆண்டில் ஜி.டி.பி. மதிப்பில் நேரடி வரி 6.3 சதவீதமாக இருந்தது,
2015-16ல் அது 5.47 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது வளர்ச்சி என்ற பேரால் கார்ப்பரேட்டுகளுக்கு
வரி விதிப்பு தொடர்ச்சியாக குறைக்கப்படு வருகிறது. இனி ஜி.எஸ்.டி வரிவிதிப்புமுறை மூலம்
அரசாங்கத்திற்கு பதிலாக மறைமுகவரி கார்ப்பரேட் பொருளாதார வல்லுனர்களால் கட்டுப்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி சட்டம், உலகமுழுவதும் நீடித்துவரும்
முதலாளித்துவ பொருளாதார மிகைஉற்பத்தி நெருக்கடியிலிருந்து பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்
கம்பெனிகளை காக்கவும் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது திணிக்கவுமே கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன் உலக முதலாளித்துவ நெருக்கடி தொடர்வதால் சென்ற ஆண்டு கார்ப்பரேட்டுக்களின்
இலாபம் வீழ்ச்சியடைந்து கார்ப்பரேட் வரிவருவாய் குறைந்துவிட்டன. சொத்துமதிப்பு வீழ்ச்சியால்
மூலதன ஆதாயவரியும் வீழ்ச்சி அடைவதால் அரசாங்கத்தின் வரிவருவாய் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், உலக அளவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை ஏற்கனவே
அமல்படுத்திவரும் 140 நாடுகளும் மிக அதிகமான அளவில் பணவீக்கத்தை சந்தித்து வரும் சூழலில்
அந்நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவிகிதம் மட்டும் உச்சத்தை நோக்கிய
பாய்ச்சலில் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் மீது வரிச்சுமைகளை சுமத்தி அரசாங்கத்தின்
வரிவருவாயை பெருக்கிக் கொள்ள ஜி.எஸ்.டி. ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது.
ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் மட்டுமல்ல
ஜி.எஸ்.டி வரிவிதிப்பை உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் வரவேற்கின்றன. ஜி.எஸ்.டி
சட்டத்தால் புளாங்கிதம் அடைந்து முகேஷ் அம்பானி கூறுவதை பாருங்கள்ஞ். “130 கோடி மக்களைக்கொண்ட
சந்தை இப்போதுதான் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருள் வர்த்தகத் துறையின்
(lojistics)
மதிப்பு அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் அளவுக்கு
எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் பொருளாரம் குறித்த எனது கனவுகளுக்கு
கிடைத்த விடுதலை” என்று ஆனந்த கூத்தாடுவதே இது கார்ப்பரேட் நலன்காக்கும் சட்டம் என்பதை
காட்டுகிறது.
எனவே மோடி கும்பல் கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. சட்டமானது
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுக்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்கே கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி-யால்
பாதிக்கப்படுவோர் யார்?
ஜி.எஸ்.டி. சட்டம் அமலுக்கு வந்ததால் வணிகர்கள்,
சிறு குறு மற்றும் தேசிய தொழில் முனைவோர், தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை
இழந்து கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். ஜி.எஸ்.டி யை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்.
வணிகர்கள்: ஜி.எஸ்.டி வரிவிதிப்பு சில்லரை வர்த்தகர்களை
மிரட்டுகிறது. மறுபுறம் இணைய வர்த்தகத்தை அனுமதிப்பதன் மூலம் இந்திய வர்த்தகம் கடுமையான
விளைவுகளை சந்தித்து வருகிறது. இன்று உலக அளவில் இணைய வர்த்தகத்தை முன்னேற்றுகிறோம்
என்ற பேரில் ஏகாதிபத்திய நாடுகள் எல்லையில்லாமல் உலகசந்தை முழுவதையும் தங்களது ஆக்டோபஸ்
கரங்களுக்குள் கொண்டுவந்துள்ளன.
