அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! தேசபக்த ஜனநாயகவாதிகளே!!
மன்மோகன், சோனியா தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 16.07.2013 அன்று அந்நிய முதலீட்டிற்கான தடைகளை முழுவதுமாக அகற்றியுள்ளது. இதன்
மூலம் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி ஆதிக்கத்திற்கு
அகலக்கதவை திறந்துவிட்டுள்ளது.
இந்திய நாட்டின்
பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இராணுவத்
தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி
வழங்கியுள்ளது. அத்துடன் காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம்
திறந்துவிட்டு அந்நிய நிறுவனங்கள் நிதித்துறையை கொள்ளையடிப்பதற்கான வாசலை அகலத்
திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே வேளாண்மைத்துறை, சில்லறை
வணிகத்தில் திறந்துவிட்டதுடன் தற்போது பொருட்கள் பரிமாற்றம், மின்பரிவர்த்தனை போன்ற அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்குத்
திறந்துவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடிக்கு தோள்கொடுக்கும்
மன்மோகன் கும்பல்!
அதிகரித்துக்கொண்டே செல்லும்
அந்நிய செலாவணிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், வரலாறு
காணாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுத்து
நிறுத்தவும் அந்நிய முதலீட்டை முழுதுமாக அனுமதிப்பதுதான் ஒரே வழி என்று மன்மோகன்
கும்பல் வாதிடுகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு
செயல்படுத்திவரும் ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளைச் செயல்படுத்தி, அந்நிய முதலீட்டை படிப்படியாக அனுமதித்ததுதான் இன்றைய நெருக்கடிக்கு
காரணம் என்பதை அது மூடிமறைக்கிறது. அந்நிய மூலதனம் புகுந்த நாடும் ஆமை புகுந்த
வீடும் ஒன்றுதான் என்பதை மூன்றாம் உலக நாடுகளின் அனுபவம் காட்டுகிறது. மன்மோகன்
கும்பலோ அனுபவத்திலிருந்து பாடம் கற்க மறுத்து அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிடுகிறது.
இன்று உலகம் முழுவதும் ஒரு
கடுமையான பொருளாதார நெருக்கடி தொடருகின்ற சூழலில், மன்மோகன்
கும்பல் கூறுவது போல அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்குள் வருமா? அது உற்பத்தித் துறையில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்குமா
என்பது பற்றிப் பரிசீலிப்போம்.
அமெரிக்காவில் 2008ல் உருவான நிதிநெருக்கடி ஐரோப்பிய யூனியன், ஜப்பான்
என்று உலகம் முழுவதும் பரவி, மீள்வதற்கு வழிதெரியாமல்
பொருளாதார மந்தநிலைத் தொடர்கிறது. அண்மையில் ஐ.எம்.எப். வெளியிட்டுள்ள உலகப்
பொருளாதாரம் பற்றிய ஆய்வறிக்கை உலக அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தி 3.1 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று அபாயச் சங்கு ஊதியுள்ளது. அமெரிக்காவின்
ஒட்டுமொத்த உற்பத்தி 1.6 சதவீதமாகவும், 17 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பின் வளர்ச்சி 0.6 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந் துள்ளது. அமெரிக்காவின் வேலையின்மை 8 சதவீதமாகவும், வயது வந்தோர் 5ல்
4பேர் ஏழ்மையில் உழல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் “டெட்ராய்ட்” தொழில் நகரமே திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது.
இன்று உலகம்
சந்தித்துக்கொண்டிருக்கிற இந்த நெருக்கடி ஒரு மிகு உற்பத்தி நெருக்கடியாகும்.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள்
அனைத்திலும் உற்பத்தி வீழ்ச்சி, வேலையின்மை பெருக்கம்,
ஊதியக் குறைப்பு போன்றவற்றால் மக்களின் வாங்கும் சக்தி
குறைந்துவிட்டது. செல்வம் குவிவதும் வறுமை பெருகுவதுமான ஏற்றத்தாழ்வுகள்
பிரமாண்டமாய் வளர்ந்துள்ளது. பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள்
நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள்ளும்
அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. எனவே பொருட்கள் வாங்குவாரின்றி
தேங்கிக்கிடக்கின்றன. இத்தகைய சூழலில் அந்நிய முதலீடுகள் இந்தியா போன்ற நாடுகளில்
புதிய தொழில்களை தொடங்குவதற்கு வரவில்லை. மாறாக அந்நாடுகளில் திவாலான கம்பெனிகள்
இந்தியாவில் இருக்கிற தொழில்களை விழுங்குவதற்கே வருகின்றன. அதனால்தான் இந்தியாவைத்
திறந்துவிட நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்க அரசாங்கத்தை அந்நாட்டு முதலாளிகள்
நெருக்குகின்றனர்.
