« தமிழ்மாய்க்கும் உலகமயமாக்கலை எதிர்ப்போம்!
« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!
மேற்கண்ட “பொதுக்கூட்டம் நடந்தால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்றும், தற்போது உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும்” என்று கூறி கூட்டம் நடத்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்துக்கு அனுமதிதர கோவை மாநகர காவல்துறை மறுத்து விட்டது. இவ்வாறு கருணாநிதி ஆட்சி கருத்துரிமையை மறுப்பது தனி ஒரு நிகழ்வல்ல.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கெதிரான எந்தவொரு ஜனநாயக நடவடிக்கையையும் கருணாநிதி அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மாநாட்டை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்தகைய சுவரொட்டிகளை அச்சடிக்கவேண்டாம் என அச்சக உரிமையாளர்கள் பலருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தம் கண்டனத்தை தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விட்டது காவல்துறை.
அரங்க கூட்டங்களை நடத்த முயன்றவர்கள் கூட காவல்துறையினரால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. மாற்றுக் கருத்துக்களுக்கான இடத்தை மறுத்து திமுக அரசு போலீஸ் ராஜ்யத்தை நடத்தி வருகிறது. திமுக அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் ஜனநாயக வாதிகளையும் ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்குத் துணைபோக மறுக்கும் அரசு அதிகாரிகளையும் பழிவாங்குகிறது.
ஏன் இந்த பாசிச ஒடுக்குமுறை?
திமுக அரசு பின்பற்றிவரும் தமிழ் தேசிய இன விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை அதனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
மழை பெய்கிறபோது குடை கிடைக்காவிட்டாலும் மேல்துணியை வைத்துக்கொண்டு பிடித்துக்கொள்வதுபோல் உடனடியாக இந்தி வந்துவிடாமல் ஆங்கிலத்தை வைத்துத் தடுக்கிறோம் என்று அண்ணா சொன்னார். ஆனால் உண்மையில் இந்தியை தடுக்க ஆங்கிலம்தான் நிரந்தர குடை என திமுக நம்பியது.
திமுக அரசு இந்தியை தடுக்க ஆங்கிலம் எனச் சொல்லி தமிழகத்தில் ஆங்கிலத்தை மட்டும் கட்டாயப் பாடமாக்கி, தமிழைப் படிக்கலாம் அல்லது படிக்காமலும் இருக்கலாம் என 13 மொழிகளில் ஒன்றாக தாய்மொழியை தடம் மாற்றி தடுமாறவைத்தது.
இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை மையப்படுத்தியே அணுகுமுறைகளும், நடவடிக்கைகளும் முன்வைக்கப்பட்டதே தவிர, தமிழ் மொழி அது சார்ந்த ஆட்சி மொழி சட்டத்திலிருந்த குறைபாடுகளை களைந்து, தமிழ் பயிற்றுமொழி ஆவதற்கான செயல்திட்டம், கால அளவு என்று எதுவும் இல்லை.
மத்திய அரசு (இந்திய அரசு) அரசின் நிர்வாக நடைமுறைகளில் இருமொழிக் கொள்கையும், பள்ளிக்கூடங்களில் மும்மொழிக்கொள்கையும் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து தாய்மொழியே - தமிழ்மொழியே ஆட்சிமொழி, பயிற்று மொழி என்ற கொள்கையை திமுக முன்வைக்கவில்லை.
இந்தி வராமலிருக்க இருமொழிக் கொள்கை என்றார்கள் திமுக ஆட்சியாளர்கள். இந்தியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இன்று நாட்டிலுள்ள நிலமை என்ன?
தமிழ் நாட்டுத் தெருவெல்லாம் ஆங்கில முழக்கத்தோடு இந்தி முழக்கமும் சேர்ந்து கொண்டது.
தமிழ் நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்திக்கு முதலிடம் தந்து ஆங்கிலத்தை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டு அலுவலகங்களில் ஆங்கிலத்துக்கு முதலிடம் தந்து தமிழை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.
தனியார் நிறுவனங்களும் உலகமயமாக்கலின் விளைவாய் புற்றீசல் போல் புறப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களும் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துள்ளன, தமிழுக்கு அங்கு இடமில்லை.
ஒரு பக்கம் செம்மொழி மாநாட்டை நடத்திய தமிழக அரசு மறுபக்கம் மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆங்கில வழி மாதிரிப்பள்ளிகளைத் திறக்கிறது.
திமுக ஆட்சியில் இந்த இனமும் மொழியும் தமிழர் வாழ்வியல் அறப்பண்புகளும் மிகக்கேடான வீழ்ச்சியை அடைந்துவிட்டன.
இந்த அவலநிலையை மூடிமறைக்கவே உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது தமிழக அரசு. ஆகையால் செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது பாசிசத் தாக்குதலைத் தொடுக்கிறது கலைஞர் கருணாநிதியின் அரசு.