உலகுதழுவிய ஊடகங்கள், தனிநபர்கள் பற்றிய தகவல்கள்
(ஆதார்கார்டு), சமூக வலைதள தொடர்புகள் மூலம் வங்கிகள், சில்லரை வர்த்தகம், இராணுவ நிலைகள்,
பொதுநல சேவைகள் - கல்வி, மருத்துவம், சுகாதார துறைகள் பற்றிய உலக அளவிலான தகவல்களை
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதன் மூலம் உலக
சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
துறையிலும் தங்களது ஏகபோகங்களை நிறுவியுள்ளன. ஊபர் நிறுவனம் உலகுதழுவிய அளவில் நகர்புற
போக்குவரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது; மான்சான்டோ நிறுவனம் உலகுதழுவிய அளவில் விவசாயத்துறை
பற்றிய தகவல்களஞ்சியத்தை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி வருகிறது; ஜெனரல் எலக்ட்ரிக்
கம்பெனி “தொழில்துறை இணைய இயங்குதளத்தை” நிறுவிவருகிறது; பைடு (Baidu)
என்ற சீன நிறுவனம் போர்டு, டைம்லர், மைக்ரோசாஃட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து போக்குவரத்துத்
துறையில் ஒரு “ஆண்டிராய்ட் செயலியை” உருவாக்கி அத்துறையில் தங்களது கட்டுப்பாட்டை கொண்டு
வருகிறது. எனவே இணைய வர்த்தகம் என்பது சில்லரை வர்த்தகம் முதல் கல்வி மருத்துவம் வரை
அனைத்து பொருளாதார துறையிலும் அந்நியர்களின் ஆதிக்கத்தை திணிக்கிறது. அமேசான், ஸ்நாப்
டீல், பிளிப்கார்ட் போன்ற கம்பெனிகள் கோடிக்கணக்கான வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது.
இத்தகைய ஒரு சூழலில்தான் ஜி.எஸ்.டி ஆன்லைன் வர்த்தகத்தை
அதிகரித்து சில்லரை வணிகத்தை அழிக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத்
தலைவர் த.வெள்ளையன் குற்றம் சுமத்தியுள்ளார். சுய தொழில்கள் உள்நாட்டு உற்பத்திகள்
அழியும் நிலை ஏற்படும். ஜி.எஸ்.டி நமது நாட்டில் ஆன்லைன் வணிகத்தை அதிகரிக்க அமெரிக்கா
செய்யும் திட்டமிட்ட சதி ஆகும். நமது நாட்டின் வணிகத்தை மீண்டும் கைப்பற்ற அந்நிய நாடுகள்
செய்யும் சதி திட்டம் என்று கூறுகிறார். ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை
திட்டமிட்டுள்ளதாக மற்றொரு வணிகர் சங்க தலைவர் விக்கிரமசிங்க ராஜா கூறியுள்ளார்.
சிறு, குறு தொழில் முனைவோர்: ஜி.எஸ்.டி சட்டம்
அமல்படுத்துவதற்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்தான்
கலால் வரி வரம்பிற்குள் (உற்பத்தி வரி) கொண்டுவரப்பட்டது. இனி அந்த வரம்பு வெறும் ரூ.
20 லட்சமாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் வரியை கட்டுவதற்கான கணினி முறைகளுக்கு இந்நிறுவனங்கள்
மாறவேண்டும். அதற்கான ஊழியரை நியமித்துக் கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்தில் மட்டும்
பதிவு செய்யப்பட்ட 1.62 லட்சம் மற்றும் பதிவுசெய்யப்படாத பல லட்சம் சிறு,குறு தொழில்கள்
கடுமையாக பாதிக்கின்றன.