2010ஆம் ஆண்டு புது
தில்லியில் கூடிய இருநாட்டு நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்காவின்
முதலீட்டிற்கான தடைகளை இந்தியா முழுவதுமாக அகற்றவேண்டும் என்று அமெரிக்கா
வற்புறுத்தியது. நிதித்துறை மற்றும் கட்டமைப்புத் துறைகளில் உள்ளத் தடைகள்
அனைத்தையும் நீக்குமாறு நிர்ப்பந்தித்தது. சென்ற மாதம் அமெரிக்காவின் அரசுத்துறைச்
செயலர் ஜான்கெர்ரி மற்றும் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய வருகையின்
போதும் வர்த்தகம், சந்தை, நிதித்துறை,
பாதுகாப்புத்துறை மற்றும் அணுமின் துறைகள் அனைத்தையும் திறந்துவிட
வேண்டும் என்று கடுமையாக நிர்ப்பந்தித்தது. அதாவது இருதரப்பு பொருளாதார
ஒத்துழைப்பு எனும் பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்களது மூலதன ஏற்றுமதிக்கும்,
சந்தையை தங்களது கட்டுக்குள் கொண்டுவரவும், நாட்டின்
இயற்கை மற்றும் கனிமவளங்களை சூறையாடவும், அமெரிக்கா
இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் செலுத்திவருகிறது. இந்தியாவின் மீது தனது புதிய
காலனியாதிக்கத்தைத் திணிக்கிறது.
அமெரிக்க அடிவருடி மன்மோகனோ
அமெரிக்காவின் நெருக்கடிக்கு தோள்கொடுப்போம் என்று மானவெட்கமின்றி கூறுகிறார்.
நிதி அமைச்சர் சிதம்பரமோ அமெரிக்க முதலாளிகளுக்கு இந்தியாவை கொள்ளையிட 100 சதவீதம் பாதுகாப்பு வழங்குவோம் என்று அமெரிக்காவுக்கே சென்று
உத்திரவாதமளித்து வருந்தி வருந்தி அழைக்கிறார். இந்தப் புதியகாலனிய தாசர்கள்,
அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிட்டு அமெரிக்கவின் புதிய
காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்வதால் பெரும் ஆபத்து உருவாகிவருகிறது. மேகங்களின்
பெருவெடிப்பால் உத்தராஞ்சல் மாநிலம் பேரழிவுகளை சந்தித்தது போல இந்திய நாடு
பேரழிவுகளை சந்திப்பதோடு நாட்டின் பாதுகாப்புக்கும் பேராபத்தை உருவாக்கிவருகிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இந்தியாவின் பாதுகாப்பு
மற்றும் அலுவலக இரகசியங்களுக்கு மிகவும் இன்றியமையாதத் துறைகள்
தொலைத்தொடர்புத்துறை மற்றும் இராணுவத் தளவாடத் துறைகள் ஆகும். ஆனால் இந்த இரண்டுத்
துறைகளிலும் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம்
நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தை உருவாக்கியுள்ளது மன்மோகன் கும்பல். ஏற்கெனவே
இணையதளங்கள் மூலம் அமெரிக்கா இந்தியாவை உளவுபார்க்கிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் 150 இடங்களில் 700 இரகசிய சர்வர்களை நிறுவியுள்ளது.
அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய
சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறையை அந்நிய மூலதனத்திற்கு 100 சதவீதம் அனுமதிப்பது நாட்டின் இரகசியம் முழுவதும் அமெரிக்காவின்
கைகளுக்கு சென்றுவிடும். அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தைக்
கொண்டுவரும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில்
100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் பொதுத்துறை
நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். போன்ற
நிறுவனங்கள் அழிக்கப்பட்டு இனி இத்துறையில் ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளின்
ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கும். இத்துறையில் இலாபமாக பல லட்சங்கோடிகளை
சுருட்டிக்கொள்ளும். 2006-07ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல்.,
எம்.டி.என்.எல் இரண்டு நிறுவனங்களும் அரசுக்கு 10,000 கோடி இலாபமீட்டித் தந்தன. ஆனால் இத்துறையில் 74
சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதித்தப் பிறகு இன்று மொத்தம் ரூ. 2,50,000 கோடி நட்டம் என இந்நிறுவனங்கள் கணக்குக் காட்டுகின்றன. இத்துறையில்
ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகள் லாபமீட்டும்போது, அரசுத்துறை நிறுவனம் மட்டும் எப்படி நட்டத்தில் இயங்குகின்றன? நட்டத்தைக் காட்டி மூடுவிழா நடத்திடத் திட்டமா? அந்நியர்களிடம்
ஒப்படைப்பதற்கான சதியா? அவ்வாறு இந்நிறுவனங்கள்
மூடப்படுமானால் அவைகளில் பணிபுரியும் 2.5 லட்சம் தொழிலாளர்களின்
வாழ்க்கையும் அதோகதிதான்.
பொதுத்துறை நிறுவனங்கள்
மட்டுமல்லாது, இந்தியாவைச் சார்ந்த தரகுப்
பெருமுதலாளித்துவக் கம்பெனிகளும் பாதிக்கப்படும். தொலைத்தொடர்புத் துறையில் இந்திய
நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டுவந்த வோடோபோன், யூனினார்
போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இனி தனித்தே களமிறங்கும். அவைகளுடன் போட்டிபோட
முடியாமல் டாட்டா, ரிலையன்ஸ் போன்ற தரகுப் பெருமுதலாளித்துவ
நிறுவனங்களும் விரட்டியடிக்கப்படும். தொலைத்தொடர்புத் துறை முழுவதும்
அந்நியர்களின் வசம் சென்றுவிடும்.
பாதுகாப்புத் துறையில்
இராணுவத் தளவாட உற்பத்தியில் 29 சதவீதமும், சில பிரிவுகளில் 100 சதவீதமும் அந்நிய முதலீட்டை
அனுமதிப்பது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டிற்குள் பாதுகாப்புத்
துறையைக் கொண்டு செல்வதேயாகும். ஏற்கனவெ அமெரிக்காவுடனான அணுசக்தி-இராணுவ
ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இராணுவம் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான யுத்த
தந்திரங்களுக்கு சேவை செய்யும் ஒரு எடுபிடி இராணுவமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது
போர்க் கருவிகள், நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும்
உரிமையையும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதால் நாட்டின் பாதுகாப்பு அமெரிக்காவிடம்
ஒப்படைக்கப்படும். இவ்வாறு இந்தியா அமெரிக்காவின் புதிய காலனியாக முழுமையாக
மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கக் கம்பெனிகளின் வருகையால்
இத்துறையில் வேலை செய்யும் 2 லட்சம் தொழிலாளர்களின்
வாழ்வுரிமையும் பறிபோய்விடும். ஆனால் பாதுகாப்புத் துறையில் புதிய முதலீடுகளும்,
புதிய தொழில்நுட்பங்களும் அந்நிய முதலீடுகளால் கொண்டுவரப்படும்
என்றும், வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்குப்
பதிலாக உள்நாட்டிலேயே உற்பத்திச் செய்யலாம் என்றும் ‘சுதேசி’
நாடகம் ஆடுகிறார்கள். ஆயுதபேர ஊழலை தடுக்கலாம் என்றும்
கூறுகின்றனர். உண்மையில் திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்துவிட்டார்கள்.