தமிழினத்தின் காவலன் என்ற வேடமிட்டு வெறும் மேடைப் பேச்சுகளாலும் பொதுக்கூட்டங்களாலும் மக்களைக் கவர்ந்து இருபதாண்டுக்குள்ளாகவே ஆட்சியை பிடித்து வரலாறு காணாத அறக்கேடுகள், ஊழல்கள், ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ மற்றும் அகில இந்திய ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்து இன்னும் ஆட்சியில் இருக்கமுடிகிறது.
இத்தருணத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழருக்கு விடுத்த பின்வரும் அழைப்பை கருத்தில்கொள்வது அவசியம்;
“தமிழருக்குத் தலைவரெனச் சொல்வார் தாமும்.
தமிழ்மாய்க்கக் காசுபெறத் துடிக்கின் றார்கள்
தமிழ்மாய்க்கக் கூலிதரச் சிலரும் உள்ளார்.
தமிழ்கொல்லும் தலைவர்களைக் காணும் தீய
தலைமுறையும் இதுவாகும் ஒன்று சேர்க!”
இந்தி வராமலிருக்க இருமொழிக்கொள்கை என்று சொல்லி ஆங்கிலத்தை நிலைநிறுத்தும் திராவிடக் கட்சிகளின் கொள்கை தமிழ் மாய்க்க வழிவகுக்கும் கொள்கையாக அமைந்துள்ளது. உலகமயமாக்கலின் விளைவாக இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிந்துபோக வாய்ப்புள்ள மொழிகளில் ஒன்றாகத் தமிழ் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான செயல்கள் இன்றி, வெறும் ஆரவார விளம்பரச் செயல்களில் ஈடுபட்டுத் தமிழை காப்பாற்றிவிட முடியாது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன்னையே காவலனாகக் காட்டிக் கொள்ளும் இந்த தலைவர் உண்மையில் தமிழுக்குச் செய்வது என்ன? தமிழ் மாய்க்கும் தமிழ் கொல்லும் உலகமயமாக்கும் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதுதான்.
தமிழுக்கு வாய்ப்பளிக்காமல் ஆங்கிலத்தை வளர்ப்பவர்கள் அனைவரும் திராவிடக் கட்சிகளின் கல்வி வியாபாரிகளே. அவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களால் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தமிழைப் புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் கலைஞரும் அவருடைய குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களிலும் தமிழ் எப்படி கொல்லப்படுகிறது என்பது அனைவரும் அறிவார்கள். இவற்றையெல்லாம் திருத்துவதற்குச் சற்றும் மனமில்லாத அரசும் அதன் தலைவரும் செம்மொழியை வளர்ப்பதற்காகச் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடு. ஆட்சியிலும் கட்சியிலும் உச்ச அதிகாரம் பெற்றவர்களாக கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நீடித்திருக்க வாக்காளர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது அதனினும் மாபெரும் வெட்கக்கேடு.
இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரிப் போராடிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், கூட்டமொன்றில் இலங்கை இராணுவத்தை விமர்சித்து ஆற்றிய உரையின் சில பகுதிகள் இருபிரிவினருக்கிடையே பதற்றத்தைத் தூண்டுவதாகச் சொல்லித் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரைக் கைது செய்தது கருணாநிதி அரசு. சீமான் பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வந்து கொண்டிருந்தபோது தடுத்தி நிறுத்தி அவரை கைது செய்த காவல்துறை, அச்சம்பவத்தைப் படம்பிடிக்க முயன்ற ஊடகத்துறையினரைத் தாக்கி அவர்களிடமிருந்து காமிராக்களைப் பறித்திருக்கிறது.
திமுக ஆட்சியில் காவல்துறையினரின் அத்துமீறல்களைப் படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது திரும்பத்திரும்ப நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு தருணத்திலும் அரசு காவல்துறையினரின் அத்து மீறலுக்குத் துணைபோய்க் கொண்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய அரசின் அணுகுமுறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நேரடியானத் தாக்குதலைத் தவிர பொய் வழக்குகள் மூலம் பத்திரிக்கைகளின் குரல்வளையை நெரிக்க அரசு முயல்கிறது.
அரசு சகிப்புத் தன்மையற்ற விதத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவருவது கருணாநிதி அரசின் மக்கள் விரோத பாசிசத் தன்மையைத்தான் காட்டுகிறது.
சமீபத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டதோடு, வர்த்தகர்களும் தொழில் துறையினரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகச் செயல்படவேண்டாம் என மிரட்டப்பட்டனர்.
தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியின் கீழ் தமிழரின் நிலை வேதனைக்குறியது. இந்த ஆட்சிக்கு எதிரான எந்த ஒரு ஜனநாயக நடவடிக்கையையும் கருணாநிதி அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
நம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான விடாப்பிடியான போராட்டத்தை மேற்கொள்வது அவசியம்.
ஆகவே, புரட்சிகர ஜனநாயக இயக்கத்தை கட்டியமைக்க பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரள்வோம்:
« ஆங்கில இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்ப்போம்!
« தமிழ் ஆட்சிமொழி பயிற்றுமொழி ஆக்கிட போராடுவோம்!
« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!
« உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
செப்டம்பர் - 2010
No comments:
Post a Comment