நாடு முழுவதும் ஜவுளி ரகங்களுக்கு ஏற்றவாறு, கொள்முதல்
அளவுக்கு ஏற்றவாறு ஜி.எஸ்.டி வரி 5 முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
மெழுகு, தீப்பெட்டி தொழில்களுக்கு 200 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின்
பாரம்பர்ய தொழில்களான தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி, விசைத்தறி, பீடி, முந்திரி, தோட்டப்பயிர்
போன்ற தொழில்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்
நிறுவனங்கள் உலகப் பொருளாதார மந்தநிலையின் காரணமாக சர்வதேச சந்தையில் போடிப் போட முடியாத
நிலையில் தத்தளித்துக் கொண்டுள்ளது. தற்போது ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இத்துறையின் முதுகெலும்பை
உடைத்துவிட்டது. வரிவிதிப்பு மட்டுமல்ல இச்சட்டப்படி இனி ஜவுளி ரகங்களை கொண்டு செல்லும்போது
இணயத்தில் பதிவு செய்து இணைய சான்றிதழுடன் (இ.வே சான்றிதழ்) கொண்டு செல்ல வேண்டும்.
அவ்வாறு இணைய பதிவு ரசீது இல்லாமல் கொண்டு சென்றால் வணிகவரித்துறை, சுங்கவரித் துறை
வட்டாரப் போக்குவரத்துத் துறைகளுக்குக் ‘கப்பம்’ கட்டியே சாக வேண்டியதுதான்.
அதே நேரத்தில் பலகோடி முதலீடுகள் செய்து தொழிலில்
ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளுக்கு இந்த சிக்கல்கள் எதுவுமில்லை. மாறாக மோடி கும்பல்
இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையுடன் ஊக்கத்தொகை என்ற பேரில் ஏராளமான
நிதி உதவியை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில் இந்நிறுவனங்கள் கடன்பெற்று திரும்ப
செலுத்தாத வாராக்கடனை வசூல் செய்ய மறுப்பதோடு கடன் ரத்து செய்யப்படுகிறது. கார்ப்பரேட்டுக்களின்
பல ஆயிரம் கோடி வரி எய்ப்பை வசூல் செய்யவும் மறுக்கின்றது மோடி கும்பல். ஆனால் சிறு
குறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்துகிறது.
அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதற்கு சிறு குறு தொழில்கள் மற்றும் வணிகர்களின் கழுத்தை
நெறித்து வரிவசூல் செய்கிறது.
தொழிலாளர்கள்: ஜி.எஸ்.டி வரிவிதிப்பின்படி தீப்பெட்டி
தொழிலுக்கு 18 சதவீதமும், பட்டாசு, வெட்கிரைண்டருக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பீடி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரிஉயர்த்தப்பட்டுள்ளதால் இத்தொழிலகள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழில்கள் பாதிக்கப் படுவதால் கோடிக் கணக்கான தொழிலாளர்களின்
வேலை பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது. அத்துடன் ஜி.எஸ்.டி யால் அத்யாவசிய பொருட்களின்
விலை உயர்ந்து உண்மையான ஊதியம் குறைக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்நிலை அதளபாதாளத்தில்
தள்ளப்படும். அவர்களி கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எட்டுமணி
நேர வேலை கனவாக மாறும். ஏற்கனவே மோடி அரசாங்கம் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளையெல்லாம்
பறித்து அவர்களை கொத்தடிமைகளாய் மாற்றி வருகிறது. இவ்வாறு ஜி.எஸ்.டி தொழிலாளர்களின்
வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.
விவசாயிகள்: ஜி.எஸ்.டி சட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய
நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வேளாண்பொருட்களுக்கு வரி குறைக்கப்படும். அதனால் வேளாண்
விளைபொருட்கள் மலிவாகக் கொட்டிக் குவிக்கப்பட்டு இந்திய விவசாயிகள் போட்டிப் போடமுடியாமல்
விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை தீவிரமடையும். ஏற்கனவே உலக வர்த்தக கழகத்துனடனான
உடன்படிக்கை காரணமாக ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தான்யங்கள் இந்திய சந்தையில்
கொட்டிக் குவிக்கப்படுகின்றன. 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ,1,402,680,000,000
(14 லட்சம் கோடி மேல்)க்கு அரிசி கோதுமை, சோளத்தை இறக்குமதி செய்துள்ளதாம். விவசாயிகளிடமிருந்து
ஆதார விலையின் அடிப்படையில் தான்யங்களை கொள்முதல் செய்வதை இந்திய அரசு குறைத்துக் கொண்டதால்
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் மூன்று லட்சம் பேர்
தற்கொலை செய்து மாண்டு போன நிலைமையில் இத்தகைய கொலை பாதக செயலில் மோடி கும்பல் ஈடுபட்டுள்ளது.