காப்பீட்டுத்துறை கபளீகரம்
காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அமெரிக்காவின்
திவாலாகிப்போன நிதிநிறுவனங்களின் கோரப்பசிக்கு இந்தியாவின் காப்பீட்டுத் துறையை
பலியிடுவதாகும். இந்திய நாட்டின் நிதி வளத்தை சூறையாடுவதற்கு அமெரிக்க
முதலாளிகளுக்கு வாசலை திறந்துவிடுவதாகும். அமெரிக்க நாட்டு மக்களையே ஏமாற்றி
சூறையாடிய அந்த நிறுவனங்கள் இந்திய நாட்டு மக்களின் சேமிப்பில் உருவாகியுள்ள
எல்.ஐ.சி.யை விழுங்கிவிடும். இந்திய அரசுத் துறையில் ரூ. 5 கோடியில்
உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம், இன்று ரூ. 12 லட்சம் கோடி அளவிற்கு ஆலமரம் போல் தழைத்து வளர்ந்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம்
அரசாங்கத்திற்கு ஏராளமான இலாபத்தை ஈட்டித்தருகிறது. எல்.ஐ.சி.யானது கல்வி, தொழில், சுகாதாரம், குடிநீர்,
சாலைகள் அமைத்தல் போன்ற திட்டப்பணிகளுக்கும், சமூக
நலப் பணிகளுக்கும் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகிறது. இவ்வாறு அரசாங்கத்திற்கு
அட்சயப் பாத்திரமாகவும், நாட்டு மக்களுக்கு அமுத
சுரபியாகவும் சேவை செய்யும் பொதுத்துறை நிதிநிறுவனத்தை அந்நியர்களுக்கு
தாரைவார்ப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும்
மாபெரும் துரோகமாகும். எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களை நடுத்தெருவில்
நிறுத்துவதாகும்.
பொதுத்துறைகள் விற்பனை
மன்மோகன் கும்பல் வரவு
செலவுத் திட்டத்தில் நிதிப்பற்றாக் குறையை ஈடுகட்டுவது என்ற பேரில், இலாபத்தில் இயங்கிவரும் அரசாங்கத்திற்கு வருமானத்தை அள்ளி வழங்கும் “நவரத்னா” என்றழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின்
பங்குகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ
நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கிறது. என்.எல்.சி., பி.எச்.இ.எல்.,
கோல் இந்தியா, ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை - அரசு - தனியார்
பங்கேற்புத் திட்டத்தின் கீழ் (Public Private Participation) அடிமாட்டு விலைக்கு விற்றுவருகிறது. சென்ற நிதியாண்டில் ரூ.32,000 கோடிக்கு விற்பது என்ற முடிவை இவ்வாண்டு ரூ. 53,000
கோடியாக உயர்த்தியுள்ளனர்.
மின் உற்பத்தி, நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றத் துறைகள் அனைத்தும்
தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி.யின் பங்குகளை தமிழக அரசு
வாங்கிவிட்டதால் அந்த நிறுவனம் பாதுகாக்கப்பட்டு விட்டதாக நினைப்பது தவறு.
என்.எல்.சி. உள்ளிட்ட மின் திட்டங்களில் தனியார்மயம்
தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. 12வது ஐந்தாண்டுத்
திட்டத்தில் அரசுத் துறை மூலம் 33,000 மெகாவாட் மட்டுமே
தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் தனியார்துறையிலோ 42,000
மெகாவாட் தயாரிக்கப் போகிறார்கள். இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மலிவான
விலைக்கு விற்று பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்கு இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் திறந்துவிட்டுள்ளது மன்மோகன் கும்பல்.
வேளாண்மைத் துறையில் அந்நிய ஆதிக்கம்
மன்மோகன் கும்பல் இரண்டாம்
பசுமைப் புரட்சி என்ற பேரில் வேளாண்மைத் துறையைப் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும்
உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ குழும விவசாயத்துக்கு (Corporate
Agriculture)
கதவைத்
திறந்துவிட்டுள்ளது. நிலச் சீர்த்திருத்தச்
சட்டங்களை செல்லாக் காசாக்கிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக்குவியலுக்கு
வழிவகுத் துள்ளது. அரசு,
தனியார்துறை பங்கேற்பு (PPP) திட்டத்தின் மூலம்
ஒப்பந்த விவசாய முறையை திணிப்பது, வேளாண் பொருட்களின் சந்தைக்கான 65ஆம் ஆண்டுச் சட்டத்தை திருத்தி தனியாரை அனுமதிப்பது, காப்புரிமைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் வேளாண் உற்பத்தி, ஆராய்ச்சி, வணிகம் அனைத்திலும் பன்னாட்டுக்
கம்பெனிகளை அனுமதிக்கிறது. ஒப்பந்தமுறை விவசாயத்தின் மூலம் சிறு நடுத்தர
விவசயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு நிலத்தைவிட்டு விரட்டப்படுகின்றனர். ஏற்கெனவே 26 சதவீதம் பேர் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கைப் பெருகுகிறது. தற்போது
அந்த எண்ணிக்கை பெருகுகிறது.