எனவே ஜி.எஸ்.டி சட்டம் விவசாயிகளுக்கு இன்னும் ஒரு தூக்குக் கயிறுதான்.
கொடிய
வரியை திணித்து மக்களை சூறையாடும் மோடி கும்பல்
ஜி.எஸ்.டி வரி விதிப்பால் 20 சதவிகித பொருட்களின்
விலை மட்டுமே அதிகரிக்கும் என்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதியாவசியப் பொருட்களின்
விலை குறையும் என்று மோடி கும்பல் கூறியது. ஆனால் ஓட்டல்களில் விற்கப்படும் இட்லி தோசைகளின்
விலை உயர்ந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்துள்ளது. மெர்சிடெஸ்
பென்ஸ் காரின் விலையோ பல ஆயிரம் குறைந்துள்ளது. மோடி கட்டியமைக்கும் இந்தியா யாருக்கானது?
ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் மக்கள் அன்றாடம்
பயன்படுத்தும் 509 பொருட்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கு
9 முதல் 18 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு
குடி தண்ணீர் விலை கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள்,
பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்களுக்கு விலை உயர்ந்து விட்டது. சாராசரியாக ஒரு குடும்பத்திற்கு
மாதம் ரூ.1000 க்கும் மேல் கூடுதல் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளது.
சேவைத்துறைகள் என்று சொல்லப்பட்ட துறைகளிலும் கூட
ஜி.எஸ்.டி பாய்ந்து தாக்குகிறது. காப்பீடு, பிரீமியம் உள்ளிட்ட அனைத்திற்கும் 18 சதவீதம்
வரி விதிக்கப்பட்டுள்ளது. கல்வி மருத்துவம் சுகாதாரம் போன்ற சமூக நலத்திட்டங்களை மக்களுக்கு
இலவசமாக வழங்கவேண்டியதை தட்டிக்கழித்ததோடு தற்போது அவைகளுக்கும் வரி விதித்துவிட்டது
மோடி கும்பல். செல்போனுக்கு கட்டக்கூடிய மாதாந்திரக் கட்டணத்துக்கும், இணையதள பயன்பாட்டுக்கும்
கூட ஜி.எஸ்.டி என்கிறது மோடி கும்பல். இதனால் தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற
மோடியின் திட்டம் பல்லிளிக்கிறது.
நாடு முழுவதும் ஒரே வரி என்ற மோடி கும்பலின் கூற்றும்
கூட ஒரு மோசடிதான். ஜி.எஸ்.டியிலிருந்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு விலக்கு
அளித்ததன் மூலம் மக்களை கசக்கிப் பிழியும் வரியை நீக்க மறுத்துவிட்டது. ஜி.எஸ்.டி சட்டப்படி
அதிகபட்ச வரி 28 சதவிகிதமாகும். பெட்ரோல் மீது 57 சதவிகிதம், டீசல் மீது 55 சதவிகிதம்
என முந்தைய வரிவிதிப்பு தொடர்கிறது. இவைகளுக்கு ஜி.எஸ்.டி அடிப்படையில் அதிக பட்ச வரிவிதித்தாலும்
கூட லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.38.50 மட்டுமே விற்கவேண்டும். ஆனால் ஒரு லிட்டர்
ரூ.65.50 க்கு விற்பது மோசடி அல்லவா? மக்கள் மீது சுமைகளை சுமத்துவது ஆகாதா?
இன்று உலக அளவில் ஜி.எஸ்.டி வரி அமலில் உள்ள
140 நாடுகளில் இந்தியாதான் மிகவும் அதிக வரிவிதிப்பு நாடாக உள்ளது. வளர்ச்சியடைந்த
நாடுகளில் அதிக பட்சமாக 18 சதவிகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
கனடாவில் 15 சதவீதம், அமெரிக்காவில் வெறும்7.5
சதவீகிதம்தான். வளரும் நாடுகள் என்பவைகளில் ஆஸ்திரேலியா 10%, பஹ்ரைன் 5%, மலேசியா
6%, மியான்மர் 3%, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள் 18% சதவிகித வரிகள் தான் வசூலிக்கப் படுகிறது.
மோடியோ உற்பத்தியில் இந்தியாவை முதன்மை நாடாகக் கொண்டுவருவேன் என்றார். ஆனால் வரி வசூல்
செய்து மக்களை வதைப்பதில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக மாற்றிவிட்டார். அதிகமான
வரி விதிப்பு உற்பத்தி வீழ்ச்சியில் முடியும் என்ற பாலபாடத்தை மறுத்து கொடிய வரிவசூல்
செய்யும் காட்டுத் தர்பாரை நடத்துகிறார்.
ஒட்டு மொத்தமாக தொகுத்துக் கூறினால், மோடி கும்பலின்
ஆட்சி செல்லாக்காசு நடவடிக்கை, உண்ணும் உணவு உரிமைக்குத் தடை, கால்நடை விற்பனைக்கு
தடை, ஜீ.எஸ்.டி மூலம் கொடிய வரியை திணித்து மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேட்டு என மக்களை
வாட்டி வதைக்கும் ஆட்சியாக மாறிவிட்டது. மோடி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்
அலைஅலையாய் கிளம்பிவிட்டன.
மோடி கும்பல் அறிவித்த ஜி.எஸ்.டி வரி விதிப்ப்பை
எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. குறிப்பாக மகராஷ்டிரா, உத்தரப்
பிரதேசம், மத்தியப் பிரதேசம், கான்பூர், சூரத், காசியாபாத், பெங்களூர், தமிழ்நாடு மற்றும்
பல் பகுதிகளில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள், வணிகர்கள்
என போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் வணிகர்களும், திருப்பூர் மற்றும் ஈரோடு
மாவட்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களும் பல கட்ட போராட்டங்களை
திட்டமிட்டுள்ளன. இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட ஆளும் யோக்கிதையை இழந்து விட்டது. ஜனாதிபதி
தேர்தலில் வெற்றியடையலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் மோடி ஆட்சி வீழ்ச்சியை தழுவுகிறது
என்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள் ஜி.எஸ்.டியை
எதிர்த்து முறியடிக்கக் கூடியனவாக உள்ளனவா? உண்மை என்ன?
ஜி.எஸ்.டி
எதிர்ப்பில் நாடாளுமன்றவாத கட்சிகளின் நாடகம்
ஜி.எஸ்.டி சட்டத்தைக் கொண்டு வருவதில் எந்த ஒரு
நாடாளுமன்றக் கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. ஜி.எஸ்.டி வரி என்ற தேரை
இழுப்பதில் இக்கட்சிகள் அனைத்தும் மாறி மாறி வடம் பிடித்தக் கட்சிகள்தான் என்பதை ஜி.எஸ்.டி
உருவான வரலாற்றை பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.
- 1986
பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அன்றைய நிதி அமைச்சர் வி.பி.சிங்
வரிவிதிப்புமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
- 2000
ஆம் ஆண்டு பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதுதான் இந்த புதிய வரிவிதிப்பு முறையை
அறிமுகப்படுத்தினார். அப்போது இதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு மேற்கு வங்கத்தை ஆண்ட
சிபிஎம் கட்சியின் நிதி அமைச்சர் அசிம்தாஸ் குப்தா தலைமை தாங்கிதான் ஜி.எஸ்.டி கவுன்சிலை
வடிவமைத்தார். இவையெல்லாம் ஒரு சதித்தனமாக கையாளப்பட்டது.