இந்தியாவின் 17 மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட கார்ப்பரேட்
நிறுவனங்கள் வேளாண்மைத் துறையில் நுழைந்துள்ளன. கார்கில், மான்சாண்டோ,
வால்மார்ட் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளும், ரிலையன்ஸ்,
டாட்டா கெமிக்கல், எஸ்ஸார், அடானி, ஐ.டி.சி, கோத்ரேஜ்
போன்ற இந்திய கார்ப்பரேட்டுகள் வேளாண்மைத் துறையில் ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிறுவனங்கள் புகையிலை, சூரியகாந்தி, காய்கனிகள், பால் பொருட்கள், கால்நடைகள்,
கோழிப் பண்ணை, மீன்பிடிப்பு போன்ற பணப் பயிர்
உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் உணவுத் தானிய உற்பத்தி வீழ்ச்சியைடந்து
வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயிகளை ஒட்டச்
சுரண்டுகின்றனர். ஒப்பந்த விவசாயம் என்றாலே “இலாபம்
கார்ப்பரேட்டுகளுக்கு, நட்டம் விவசாயிகளுக்கு” என விவசாயம் நலிவடைந்து விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தின் ஆணைகளை ஏற்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய
வேளாண்மைச் சந்தையை திறந்துவிட்டதால் இந்திய விவசாயிகள் போட்டிபோட முடியாமல்
தவிக்கிறார்கள். இந்திய விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிவந்த மானியத்தை வெட்டுவது,
அரசு கடன் குறைப்பது போன்ற நடவடிக்கை களால் விவசாய இடுபொருட்களின்
விளைபொருட்களின் விலை உயர்ந்து போகிறது. மறுபுறம் ஏகாதிபத்திய நாடுகளில் மானியம்
பெற்று, மலிவான விலையில் இந்தியச் சந்தையில் கொட்டிக்
குவிப்பதற்கானத் தடைகளும், கட்டுப்பாடுகளும் பன்னாட்டுக்
கம்பெனிகளுக்கு அகற்றப்பட்டுவிட்டது. இதன் விளைவாக விளைப்பொருட்களின் விலை
வீழ்ச்சியடைந்து விட்டது. எனவே இந்திய விவசாயிகள் போட்டிபோட முடியாமல் நட்டம்
அடைகின்றனர். விவசாயிகளின் கடன் தொல்லை அதிகரித்து தற்கொலை செய்துகொள்வது
தொடர்கிறது நாடு முழுவதும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலையால்
மாண்டுவிட்டனர், தற்கொலைகள் தொடர்கின்றன. மேலும் தற்போது
மன்மோகன் கும்பல் தேசிய நதிநீர்க் கொள்கையை அறிவித்து ஆறு, குளங்கள்
அனைத்தையும் அந்நியர்களிடம் ஒப்படைக்கிறது. குடிநீருடன், பாசனத்துக்கான
நீரையும் இனி விவசாயிகள் விலைகொடுத்து வாங்கவேண்டும். இதன் மூலம் இந்திய
விவசாயிகளுக்கு சமாதிகட்டும் வேலையை தொடங்கிவிட்டது. மன்மோகன் கும்பல்
செயல்படுத்திவரும் புதிய காலனிய வேளாண் கொள்கை விவசாயிகளுக்கு கொடுத்தப் பரிசு
இதுதான்.
சில்லரை வணிகத்தில் அந்நிய
முதலீட்டை அனுமதித்து மன்மோகன் கும்பல் வணிகர்களின் வாழ்வையும் சீரழிக்கிறது.
ஏற்கனவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை அனுமதிக்கும் போது
விதிக்கப்பட்டிருந்தக் கட்டுப்பாடுகளையும் தற்போது அகற்றிவிட்டது. இந்நிறுவனங்கள் 30 சதவீதம் பொருட்களை இந்தியாவில் கொள்முதல் செய்யவேண்டும், மொத்த முதலீட்டில் 30 சதவீதம் கட்டமைப்பு வசதிகளில்
முதலீடு செய்யவேண்டும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்
தொகை உள்ள நகரங்களில் மட்டுமே திறக்கவேண்டும் என்றக் கட்டுப்பாடுகளையும்
நீக்கிவிட்டது. இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கும், சிறுதொழில்
நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு என்று சொன்னதும் அகற்றப்பட்டுவிட்டது.