- 2006
ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முதன்முதலாக ப.சிதம்பரம்
ஜி.எஸ்.டி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். 2010 ஏப்ரல் 1 ஆம் தேதியை ஜிஎஸ்டி-யை அமல்படுத்தும்
இலக்காக அறிவித்தார்.
- 2009ல்
பிரணப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்தபோது அசிம்தாஸ் வடிவமைத்த ஜிஎஸ்டி அடிப்படை அமைப்பு
குறித்து அறிவித்தார். அன்று எதிர் கட்சியாக இருந்த பாஜக அதை எதிர்த்தது.
- 2011
மார்ச்சில் மன்மோகன் சிங் தலமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஜிஎஸ்டி தொடர்பான
115-வது சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது.
- 2013
அக்டோபரில் அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ஜி.எஸ்.டி மசோதாவை எதிர்த்தார்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் குஜராத் மாநிலத்துக்கு ரூ.14,000 கோடி இழப்பு ஏற்படும் என்று
கூறி எதிர்த்தார்.
- 2015
மார்ச் மாதத்தில் மோடி பிரதமாராக வந்தபிறகு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- 2015
மார்ச் 14 ல் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை
மாநிலங்களவை செயற்குழுவுக்கு அனுப்புமாறு காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
- 2015
ஆகஸ்டில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பெறமுடியவில்லை.
- 2016
ஆகஸ்டில் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. மாநிலங்களவையில்
ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
இவ்வாறு ஜி.எஸ்.டி.சட்டம் முதன்முதலாக காங்கிரஸ்
ஆட்சியின்போது வி.பி.சிங்கால் துவங்கிவைக்கப்பட்டது. பின்னர் பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக
இருந்தபோது ஜி.எஸ்.டி கவுன்சில் வடிவமைக்க மே.வங்க ஜோதிபாசு தலைமையிலான சிபிஎம் அமைச்சரவையில்
நிதி அமைச்சராக இருந்த அசிம்தாஸ் குப்தாவின் தலைமையில் கமிட்டி அமைத்து நிறைவேற்றியது.
பின்னர் மன்மோகன் ஆட்சியின்போது நிதி அமைச்சர் சிதம்பரம் ஜிஎஸ்டியை பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தி
அமல் படுத்துவதற்கான கால அவகாசத்தை முன்வைத்தார். அபோது எதிர்கட்சியாக இருந்த பாஜக
அதனை எதிர்த்தது. அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி கடுமையாக இச்சட்டத்தை எதிர்த்தார்.
ஆனால் தற்போது தான் பிரதமராக ஆனதும் அதே சட்டத்தை அமல்படுத்த முயற்சித்தார் மோடி. அதற்கு
காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தாலும் இறுதியாக அனுமதி அளித்து ஜி.எஸ்.டி சட்டம்
நிறைவேறிவிட்டது.
நாடாளுமன்றவாத கட்சிகள் எதற்கும் ஜி.எஸ்.டி சட்டம்
பற்றி ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லை. மாறி மாறி சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு வந்துள்ளன.
தற்போது மோடி கும்பல் ஜி.எஸ்.டி வரி அதிகமாக விதித்துள்ளது என்று கூறி, சட்டத்தை வெளியிட்டு
அறிமுகப்படுத்திய நாடாளுமன்ற நள்ளிரவு கொண்டாட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல்
காங்கிரஸ், லல்லுவின் ராஷ்டிரிய ஜனதாதள் மற்றும் சிபிஐ கட்சிகள் புறக்கணித்தன.
ஆனால் இச்சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடும்
சிபிஎம் கட்சியோ தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நள்ளிரவு கொண்டாட்டத்தில் தங்களது விருப்பம்போல்
கலந்துகொள்வது பற்றி முடிவெடுக்கலாம் என்ற சந்தர்ப்பவாத முடிவை எடுத்தது. அக்கட்சியைச்
சேர்ந்த அதே அசீம்தாஸ் குப்தா, மோடி நடத்திய நள்ளிரவு கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி
கும்பலுக்கு ஆதரவளித்தார். மறுபுறம் அக்கட்சியோ ஜி.எஸ்.டி எதிர்ப்புப் போராட்டத்தை
தீவிரமாக நடத்துகிறது. இப்பிரச்சினையில் அக்கட்சி பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
என்ற ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டையே எடுத்துள்ளது. எனவே நாடாளுமன்றவாதக் கட்சிகளின்
இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை கணக்கில் கொண்டே ஜி.எஸ்.டிக்கு எதிரான போராட்டங்களை
நடத்த வேண்டும்.