அந்நியர்களுக்கு கதவு அகலத் திறந்துவிடப்பட்டுவிட்டது. எனவே சில்லரை வணிகத்தில்
அந்நிய கம்பெனிகளின் வருகையால் 4 கோடி வணிகக் குடும்பங்கள்
வாழ்வுரிமை இழப்பது மட்டுமின்றி, கோடிக்கணக்கான விவசாயிகள்
மற்றும் சிறுதொழில் புரிவோரின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுவிடும். இனி
விவசாயிகளைப் போலவே வணிகர்கள், சிறு முதலாளிகளின் தற்கொலைகள்
அதிகரிக்கும்.
வறுமை ஒழிப்புத் திட்டங்களும் காவுகொடுக்கப்படுகிறது
சாமான்ய மக்களின் ஆட்சி என்று
பதவிக்கு வந்த சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சி சாமன்ய மக்களின் முதுகெலும்பை
உடைக்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்று கூறி பெட்ரோல்,
டீசல், இயற்கை எரிவாயு போன்ற பொருட்களின்
விலைகளையும் அத்யாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தி சாமன்ய மக்கள் மீது
நெருக்கடியின் சுமைகளை சுமத்துகிறது. கல்வி, மருத்துவம்,
சுகாதாரம் போன்றத் துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி
நடுத்தர மற்றும் ஏழைகள் மீது சுமைகளை மென்மேலும் திணிக்கிறது. மறுபுறம் பன்னாட்டு
முதலாளிகளுக்கும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளி களுக்கும்
நட்ட ஈடு, ஊக்கத்தொகை என்று ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது.
உங்கள் பணம் உங்கள் கையில்
என்று கூறிக்கொண்டே நியாய விலைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தத் துடிக்கிறது.
ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் சட்டம் பற்றி உச்சரித்துக்கொண்டே, ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்கும் வஞ்சகத்தை அரங்கேற்றுகிறது. ஒருவருடைய
வருமானம் கிராமப்புறத்தில் 27.20 ஆகவும், நகர்புறத்தில் 33.30 ஆகவும் இருந்தால் அவன்
பணக்காரன் என்றும், அவர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும்
கிடைக்காது என்றும் திட்டக் கமிஷன் கூறுகிறது. தற்போது மத்திய அரசு கொண்டுவரும்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகம் போன்ற மாநிலங்களில், அனைவருக்கும்
நியாய விலைக் கடைகளின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள் வழங்குவதைத்
தடைசெய்கிறது. இதனால் தமிழகத்திற்கு 1 லட்சம் டன் உணவு
தானியம் குறைக்கப்படும். அது ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இவ்வாறு சாமான்ய
மக்களின் ஆட்சி எனும் பேரில் “ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாய்
ஏழைகளையே ஒழித்துவிடும்” திட்டத்தை மன்மோகன் சோனியா கும்பல்
செயல்படுத்துகிறது.
இவ்வாறு சோனியா, மன்மோகன் தலைமையிலான மத்திய ஐ.மு. கூட்டணி ஆட்சி அந்நிய முதலீட்டுக்கானத்
தடைகளை முழுவதும் அகற்றி ஏகாதிபத்திய நெருக்கடியை நாட்டுமக்கள் மீது திணிப்பதும்,
நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாக மாற்றி நாட்டின்
பாதுகாப்புக்கே உலைவைப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மன்மோகன்
கும்பல் ஆட்சி நாட்டைக் காட்டிக்கொடுத்து ஊழல் புரிவதில் எட்டப்பக் கும்பலையும்
விஞ்சிவிட்டது. ஊழலின் உலகமகா சக்கரவர்த்தியாக மன்மோகன் திகழ்கிறார். ஊழலால் பல
லட்சம் கோடி ரூபாய்கள் சுருட்டப்பட்டு அயல் நாடுகளில் பதுக்கப் பட்டுள்ளது. அதனால்
நாட்டின் கஜானா காலியாகிறது. புதிய காலனிய சேவைக்கு அவர்களுக்கோ பல லட்சம் கோடிகள்
சன்மானங்கள். ஆனால் மக்களுக்கோ வறுமை, வேலையின்மை, பட்டினிச்சாவு மற்றும் தற்கொலைகள் பரிசாகக் கிடைக்கின்றன.
மன்மோகன் கும்பலின் தேசத்
துரோக ஆட்சியை எதிர்த்துப் போராடுபவர்கள் மீதும், ஒடுக்கப்படும்
தேசிய இனங்களின் மீதும் பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது மன்மோகன்
கும்பல். அத்துடன் தனது மக்கள் விரோத செயல்களால் அம்பலப்பட்டுப்போய் உள்ள மன்மோகன்
கும்பல் தெலுங்கானாவை உடைப்பதன் மூலம், மொழிவாரி
அடிப்படையிலான பல மாநிலங்களை உடைப்பதன் மூலம் மக்களைப் பிளவுப்படுத்தி தம்
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அத்துடன் மொழிவார் மாநிலங்களை
உடைத்து சிறுசிறு மாநிலங்களாக பிரிப்பதன் முலம், ஏகாதிபத்தியவாதிகளின்
ஆதிக்கத்திற்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
தாரைவார்ப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுகிறது. எனவே தேசத்துரோக, மக்கள் விரோத சோனியா மன்மோகன் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறிவது இந்திய
மக்களின் உடனடித் தேவையாக மாறிவிட்டது.
ஆனால் நாடாளுமன்றவாத
எதிர்க்கட்சிகள் எதனிடமும் மன்மோகன் கும்பலுக்கு எதிரான மாற்றுக்கொள்கை இல்லை.
அந்நிய முதலீட்டை நாட்டிற்குள் அனுமதிப்பதில் எந்த அளவுக்கு, எந்தெந்தத் துறையில் என்பதில் மட்டும்தான் பா.ஜ.க. கருத்து மாறுபடுவதாகக்
கூறுகிறது. உண்மையில் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதில் அது
காங்கிரஸ் கட்சியுடன் போட்டிபோடுகிறது. இடது, வலது போலிக்
கம்யூனிஸ்டுக் கட்சிகள், தி.மு.க., அ.தி.மு.க
போன்ற மாநில அளவிலான தரகுமுதலாளித்துவக் கட்சிகளிடமும் ஒரு மாற்றுக் கொள்கை இல்லை
பொதுத்துறையை தனியார் மயமாவதை எதிர்த்தாலும் இக்கட்சிகள் எதுவும் அந்நிய மூலதனத்தை
பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்பதை ஏற்பதில்லை. மாறாக இக்கட்சிகள்
ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது அந்நிய முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளையே
செயல்படுத்துகின்றன.
நாட்டின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலை உருவாக்கும் தொலைதொடர்புத்துறை, பாதுகாப்புத்
துறைகளையும், நிதித்துறைகளையும் மன்மோகன் அந்நிய
முதலீட்டிற்கு முழுவதுமாக திறந்துவிடுவதை எதிர்த்தும் பொதுத்துறைகளை தனியாரிடம்
தாரைவார்ப்பதை எதிர்த்தும் அனைத்து உழைக்கும் மக்களும், தேசபக்த
ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.
அதற்கு அனைவரும் ஒன்றுபடுவது உடனடி அவசியமாகும். மேலும் நாட்டை அமெரிக்காவின்
புதியகாலனியாக மாற்றிவரும் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை
ஒழித்துக்கட்டி, அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி மற்றும் அரசியல் பொருளாதர ஒப்பந்தங்களை இரத்துச் செய்து நாட்டை
முழுமையாக விடுதலை செய்கின்ற புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் இவை அனைத்திற்கும்
முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அனைத்து மக்களும் உணரவேண்டும்.
எனவேதான் அந்நிய
மூலதனத்திற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும், தேசபக்த
ஜனநாயக சக்திகளும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு அறைகூவி
அழைக்கிறோம்.
தேசத் துரோக
மன்மோகன் சோனியா அரசே!
« அந்நிய
முதலீட்டிற்கு அனைத்துத் துறைகளையும் திறந்துவிடும் திட்டங்களைத் திரும்பப் பெறு!
« உலகமுதலாளித்துவ
நெருக்கடியின் சுமைகளை
இந்திய மக்கள்
மீது சுமத்துவதை முறியடிப்போம்!
« அந்நிய
மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக்கும் முயற்சிகளை
முறியடிப்போம்!
« மன்மோகன்
சோனியா துரோக ஆட்சியைத் தூக்கியெறிய
புரட்சிகர, ஜனநாயக
சக்திகள் ஒன்றுபடுவோம்!
மக்கள்
ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர்
2013
No comments:
Post a Comment