மோடி
கும்பலின் எடுபிடி எடப்பாடி ஆட்சி
தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி கிரிமினல்
மாஃபியா சசிகலாவின் எடுபிடியாக ஆட்சி அமைத்தார். ஆனால் தற்போது இந்துத்துவப் பாசிச
மோடியின் எடுபிடியாக மாறிவிட்டார். ஜி.எஸ்.டி சட்டத்தை அனுமதிக்கமாட்டேன் என்று மறைந்த
கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவி ஜெயலலிதா வாய்ச்சவடால் அடித்தார். அம்மாவின் ஆட்சி
என்று அடிக்கடி பேசும் எடப்பாடி ஆட்சியோ எந்தவிதமான எதிர்ப்ப்பும் காட்டாமல் அப்படியே
ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி யால் தமிழகத்திற்கு ஏற்படும் ரூ.6,000 கோடி
நட்டத்தை ஈடுகட்டுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய
ரூ.17,000 கோடியை தரமறுக்கிறது. எடப்பாடி ஆட்சி அதனை கேட்டுப் போராட தயாரில்லை. இவர்கள்
எங்கே நட்ட ஈட்டுக்காக போராடப் போகிறார்கள்.
எடப்பாடி ஆட்சியைப் பொறுத்தவரை, மத்திய அரசை எதிர்த்து
மாநில உரிமைகளை பெறுவதற்கான ஆண்மை அற்ற அரசாக இருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவ
கனவை நொறுக்கிய ‘நீட்’ தேர்வாகட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள முட்டுக்கட்டை
ஆகட்டும், இந்தி பேசாத மாநிலங்களில் மோடி அரசு இந்தி, சமஸ்கிருத்தை திணிக்கும் பிரச்சினை
ஆகட்டும் அல்லது தமிழக விவசாயிகளின் ஹைட்ரோ கார்பன் பிரச்சினை ஆகட்டும் எந்தப் பிரச்சினைக்காகவும்
மத்திய அரசை எதிர்த்துப் போராட தயாரில்லை.
ஆனால் மோடி அரசின் தேசவிரோத, மக்கள் விரோத திட்டங்களையும்
இந்துத்துவ மதவாத மற்றும் சாதிவாத பாசிசத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் மீதும், போராட
வேண்டும் என துண்டு பிரசுரம் வினியோகிப்பவர்கள் மீதும் குண்டர்கள் தடைச்சட்டம் ஏவப்பட்டு
சிறையிலடைக்கப்படுவது தொடர்கிறது. மே-17 இயக்க தலைவர் திருமுருகன் மற்றும் சேலம் மாணவி
வளர்மதி போன்றவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளது. “மக்களை
தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும்போது குண்டர் சட்டம் கண்டிப்பாக
பாயும்” என்றும் கூறி கருத்துரிமை மீது கட்டாரியை பாய்ச்சுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி கும்பலுக்கு பதவி சுகம் பிடித்தாட்டுகிறது.
அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டுமானால், கல்லையும் மண்ணையும், தண்ணீரையும்
கொள்ளையிட்டு கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்க்க வேண்டுமானால் மத்திய பாஜக ஆட்சியின்
தயவு வேண்டும். இல்லையென்றால் ஊழல் வழக்கு அணிவகுக்கும். எனவேதான் மத்திய அரசுக்கு
கங்காணி வேலைபார்த்து மக்களுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி தாக்குதல்
நடத்துகிறது. குண்டர்களையும், மாஃபியாக்களையும் தலைவராகவும், அமைச்சர்களாகவும் கூடவே
வைத்துள்ள எடப்பாடி குண்டர் சட்டத்தை ஏவுவதுதான் கொடுமையானது. இவ்வாறு புதிய காலனிய
தாசன் மோடிக்கு தாசானு தாசானாக திகழும் எடப்பாடி ஆட்சியை எதிர்க்காமல் மோடி ஆட்சிக்கு
முடிவு கட்டமுடியாது.
புதிய
காலனிய ஜிஎஸ்டி வரியை முறியடிப்போம்
இன்று இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் அமல்படுத்தியுள்ள
ஜி.எஸ்.டி வரி சட்டம் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய
லாஜிஸ்டிக் கம்பெனிகளின் நலன்காக்கும் புதியகாலனிய வரிவிதிப்புச் சட்டமாகும். அது பன்னாட்டு
உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காக மாநிலங்களின் உரிமைகளை பறித்து தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்கும்
எதேச்சதிகார சட்டமாகும். கார்ப்பரேட் நலன் காக்க மக்கள் மீது முதலாளித்துவ நெருக்கடியை
திணிக்கும் சட்டமாகும். கார்ப்பரேட்டு களுக்கு வரிச்சலுகைகளும் மக்கள் மீது கொடிய வரிவிதிப்பை
திணித்து அரசாங்க கஜானாவை நிரப்பும் சட்டமாகும். நாட்டின் சிறு, குறு தொழில்களையும்
வர்த்தகத்தையும் அழித்து பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டமாகும். மோடி
கும்பலின் மேக் இன் இந்தியா திட்டமும் ஜிஎஸ்டி சட்டமும் விவசாயிகளை மட்டுமல்ல இந்திய
நாட்டையே “சூசைட் இந்தியாவாக்கி” சுடுகாடாக்கும் திட்டமாகும். அன்று காலனிய ஆட்சி வைஸ்ராய்களின்
மூலம் வரிவசூல் செய்து கொள்ளையிட்டது. இன்று வைஸ்ராய் இடத்தில் பிரதமர் அமர்ந்து கொண்டு
வரிவசூல் செய்து அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு “கப்பம்” கட்டும் அரசாக புதிய காலனி
அரசாக இந்தியா மாறிவருகிறது. எனவே மீண்டும் ஒரு முழு சுதந்திரப் போர் நடத்தி ஒரு மக்கள்
ஜனநாயக குடியரசை நிறுவுவது ஒன்றுதான் இதற்கு உண்மையான தீர்வாகும்.
அதற்கு தயாராகும் அதே நேரத்தில் உடனடியாக மோடி
ஆட்சி அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி சட்டத்தை முறியடிக்க வணிகர்கள், சிறு குறு தொழில் முனைவோர்,
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கீழ்க்கண்ட
முழக்கத்தின் அடிப்படையில் போராட அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கிறோம்.
é புதியகாலனிய
ஜிஎஸ்டி-வரியை முறியடிப்போம்!
é உலக
வர்த்தகக் கழக (கீஜிளி) உத்தரவின் அடிப்படையில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு
சேவை செய்வதே ஜி.எஸ்.டி!
é நாடாளுமன்ற,
சட்டமன்றங்களின் அதிகாரத்தை பறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் மூலம் பன்னாட்டு முதலாளிகளிடம்
ஒப்படைக்காதே!
é இந்திய
அரசியல் சட்டத்தை மீறி மாநிலங்களின் உரிமைகளை பறித்து தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்கும்
ஜி.எஸ்.டி!
é விவசாயிகள்,
தொழிலாளர்கள், வணிகர்கள், சிறுகுறு தொழில் முனைவோரை அழிக்கும் ஜி.எஸ்.டி. சட்டத்தை
ரத்துச் செய்யப் பெற போராடுவோம்!
é கொடியவரியை
திணித்து மக்களை சூறையாடும் இந்துத்துவப்பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக
இளைஞர் கழகம்
தமிழ்நாடு
ஜூலை – 2017
No comments:
Post a Comment